எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொல்கத்தா, ஜூலை 22 மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியை இந்தியாவிலிருந்து வெளியேற்ற எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றி ணைய வேண்டும் என்று மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில்  மம்தா பானர்ஜி பேசியதாவது:

'பாஜகவை வெளியேற்றுவோம்' என்ற பெயரில் ஆகஸ்ட் 9-ஆம் தேதி முதல் திரிணமூல் போராடத் தொடங்கும். பாஜகவை இந்தியாவிலிருந்து நிச்சயமாக வெளியேற்றுவோம். இதை சவாலாக எடுத்துக் கொண்டிருக்கிறோம்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளராக போட்டியிட்ட மீரா குமாருக்கு திரிணமூல் காங்கிரஸ் உள்பட அனைத்து எதிர்க் கட்சிகளும் ஆதரவளிக்க முன்வந்தன.

இதேபோல், 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலிலும் எதிர்க் கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து பாஜகவை தோற்கடிக்க வேண்டும்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத், அய்க்கிய ஜனதா தளம் தலைவர் நிதீஷ் குமார், டில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் என யாரெல்லாம் பாஜகவை எதிர்க் கிறார்களோ அவர்கள் அனைவருக்கும் திரிணமூல் காங்கிரஸ் ஆதரவளிக்கும். பாஜக அரசு அண்டை நாடுகளுடன் நல்லுறவை பேணுவதில் தோல்வி அடைந்து விட்டது. பூடான், வங்கதேசம், நேபாளம் போன்ற அண்டை நாடுகளுடனான நல்லுறவை மத்திய அரசு ஏன் மேம்படுத்தவில்லை?

ஜிஎஸ்டி அமலாக்கம், ரூபாய் நோட்டு திரும்பப் பெற்ற நடவடிக்கை ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களுக்கு எதிராக சிபிஅய், அமலாக்கத் துறை ஆகிய மத்திய புலனாய்வு அமைப்புகளை மத்திய அரசு ஏவி விடுகிறது.

அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட காலக் கட்டத்தைக் காட்டிலும் தற்போது நாட்டில் நிலைமை படுமோசமாக உள்ளது.
மோடி அரசுக்கு எதிராக செயல்படும் எதிர்க் கட்சிகளும், ஊடகங்களும் ஒடுக்கப்படுகின்றன என்றார் அவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner