எழுத்துரு அளவு Larger Font Smaller Font

துணைநிலை ஆளுநரைப் பயன்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்குத் தொல்லைகள் கொடுப்பதா?


புதுச்சேரி மாநிலத்தில் துணைநிலை ஆளுநரைப் பயன்படுத்தி, மத்திய பிஜேபி ஆட்சி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்குத் தொடர்ந்து தொல்லைகளைக் கொடுத்து வருகிறது. இதற்கு ஒரே வழி புதுச்சேரி மாநிலத்துக்கு மாநில அந்தஸ்து பெறுவதே என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். புரட்சிக் கவிஞர் பிறந்த புதுவை மண்ணிலே காவிகள் காலூன்ற இடம் அளிக்கக் கூடாது புதுவை மக்கள் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அறிக்கை வருமாறு:

பிரதமர் மோடி தலைமையில் கடந்த மூன்றாண்டுகளாக நடைபெறும் ஆட்சியில், மாநில ஆளுநர்களே - 'வேலியே பயிரை மேய்வதுபோல', மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசுகளைக் கலைப்பது, கவிழ்ப்பது போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள கடமைகளைக் காற்றில் பறக்க விட்டுக் கொண்டு வருகின்றது.

மாநில ஆட்சிகளைக் கலைப்பதா?
எடுத்துக்காட்டாக,
முன்பு, அருணாச்சலப்பிரதேசம், உத்திர காண்ட் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் அங்கே நடைபெற்ற ஆட்சிகள் (காங்கிரஸ்)  கலைக்கப்பட்டன! இச்செயலை உச்சநீதிமன்றம் வன்மையாகக் கண்டித்தது நாடறிந்த செய்தியாகும்.

எதிர்க்கட்சி வசம் (ஆம் ஆத்மி கட்சி வசம்) இருக்கிறது என்பதால், டில்லியில் அவ்வாட்சியின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடப் படுகிறது - அங்குள்ள துணை நிலை ஆளுநர் மூலமாக!

கோவா, மணிப்பூர் - மாநிலங்களில் எக்கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை நடைபெற்ற தேர்தல்களில்.
எவை எண்ணிக்கையில் பெரிய கட்சிகளோ அவைகளை அழைத்து ஆட்சி அமைக்கக் கேட்டுக் கொள்வதே, ஆளுநர்கள் கடைப்பிடித்த முறை;  ஆனால் இவ்விரண்டு மாநிலங்களில் (துணை நிலை) ஆளுநர்களின் துணை கொண்டு, அதிக எண்ணிக்கை கொண்ட காங்கிரஸ் கட்சியை அழைக்காமல், பா.ஜ.க.வையே (அதன் உறுப்பினர்கள் குறைவாக இருந்த போதிலும்) ஆட்சி அமைக்க அழைத்து, கட்சித் தாவலை மறைமுகமாக ஊக்குவித்து, ஆட்சியை பா.ஜ.க. பறித்துக் கொண்டு விட்டது.

சுமுக உறவு வேண்டாமா?

கேரளா, திரிபுரா போன்ற மாநிலங்களில் இடதுசாரி அரசுகளுக்கு எவ்வளவு நெருக்கடி களைக் கொடுத்து வர முடியுமோ அதை லாவக மாகவே செய்து வருகின்றனர்.

மம்தாவின் மேற்கு வங்க மாநிலத்திலும் ஆளுநர் தன்னை மிரட்டியதாக அவர் அறிக்கை விடவில்லையா?

மாநில ஆளுநருக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளுக்கும் இடையே சுமுக உறவு தானே இருக்க வேண்டும்.


ஆனால் பா.ஜ.க ஆட்சியில் இது தலைகீழாக அல்லவா உள்ளது. இது எவ்வளவு வேதனை, வெட்கக் கேடு!
தமிழ்நாட்டின் நிலைமை என்ன?

தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத ஆளுநர் ஆட்சி - அதுவும் இதற்கு முன் எப்பொழுதும் நடந்திராத அளவுக்கு ஏறத்தாழ 10 மாதங்களாக தனி ஆளுநனரே நியமிக்கப்படாமல், மகராஷ்டிர மாநில ஆளுநர் தமிழ்நாட்டிற்குக் கூடுதல் பொறுப்பு ஆளுநராகத் (Governer in charge - additional charge)  தொடருவது எவ்வகையில் ஏற்கத்தக்கது?

முக்கிய அரசியல் நெருக்கடிகள் தமிழ்நாட்டு அரசியலில் ஏற்பட்ட போதுகூட, இங்கே நிலைமையைத் துல்லியமாகக் கண்காணித்து மத்திய அரசுக்குக் கூற ஆளுநர் இங்கே இல்லை; தமிழ்நாட்டு மக்கள் பிரதிநிதிகள் ஆளுநரிடம் தங்கள் குறைகளை முறையிட வாய்ப்போ, கிடைக்காமல் இரண்டொரு தடவை மும்பைக்குப் பறந்து சென்று திரும்பும் அவலம் அல்லவா நிலவுகிறது!

தமிழ்நாட்டு ஆளுநர் பல்கலைக் கழகத் துணைவேந்தர் பதவிக்கு நேர்காணலை அவரே நடத்துகிறார்; பக்கத்தில் உயர் கல்வி அமைச்சர் பார்வையாளராக அல்லது உதவியாளர் போலவே அமர்ந்திருப்பது - பிறகு ஆணை பிறப்பிப்பது முன்பு எப்போதாவது மாநிலத்தில் நடந்ததுண்டா?
யார் இந்த கிரேண்பேடி?

புதுவையில் டில்லி பிரதேசத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியிலிருந்து மாறிய ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரியான கிரேண்பேடியை பா.ஜக. நிற்க வைத்து அவர் தோல்வியுற்ற நிலையில், அவரைப் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பொறுப்பேற்கச் செய்தது மத்திய பிஜேபி அரசு.
வந்த நாள் முதல் இந்த நாள் வரை இவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் - திமுக கூட்டணி கட்சியின் முதலமைச்சர் நாராயணசாமி அவர்களுடைய ஆட்சிக்குக் கொடுத்து வரும்  தொல்லைகள் கொஞ்ச நஞ்சமல்ல.

ஓராண்டும் சில மாதங்கள் ஆகியுள்ள நிலை யில், அதற்கு எதிராகவே ஒரு போட்டி அரசாங்கம் (Parallel Government)
நடத்துவதுபோல ஆணைகளைப் பிறப்பித்து, ஜனநாயகத்தை கேலிக் கூத்தாக்கி  வருவது எவ்வகையில் சரியானது?

அம்மாநில துணை நிலை ஆளுநருக்கும், முதல் அமைச்சருக்கும் சுமூக அரசியல் உறவு இருப்பதின் மூலமே மக்கள் விரும்பும் நல்லாட்சியைத் தர முடியும்.

ஆனால் நடப்பது என்ன? அதிகாரிகளுக்குத் தர்ம சங்கடம்; இக்கட்டான நிலை! அவர்கள் "இருதலைக் கொள்ளி எறும்பு போல்" தவிக்கின்ற நிலை - தேவை தானா? நியாயம் தானா?

மூன்று நியமன உறுப்பினர்களை
தன்னிச்சையாக நியமிப்பதா?

சட்டமன்றத்திற்கு மூன்று நியமன உறுப் பினர்களை முதல் அமைச்சருக்கே தெளியாமல், அதுவும் தேர்தலில் நின்று மக்களால் தோற்கடிக்கப்பட்ட மூன்று பிஜேபிகாரர்களை நியமிப்பது பச்சை ஜனநாயக விரோத செயல் அல்லவா?

அரசின் ஒத்துழைப்போ, கலந்து ஆலோசிப்போ இன்றி துணை நிலை ஆளுநர் மூவரை நியமிப்பது, பதவிப் பிரமாணம் செய்து வைப்பது எவ்வகையில் ஜனநாயக மாண்பு ஆகும்?

மத்திய அரசு குறுக்கு வழிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிகளை இப்படிக் அலைக்கழிப்பது, அதிகார பறிப்புக்கு உள்ளாக்குவது, அரசமைப்புச் சட்ட விரோதப் போக்கு - அதன் பீடிகையில் உள்ள ஜனநாயகக் குடியரசுத் தத்துவத்துக்கு(Democratic Republic)  முரண்பாடுதானே! புதுவைக்குத் தேவை மாநில அந்தஸ்து!

எனவே புதுவைக்கு மாநில அந்தஸ்து (State hood) வழங்குவதற்குரிய போராட்டத்தை அம்மக்கள் முன்னெடுப்பதைத் தவிர வேறு வழியில்லை.

ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும்.  இதில் கட்சி, ஜாதி, மதம் இல்லை - நியாயங்கள் நீதி மட்டுமே உண்டு!

புதுவை மக்களே,  காவி மண்ணை புரட்சிக் கவிஞர் பிறந்த பூமியில் தூவ அனுமதிக்காதீர்! ஜனநாயகம் காக்கப்பட  ஒன்று திரண்டு உரிமைக் குரல் எழுப்புங்கள்!

சென்னை      தலைவர்
13-7-2017       திராவிடர் கழகம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner