எழுத்துரு அளவு Larger Font Smaller Font


சென்னை, ஜூலை 26-
ஜெர்மனியில் ஜூலை 27,28,29 ஆகிய நாள்களில் கொலோன் பல்கலைக்கழகத்தில் சுயமரியாதை இயக்கத்தின் 91ஆம் ஆண்டு நிறைவு விழா, பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாட்டிற்கு தமிழகத் தலைவர்கள் அளித்துள்ள வாழ்த்துகள் வருமாறு:-

வைகோ வாழ்த்து (மதிமுக)

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1932 ஆம் ஆண்டில் அய்ரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட தந்தை பெரியார் அவர்கள், 17.05.1932 இரவு 7.30 மணிக்கு மாஸ்கோவில் இருந்து இரயில் மூலம் ஜெர்மனிக்குப் புறப்பட்டு, 19.05.1932 அன்று காலை 9.30 மணிக்கு பெர்லின் நகரை அடைந்தார். 14.06.1932 வரை அங்கேயே தங்கி, ஜெர்மனி முழுவதிலும் பயணம் செய்து பல்வேறு மக்களையும், தலைவர்களையும் சந்தித்து அவர்களின் கலை, பண்பாடு குறித்து அறிந்துகொண்டார்.

அத்தகைய பெருமைக்கு உரிய ஜெர்மனியில் கொலோன் பல்கலைக் கழக வளாகத்தில் இந்த மாதம் 27, 28, 29 ஆகிய நாட்களில் சுயமரியாதை இயக்கத்தின் 91 ஆம் ஆண்டு நிறைவு விழாவினை பெரியார் பன்னாட்டு மய்யத்தின் ஜெர்மனி கிளை நடத்துகின்றது.
தந்தை பெரியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம், பெரியாரின் கடவுளும் மனிதனும் என்னும் நூல்கள் ஜெர்மனி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு, மாநாட்டின் தொடக்க விழாவில் வெளியிடப்பட உள்ளது. பெரியாரின்  ஆங்கில ஏட்டில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு, பெரியாரின் நினைவிடம், கல்வெட்டு, பொன்மொழிகள் ஆகிய ஆங்கில நூல்களும் பெரியார் சுயமரியாதை எனும் ஆங்கில நூலும் இதே நிகழ்வில் வெளியிடப்பட உள்ளன. பெரியார் திரைப்படமும் ஒளிபரப்பாகின்றது. மூன்று நாட்கள் நடைபெற உள்ள சிறப்புமிகு மாநாட்டில் அறிஞர் பெருமக்கள் பல்வேறு தலைப்புகளில் ஆய்வுக் கட்டுரைகளை அளிக்க உள்ளனர். சுயமரியாதை இயக்கம் குறித்து நடத்தப்பட்ட பன்னாட்டுக் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் விழாவில் பாராட்டி சிறப்பிக்கப்படுகின்றார்கள்.

கிராய்டன் மாநகராட்சியின் துணை மேயர் மைக்கேல் செல்வநாயகம் அவர்களுக்கு, மானமிகு கி.வீரமணி பெயரிலான சமூக நீதி விருது வழங்கப்பட உள்ளது.

பெரியார் பன்னாட்டு மய்யத்தின் ஜெர்மனி கிளையின் தலைவர் பேராசிரியர் டாக்டர் உல்ரிக் நிக்லசு, துணைத் தலைவர் ஸ்வன்வோர்மன், செயலாளர் கிளவுடியா வெப்பர் ஆகியோர் முன்னின்று மாநாட்டு நிகழ்ச் சிகளை நேர்த்தியாக ஏற்பாடு செய்து வருகின்றார்கள்.

தமிழகத்தில் இருந்து திராவிடர் கழகத்தின் 41 பேராளர்கள் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் சரித்திரச் சிறப்புமிக்க அந்த மாநாட்டில் கலந்துகொண்டு பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளை ஆய்வு செய்து உரையாற்றுகின்றார்கள் என்பது நமக்கு அளவு கடந்த மகிழ்ச்சியினை அளிக்கின்றது.

நூறாண்டுக்கால வரலாற்றுப் பின்னணியும், சிறப்பும் கொண்ட நம் திராவிடர் இயக்கத்தின் துவக்கமான சுயமரியாதை இயக்கத்தின் விழாவை அமெரிக்கா, பிரான்சு, இங்கிலாந்து முதலான நாடுகளின் பேராளர்கள் எல்லாம் ஜெர்மனியில் கூடிக்கொண்டாடுவதும், பெரியாரின் தனிச்சிறப்பை பன்னாட்டு பெருமக்களிடையே பரப்புவதும் நாம் அனைவரும் உவகையுடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வரவேற்கத்தக்கதாகும்.

தொண்டு செய்து பழுத்த பழம்
தூயதாடி மார்பில் விழும்
மண்டைச்சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்

என்று பாவேந்தர் பாரதிதாசன் பாராட்டிப் பாடினாரே, அத்தகைய சிறப்புமிகு நம் தந்தை பெரியாரின் உலகுதொழும் தத்துவங்களை உலக மயமாக்கும் உன்னதமான பணியில் ஈடுபட்டுள்ள திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அண்ணன் கி.வீரமணி அவர்களுக்கும், மாநாட்டில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் வாழ்த்துகளையும், பாராட்டு களையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

வில்லில் இருந்து புறப்பட்ட கணை எப்படி போய்ச் சேர வேண்டிய இலக்கை அடைந்துதான் நிற்குமோ, அதனைப்போலவே பெரியாரின் பெரும்பணியும் வெற்றியை ஈட்டும்வரை ஓயாது என்று முழக்கமிட்ட அறிஞர் பெருந்தகை அண் ணாவின் எண்ணத்திற்கு வலுசேர்க்கவும், வாகை சூடவும் உள்ள ஜெர்மனியின் சுயமரியாதை மாநாடு வெற்றிகளைக் குவித்திட மறுமலர்ச்சி தி.மு.கழகம் பாசமலர்களை, வாச மலர்களை தூவி வாழ்த்து கின்றது! பாராட்டி மகிழ்கின்றது!
இவ்வாறு கூறியுள்ளார்.

தொல்.திருமாவளவன் வாழ்த்து (வி.சி.க.)

'பெரியார் பன்னாட்டு மய்யத்தின்' சார்பில் ஜூலை 27,28, மற்றும் 29 ஆகிய மூன்று நாட்கள் ஜெர்மனியில் "பெரியார் சுயமரியாதை இயக்க மாநாடு" நடைபெறுவதை அறிந்து பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன்.

1932இல் பெரியார் பயணம் செய்து சுயமரியாதை சிந்தனைகளைப் பரப்பிய அதே ஜெர்மனி தேசத்தில், 85ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் சுயமரியாதை இயக்கத்தின் அனைத்துலக மாநாடு நடைபெறுவது, தந்தை பெரியாரின் கருத்தியல் வலிமைக்குக் கிடைத்த ஒரு மகத்தான வெற்றியாகும். அத்துடன், தந்தை பெரியாருக்குப் பின்னர் அவரது சிந்தனைகளையும், இயக்கத்தையும் கட்டிக்காப்பாற்றி, இன்று உலகளாவிய வகையில் வெற்றிகரமாக முன்னெடுத்துச் சென்றிருப்பது ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அளப்பரிய சாதனையாகும்.

ஜெர்மனி தேசத்தின் 'டோச்சு' மொழியில் இன்று பெரியாரின் சிந்தனைகள் மொழிபெயர்ப்புச் செய்யப்படுவதும் அய்ரோப்பியர்கள் உள்ளிட்ட பன்னாட்டவரிடையே சுயமரியாதை உணர்வுகளை ஊட்டுவதும் போற்றுதலுக்குரிய வரலாற்றுச் சாதனையாகும். இத்தகைய சாதனையை நிகழ்த்தியுள்ள தமிழர் தலைவர் ஆசிரியர்கி. வீரமணி அவர்களையும் இம்மாநாட்டுப் பணிகளை ஒருங்கிணைத்துள்ள பெரியார் இயக்கப் பன்னாட்டுப் பொறுப்பாளர்களையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மனமாரப் பாராட்டுகிறது. பாவேந்தரின் தொலைநோக்குப் பார்வையின்படி இன்று பெரியாரின் சிந்தனைகளை உலகமே போற்றுவது நம் ஒவ்வொருவருக்கும் பெருமை சேர்ப்பதாகும்.

புரட்சிகர மாற்றங்களைப் படைக்கும் உலகச் சிந்தனையாளர்களின்  வரிசையில், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரும் ஒளிவீசுகிறார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் நடைபெறும் இந்த பன்னாட்டு மாநாடு மகத்தான வெற்றி பெற விடுதலைச்சிறுத்தைகளின் சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு தொல்.திருமாவளவன் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

இரா.முத்தரசன் வாழ்த்து (சி.பி.அய்)

பெரியாரின் சுயமரியாதை இயக்கப் பணியின் தொடர்ச்சியாக உலக அளவில் பெரியாரின் கொள்கைகளை எடுத்துச்செல்ல ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழகத்தில் நடக்கும் மாநாட்டிற்கு எங்களது வாழ்த்துக்கள்.

பெரியார் துவக்கிவைத்த சுயமரியாதை இயக்கம், அவர் இவ்வியக்கத்தை துவக்கியதன் மிக முக்கிய காரணம் சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் நீங்கவேண்டும் என்பது தான், பெரியார் கண்ட இயக்கத்தினால் ஏற்பட்ட தாக்கத்தின் பலன் தமிழகம் மட்டுமல்ல; வட இந்தியா துவங்கி உலகம் முழுவதும் தற்போது தெரியவருகிறது. சமூக நீதிக்கான போராட்டத்தை உலகெங்கும் எடுத்துச்செல்லும் நோக்கில் உங்கள் பயணம் அமைந்துள்ளது.

ஜெர்மனியில் நடக்கவிருக்கும் பன்னாட்டு கருத்தரங்கம் மிக முக்கியமான ஒரு காலகட்டத்தில் நடக்கவிருக்கிறது. இன்று உலகமெங்கும் மக்கள் சுரண்டப்படுகின்றனர். மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்படுகின்றன. முக்கியமாக சமூகத்தின் அடித்தட்டு மக்கள் மிகவும் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகின்றனர்.

மிகவும் முக்கியத்துவம் மிகுந்த இந்த மாநாட்டில் பல்வேறு தலைசிறந்த தலைப்புகளில் கலந்துரையாடல் நடைபெற உள்ளது குறித்து மகிழ்ச்சியடைகிறோம். தற்போது உலகம் எதிர்கொள்ளும் சூழல் மற்றும் மிகவும் மோசமான முதலாளித்துவச் சுரண்டல்கள் போன்றவற்றை எதிர்க்கொண்டு அவற்றை முறியடிக்கும் வகையில் இம்மாநாடு இருக்கும் என்பதில் எங்களுக்கு அய்யமில்லை.  
தங்களைப் போன்ற அனுபவசாலிகள் இம்மாநாட்டை வழிநடத்திச்செல்வது குறித்து நாங்கள் மிகுந்த பெருமையடைகிறோம். உங்களின் சமூகப்பணிக்கான நடவடிக்கைக்கு எங்களது வாழ்த்துக்கள். மேலும் மாநாடு சீரும் சிறப்புடன் நடைபெற வாழ்த்துகிறோம்.

சமூக விழிப்புணர்வுடன் சமூகப் புரட்சியும் இந்த காலகட்டத்தில் தேவைப்படுகிறது, இந்த மாநாடு புதிய சமூகத்திற்கு புத்துயிர் ஊட்டும், உங்கள் பயணம் பாதுகாப்பகவும் இனிமையாகவும் இருக்க எங்களது வாழ்த்துக்கள்!


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner