எழுத்துரு அளவு Larger Font Smaller Font


நம் "பாரத புண்ணிய பூமியில்"  மூட நம்பிக்கை தொற்று நோய்களைப் போல மிக வேகமாகப் பரவுவன எவையும் அல்ல!

செங்கற்களை ஏற்றிச் செல்லும்  வண்டியிலிருந்து சாலையில் இரண்டு செங்கற்கள் விழுந்து விட்டால் அதைத் தூக்கி ஓரத்தில் வீசியெறிந்து விட்டுச் செல்லும் பகுத்தறிவுள்ள மனிதர்கள் வெகு வெகுக் குறைவு.

பின்னால் நடந்து வந்த பக்தி போதை ஏறிய 'அர்த்தமுள்ள ஹிந்துவாக' இருந்தால், உடனே அதனை அங்கே நட்டு அக்கற்களின் மீது குங்குமம், மஞ்சள் பூசி, ஏதாவது உடைந்த  'பேல்கட்டு' தகடு ஒன்றில் சூலம் அடித்து, நட்டு வைத்து விட்டு 'செங்கலீசுவரர்' என்று பெயரிட்டு  அழைத்தால் உடனே அங்கே செல்ல, முதலில் 100, பிறகு 1000, பின் 10 ஆயிரம் இப்படி பக்த கோடிகள் திரண்டு விடுவர். ஒரு உண்டியல் - பக்கத்திலே கொட்டகை  - அருகே வந்து சம்மன் இல்லாது ஆஜரான அர்ச்சகர் அல்லது பூசாரி (அதிலும் ஆரியர் - திராவிடர் இன அடையாளம் உண்டு).

அடுத்த கட்டம் அதன் பெருமை, செங்கலீசுவரரின் சக்தி, மகிமை பற்றிய 'ஸ்தல புராணங்கள்' தீட்டப்படும்!

இதைத் தடுக்க வேண்டுமென்று ஊர் நலக் காப்பாளர்கள், பஞ்சாயத்து முதல் கார்ப்பரேஷன் அதிகாரிகள், ரெவின்யூ அதிகாரிகள், காவல்துறையினர் உட்பட, அதனை அப்புறப்படுத்தாவிட்டால், பரவசப்பட்ட பக்த கோடிகளுக்கான இடமாகவே மாறி விடும் விசித்திரக் காட்சி உண்டு!

உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் வரை எத்தனையோ தீர்ப்புகள், நடைபாதைக் கோயில்களை அகற்றிடத் தந்தும் 'எந்த நடவடிக்கையும்' இல்லை!

நீதிமன்ற அவமதிப்புகூட இதற்கென தனி வேகத்தோடு செயல்படாத ஆமைத் தனம் அல்லது ஊமைத்தனம்; அதுதான் நம் நாட்டு துரைத்தனம்!

நேற்று கர்நாடகத்தில் திடீரென ஒரு புரளி - வதந்தி - "தாலிக் கயிற்றில்" ('மங்கள சூத்திரம்') பவழம் இணைத்திருந்தால், அதனால் கணவனுக்கு ஆகாதாம்; நோய் வருமாம்; ஆளே "காலி"யாகி விடுவானாம்! இப்படி ஒரு அச்சுறுத்தல் "குண்டைப்"போட்டவுடன் இதுவே வேகமாகப் பரவி விட்டது!

பல தாய்மார்கள் தங்கள் தாலியில் கோர்த்திருந்த பவழத்தை உடைத்து நொறுக்கிய பின்பே பெரு மூச்சு விட்டார்களாம்!
இதுபோன்ற மூடநம்பிக்கை 'சீசனுக்கு சீசன்' பலரால் கிளப்பி விடப்பட்டு தனி வியாபாரமாகவே செழிக்கிறது!
சில ஆண்டுகளுக்குமுன்பு திருப் பதியில் உள்ள பத்மாவதி தாயாரம்மாள் கழுத்தில் வெங்கடாசலபதியால்  - இல்லை இல்லை - உண்மையாக அங்குள்ள அர்ச்சகரால் - கட்டப்பட்ட தாலி திடீரென கீழே விழுந்து விட்டதாம்.

இது 'கெட்ட சகுனம்' மட்டுமல்ல; மாறாக, பல 'கட்டுக் கழுத்திகளுக்கு' அதாவது தாலி கட்டியுள்ள நம் பெண் களின் பதிகளுக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமாம்!

உடனே பழைய தாலிக் கயிற்றை எடுத்துப் போட்டு புதிய தாலிக் கயிற்றை கட்டிக் கொள்ள வேண்டும் என்று ஒரு வதந்தி - 'புருடா' கிளப்பி விடப்பட்டது.

உடனே தாலிக் கயிறு, மஞ்சள் எல்லாவற்றிக்கும் திடீரென்று 'கிராக்கி' நல்ல விலை - ஒரு கயிற்றுக்கு 200, 300, 500 ரூபாய் என்று வியாபாரம் 'கொட்டோ கொட்டுண்ணு' நடந்ததாம்!

அதுபோலவே காரைக்குடி பயிற்சி முகாமில்  தகவல் தெரிவித்த ஒரு மாணவர் அங்கே உள்ள வடுவூர் (மன்னார்குடி அருகே உள்ள வடுவூர் அல்ல) கிராமத்தில் பேய் பிசாசு, புரளி வெகுவாகப் பரப்பி கிராம மக்கள் பயத்தால் மிரண்டு போய் உள்ளதாகக் கூறினார்.

விரைவில் திராவிடர் கழகம் அங்கே சென்று மூடநம்பிக்கை ஒழிப்பு பகுத்தறிவுப் பிரச்சாரத்தைத் துவக்கும். பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழகம் ஆகியவற்றின் பொறுப்பாளர்கள் அந்த ஏற்பாட்டினைச் செய்ய வேண்டும்.

அறிவியல் மனப்பான்மை வளர்ப்பது ஒவ்வொரு குடி மகனின் அடிப்படைக் கடமை (Fundamental Duty Article 51A Constitution of India) கூறுகிறது. ஆனால் நடைமுறையில்....?

திராவிடர் கழகத்தைத் தவிர, பகுத்தறி வாளர்களைத் தவிர வேறு யார் இப்பணி செய்கின்றனர்!

உடல் நோய் தடுப்பை விட இந்த மனநோய், வதந்தி, மூடநம்பிக்கைகள் பெரும் ஆபத்தானவை. எளிதில் தீராத நோய் ஆகும். காற்றைவிட வேகமாகப் பரவும் எச்சரிக்கை.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner