எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, ஜூலை 27 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி நேற்று (26.7.2017) மாலை சென்னை பெரியார் திடலில் அமைந்திருக்கும் தந்தை பெரியார் சிலை முன்பு  திராவிடர் கழக மாணவரணி மற்றும் தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பினர் பெரும் திரளாகப் பங்கேற்று மெழுகுவத்திகள் ஏந்தி போராட்டத்தை நடத்தினர்.

மருத்துவப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கையில் தெளிவற்ற நிலை நீடிப்பதால் மாணவர்களும் பெற்றோர்களும் மிக அதிகமான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அரசின் இடங்கள் ஆகியவற்றிக்கான மாணவர் சேர்க்கை தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றம் ஒரு மனதாக நிறைவேற்றிய இரண்டு சட்ட மசோதாக்கள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக தமிழ்நாடு அரசு 18.2.2017 அன்று அனுப்பி வைத்தது.

அய்ந்து மாதங்கள் கடந்தும் இம்மசோதாக்கள் எந்த காரணத்திற்காக குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு மத்திய  அரசு அனுப்பாமல் இருக்கிறது என்பதை மத்திய பிஜேபி அரசு இதுவரை தெரிவிக்கவில்லை.

நாடாளுமன்றத்தின் துறைவாரியான (சுகாதாரம் மற்றும் குடும்ப  நலத் துறை) நிலைக்குழு தனது 92ஆவது அறிக்கையில், அகில இந்திய அளவில் நடைபெறும் மருத்துவ நுழைவுத் தேர்வில் பங்கேற்க விரும்பாத மாநிலங்களுக்கு விலக்களிக்க பரிந்துரைத்திருந்தது.

மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில சட்டமன்றங்களுக்கு உள்ள அதிகாரத்தை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது. இவ்வளவிற்குப் பிறகும் சட்ட சிக்கல் குறித்து ஆய்வு செய்து கொண்டிருப்பதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவிக்கிறார்.

தமிழ்நாடு அரசு இயற்றி அனுப்பிய மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பதில் என்ன சட்ட சிக்கல் உள்ளது என்பதை இதுவரை மாநில அரசோ, மத்திய அரசோ விளக்கவில்லை. நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத் தொடரிலும் தமிழ்நாடு அரசு என்ன சிக்கல் அல்லது என்ன தடையுற்றது என விளக்கவில்லை. நடைபெற்றுக் கொண்டிருக்கும் நாடாளுமன்றக் கூட்டத்திலும் இதுகுறித்து எந்த விளக்கத்தையும் மத்திய அரசு அளிக்கவில்லை.

சட்டமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்

'நீட்' வேண்டாம் என்ற தமிழ்நாட்டின் ஒருமித்த குரலுக்கு மதிப்பளிக்காத மத்திய அரசின் போக்கு கண்டனத்திற்குரியது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெற நடவடிக்கை மேற்கொள்ளாமல் ஓராண்டு, ஈராண்டு விலக்கிற்காக சட்ட ஆலோசனை என்ற செய்திகள் உண்மை என்றால், அத்தகைய நடவடிக்கை சட்ட மன்றத்தை அவ மதிக்கும் செயலாகும்.

இந்திய அரசமைப்பின் அடிப்படைக் கூறுகளான கூட்டாட்சித் தத்துவத்திற்கும், மக்களாட்சி மாண்பிற்கும் மதிப்பளித்து, மாணவர்கள் நலன் கருதி உடனடியாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தர மத்திய அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பெரியார் சிலை முன்பு

இதை வலியுறுத்தி நேற்று (26.7.2017) மாலை சென்னை பெரியார் திடலில் அமைந்திருக்கும் தந்தை பெரியார் சிலை முன்பு திராவிடர் கழக மாணவரணியினர் மற்றும் தமிழ்நாடு மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பினர் பெருந்திரளாகப் பங்கேற்று மெழுகுவர்த்திகள் ஏந்தி 'நீட்' தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி ஒலி முழக்கங்களை எழுப்பினர்.

இப்போராட்டத்தில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்

வீ. அன்புராஜ், சென்னை மண்டலச் செயலாளர் வி. பன்னீர்செல்வம், பொது பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இளையராஜா, பிரபாகரன், திருநங்கை, கிரேஸ்பானு, மருத்துவர் எழிலன், வடசென்னை மகளிரணி செயலாளர் ச.இ.இன்பக்கனி, சென்னை மண்டல  மாணவரணி செயலாளர் பா. மணியம்மை,  சுமதி கணேசன், மரகதமணி, சீர்த்தி, கலைமதி, மாணவரணி நா.பார்த்திபன், தமிழ்சாக்ரட்டீஸ், தே.ஒளிவண்ணன், கோவி. கோபால், மருது, சத்தியப்பிரியா, சு.அன்புசெல்வன், சிற்றரசு உள்பட பலர் கலந்துகொண்டனர். பெரியார் திடலில் பணிபுரியும் அனைத்து துறை பணியாளர்களும் பங்கேற்றனர்.  நிறைவாக மருத்துவ மாணவர் சேர்க்கையில் தமிழகத்திற்கு முழு விலக்கு கிடைக்கும் வரை  மாணவர் போராட்டம் தொடரும் என இப்போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் இளையராஜா தெரிவித்தார்.

மாணவர் இந்தியா, தமிழ்நாடு மாணவர் முன்னணி,  பல்வேறு மாணவர் அமைப்பினர், தமிழக மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பினர்  ஒன்றிணைந்து நீட் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner