எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மாநாட்டு ஆய்வரங்கில் ஆழமான ஆய்வுரையாற்றிய ஆராய்ச்சி மாணவி டாக்டர் சிர்.உன்ரா அவர்களுக்கு பெரியார் மணியம்மை

பல்கலைக் கழக வேந்தர் கி. வீரமணி அவர்கள் பெரியார் புத்தகங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

கொலோன், ஜூலை 29 பெரியார் சுயமரியாதை தத்துவம் மற்றும் இயக்கம் பற்றிய ஆய்வுக் கட்டுரை அரங்க நிகழ்வுகள் பன்னாட்டு மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகளாக சிறப்பாக நடைபெற்றன.

முதல் ஆய்வரங்கின் தலைவரான தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி ஆய்வரங்க கட்டுரைகள் பற்றிய செய்திகளுடன் சுயமரியாதை இயக்க வரலாற்றுப் பதிவுகளைப் பற்றிய ஓர் ஆய்வுரையினை தொடக்கத்தில் வழங்கினார்.

பின்னர் சென்னை பல்கலைக் கழகத்தின் வரலாற்றுத் துறைத் தலைவரான பேராசிரியர் முனைவர் எஸ்.எஸ்.சுந்தரம் "சுயமரியாதை : சமூக மற்றும் மனித விடுதலைக்கான சிறந்த தனித்துவக் கருவி ஒரு வரலாற்று ஆய்வு" எனும் தலைப்பில் தனது ஆய்வுக் கட்டுரை உரையினை வழங்கினார். அடுத்து சுவீடன் நாட்டுப் பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர் பீட்டர் ஸால்க் "சுயமரியாதை" எனும் தலைப்பில் பல்வேறு வரலாற்றுப் படைப்புக் குறிப்புகள் உள்ளடக்கிய உரையினை ஆற்றினார். பின்னர் ஜெர்மனி கொலோன் பல்கலைக் கழக டாக்டர் பட்டம் பெற்ற ஆராய்ச்சி மாணவி டாக்டர் சிர்.உன்ரா "அரசர் வெளிப்படையாக இருக்கிறார் - பகுத்தறிவு, விமர்சனம் மற்றும் வீரிய அரசியல் செயல்பாடு" எனும் தலைப்பில் ஆழமான ஆய்வுரையினை வழங்கினார்.

தேநீர் இடைவேளைக்குப் பின்னர் இரண்டாம் ஆய்வரங்க  நிகழ்வுகள் தொடங்கின.

இரண்டாம் ஆய்வரங்க அமர்விற்கு அமெரிக்கா - பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் டாக்டர் சோம. இளங்கோவன் தலைமை வகித்துப் பேசினார்.

கொலோன் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த ஆராய்ச்சி மாணவரும், மாநாட்டில் வெளியிடப்பட்ட "பெரியார் ஈ.வெ.ராமசாமி வாழ்க்கைச் சுருக்கம்" நூலின் ஜெர்மன் மொழி பெயர்ப்பாளருமான ஸ்வென் வொர்ட்மன் "வரலாற்றுக் காலங்களில் இந்தியாவில் பகுத்தறிவு" எனும் தலைப்பில் தமது ஆய்வினை வழங்கினார். கொலோன் பல்கலைக் கழக அரசியல் அறிவியல் துறையின் பேராசிரியர் டாக்டர் உல்ப்காங்க் லைட்டோல்டு "அரசியல் அமைப்பு சாசனம் - அய்ரோப்பிய அரசியல் எண்ணங்கள்" எனும் தலைப்பில் தாம் வெளியிட உள்ள ஆராய்ச்சி நூலின் சுருக்கத்தினை உரையாக முழங்கினார். அடுத்து புலம் பெயர்ந்த ஈழத் தமிழரும், தமிழீப்போர் நடைபெற்ற காலங்களில் யாழ்ப்பாணத்தில் இருந்தவருமான டாக்டர் எஸ்.ஜே. இமானுவேல் "சுயமரியாதையும் மானுடமும்" எனும் தலைப்பில் தமது அனுபவங்களை ஆய்வுரையாக அளித்தார். பின்னர் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் "பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்"தின் உதவிப் பேராசிரியர் டாக்டர் த. ஜெயக்குமார் "சுயமரியாதைக் கோட்பாடு - பெரியாரின் மனிதநேயப் பார்வை" எனும் தலைப்பில் பெரியாரது பொது வாழ்க்கை பற்றிய சுருக்கத்தினை ஆய்வுக் கட்டுரையில் வழங்கினார்.

நண்பகல் உணவு இடைவேளைக்குப் பின்னர் ஆய்வரங்கத்தின் மூன்றாம் அமர்வு தொடங்கியது. அமெரிக்கா - பெரியார்  பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் பேராசிரியர் டாக்டர் இலக்குவன் தமிழ் தலைமை உரையாற்றினார். அமெரிக்கா வாழ் மருத்துவர் சரோஜா இளங்கோவன், "பெரியாரும் மகளிர் அதிகாரத்துவமயமும்" எனும் தலைப்பில் தமது ஆய்வினை வழங்கினார். அடுத்து பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் திட்டமிடல் மற்றும் வளர்ச்சித்துறை ஆலோசகர்  பேராசிரியர் டாக்டர் எஸ்.தேவதாஸ் "பெரியார் சுயமரியாதை இயக்கம் - சமூக மாற்றத்திற்கான கருவி" எனும் தலைப்பில் கட்டுரையினை சமர்ப்பித்து உரையாற்றினார். பின்னர் திராவிடர் கழகத்தின் வெளியுறவுச் செயலாளர்

வீ. குமரேசன் "நாத்திக தத்துவ அறிஞர்கள்: பெரியார் ஈ.வெ.ராமசாமி மற்றும் பிரெட்ரிக் நீட்சே - ஓர் ஒப்பீட்டு ஆய்வு" எனும் தலைப்பில் ஓர் ஆய்வினை உரையாக அளித்தார்.

ஆய்வரங்கத்தில் பங்கேற்ற ஒவ்வொரு அறிஞர், சான்றோர்,  செயல்பாட்டாளர்களின் ஆய்வுரைக்குப் பின்னர் பங்கேற்பாளர்களின் வினாக்களுக்கு, ஆய்வுரையினர் விளக்கம் அளித்தனர்.

தேநீர் இடைவேளைக்குப் பின்னர் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் நடைபெற்ற  கலந்துறவாடல் களத்தில் பேராளர்கள் பங்கேற்றனர். தொடக்க உரையினை திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் ஆற்றினார். பின்னர் குவைத் புரட்சி மேதை தந்தை பெரியார் நூலகத்தின் சார்பில் பங்கேற்ற கவிஞர் லதாராணி பூங்காவனம் உரையாற்றினார். "சமூகப் புரட்சி 1929 சென்னை மாகாண முதல் சுயமரியாதை மாநாட்டு தீர்மானங்கள் - நடைமுறை ஆக்கங்கள்" எனும் தலைப்பில் களத்தில் பங்கேற்றோர் கருத்துரை வழங்கினர். பகுத்தறிவாளர் கழகத்தின் செயல் தலைவர் தகடூர் தமிழ்ச்செல்வி "சுயமரியாதை இயக்கம்" பற்றிய தம் ஆங்கிலக் கவிதையினை வாசித்தார்.

நிறைவாக கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி வரலாற்றுக் குறிப்புகளுடன் தமது தலைமை உரையினை உணர்ச்சிப் பெருக்குடன் வழங்கினார். நிகழ்ச்சியினை பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் டாக்டர் சோம. இளங்கோவன் தொகுத்தளித்தார்.

மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக  பேராளர்களின் ஆர்வமிகு பங்கேற்புடன் நிறைவடைந்தன.

திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் வீ. குமரேசன் ஆய்வுரையாற்றுகிறார்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner