எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மூன்று நாள்கள் மாநாட்டினை சிறப்பாக நடத்திய அமெரிக்கா - பெரியார் பன்னாட்டு அமைப்பு ஜெர்மனி கிளைத் தலைவர்  பேராசிரியர் டாக்டர் உல்ரிக் நிக்லஸ் அவர்களை பாராட்டி பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தர் கி. வீரமணி அவர்கள் நினைவுப் பரிசு வழங்கினார்.

கொலோன், ஜூலை 30 பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாட்டின் மூன்றாம் நாள் நிகழ்ச்சிகள் 29.07.2017 அன்று ஆய்வுக் கட்டுரை அரங்க நிகழ்வுடன் ஜெர்மனி - கொலோன் பல்கலைக் கழக அரங்கில் தொடங்கின.

ஆய்வுக் கட்டுரை அரங்கம் -  தொடர்ச்சி

ஆய்வுக் கட்டுரை அரங்கின் நான்காம் அமர்வுக்கு ஜெர்மனி - கொலோன் பல்கலைக் கழகப் பேராசிரியர் டாக்டர் உல்ரிக் நிக்லஸ் தலைமை வகித்து நடத்தினார். "பெரியார் சுயமரியாதை  இந்திய வரலாற்றில் ஓர் எழுச்சிமிகு தாக்கம்" எனும் பொருளில் திராவிடர் கழகத்தின் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி தமது ஆய்வுரையினை வழங்கினார். அடுத்து, "தென்னிந்தியாவில் சுயமரியாதை இயக்கத்தின் விளைவு ஆக்கம்" எனும் தலைப்பில் பெரியார் மணியம்மை பல்கலைக் கழக டாக்டர் பட்ட ஆராய்ச்சி மாணவர் எம்.  விஜயானந்த் உரையாற்றினார். பின்னர் "சமூகநீதி" எனும் தலைப்பில் பகுத்தறிவாளர் கழகத்தின் துணைத் தலைவர் கோ. ஒளிவண்ணன் தமது ஆய்வுக் கட்டுரையினை சமர்ப்பித்தார்.

தேநீர் இடைவேளைக்குப் பின்னர் ஆய்வுக் கட்டுரை நிறைவரங்கம் நடைபெற்றது. லண்டன் கிராய்டன் மாநகராட்சியின் துணை மேயர் மைக்கேல் செல்வநாயகம் நிறைவரங் கத்துக்கு தலைமை வகித்தார். முதலில் குவைத் கவிஞர் லதாராணி பூங்காவனம் "தென்னிந்தியாவில் பாலினச் சுரண்டலும் - சுயமரியாதை இயக்க எழுச்சியும்" எனும் தலைப்பில் பேசினார். பகுத்தறிவு எழுத்தாளர் ஆ. கலைச்செல்வன் "மாணவரும் சுயமரியாதையும்" எனும் தலைப்பில் தமது ஆய்வுரையினை வழங்கினார்.

பன்னாட்டு
கட்டுரைப் போட்டி

பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாட்டின் ஓர் சிறப்பாக இளைஞர்களுக்கான பன்னாட்டு கட்டுரைப் போட்டியினை அமெரிக்கா - பெரியார் பன்னாட்டு மய்யம் நடத்தியது. 32 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் "பெரியார் சுயமரியாதை இயக்கமும் - பயன் விளைவுகளும்", "பெரியாரின் மானுடநேயம்" மற்றும் "மகளிர் அதிகாரத்துவமயம்" ஆகிய தலைப்புகளில் ஆங்கிலத்தில் கட்டுரையினை  அனுப்பியிருந்தனர். அதில் வெற்றி பெற்ற இளைஞர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. முதல் பரிசிற்கு டாக்டர் பிரியதர்சினி இராஜேந்திரன் (கும்பகோணம்), இரண்டாம் பரிசிற்கு கணினிப் பொறியாளர் உதயகுமார் (சென்னை), மற்றும் மூன்றாம் பரிசிற்கு பவதாரிணி (திருச்சி) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். ஆறுதல் பரிசு 12 வயது நிரம்பிய தியா சவுகான் (டில்லி)னுக்கு அறிவிக்கப்பட்டது.

கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற இளைஞர்களுக்கு  உரிய பரிசுத் தொகையினை அமெரிக்கா - பெரியார் பன்னாட்டு மய்யம் அனுப்பிடும் எனும் செய்தியினை அதன் இயக்குநர் டாக்டர் சோம. இளங்கோவன் அறிவித்தார்.

மாநாட்டுத் தீர்மானம்

பன்னாட்டு மாநாட்டில் முக்கிய தீர்மானம் வெளியிடப் பட்டது. டாக்டர் சோம. இளங்கோவன் தீர்மானத்தினை முன்மொழிய, வருகையாளப் பேராளர்கள் கரவொலி எழுப்பி வழி மொழிந்தனர்.

தீர்மானம்: தந்தை பெரியாரின் சிந்தனைகளான சுய மரியாதை- மனிதநேய வாழ்க்கை முறை பரந்துபட்ட உலகளாவிய அளவில் உணரப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் சுயமரியாதையுடன் எல்லா வகையிலும் சமத்துவம் மிக்க வாழ்க்கை முறையினை வலியுறுத்தும் தந்தை பெரியாரின் மானுடநேயத்துடன் கூடிய சுயமரியாதைப் பகுத்தறிவுத் தத்துவத்தை உலகமயமாக்குவது என பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாடு தீர்மானிக்கிறது.

இந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த உலகின் அனைத்துப் பகுதிகளிலும் ஈராண்டுக்கு ஒரு முறை இத்தகைய பன்னாட்டு மாநாட்டை நடத்துவது என ஒருமனதாக தீர்மானிக்கப்படுகிறது.

தந்தை பெரியாரின் தத்துவத்தை உலகமயமாக்கிட அடுத்த பன்னாட்டு மாநாடு 2019ஆம் ஆண்டில் அமெரிக்க அய்க்கிய நாட்டில் நடத்தப்படும்.

அடுத்த பன்னாட்டு மாநாடு 2019ஆம் ஆண்டில் அமெரிக்க அய்க்கிய நாட்டில் நடைபெறும் எனும் அறிவிப்புத் தீர்மானம்  மிகுந்த வரவேற்பினைப் பெற்றது. அடுத்த மாநாட்டு பங்கேற்பிற்கு பேராளர்கள் தமது விருப்பத்தினை மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

சமூக நீதிக்கான
கி. வீரமணி விருது வழங்கும் விழா

பன்னாட்டு மாநாட்டு நிறைவில் 2016ஆம் ஆண்டிற்குரிய சமூகநீதிக்கான கி. வீரமணி விருது வழங்கும் விழா நடைபெற்றது.

அமெரிக்கா - பெரியார் பன்னாட்டு மய்யத்தால் 1996ஆம் ஆண்டு முதல் சமூகநீதி விருது வழங்கப்பட்டு வருகிறது. சமூகநீதிக்காக பாடுபட்ட மற்றும் போராடியத் தலைவர்களுக்கு இந்த விருது  ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்பட்டு வருகிறது. இந்தியா, சிங்கப்பூர், பர்மா, குவைத் ஆகிய நாடுகளில் உள்ள சமூக நீதியாளர்களுக்கு "சமூகநீதிக்கான கி. வீரமணி விருது" வழங்கப்பட்டுள்ளது.

2016ஆம் ஆண்டிற்கான விருது வழங்கும் விழாவில் அமெரிக்கா -  பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் பேராசிரியர் டாக்டர் இலக்குவன் தமிழ் வரவேற்புரை ஆற்றினார். சமூகநீதி பற்றிய ஓர் அரிய விளக்கவுரையினையும் ஆற்றினார். பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் டாக்டர் சோம. இளங்கோவன் 2016ஆம் ஆண்டுக்கான "சமூகநீதிக்கான கி. வீரமணி விருதினை" லண்டன் கிராய்டன் மாநகராட்சி துணை மேயர் வணக்கத்திற்குரிய மைக்கேல் செல்வநாயகம் அவர்களுக்கு வழங்கினார்.

விருதுக்கான பட்டயத்துடன் விருதுத் தொகையான ரூபாய் ஒரு லட்சமும்  வழங்கப்பட்டன. தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் சால்வை அணிவித்துப் பாராட்டினார். திருமதி. மோகனா வீரமணி நினைவுப் பரிசினை மைக்கேல் செல்வநாயகம் அவர்களுக்கு வழங்கினார்.

மைக்கேல் செல்வநாயகம் உணர்ச்சிப் பூர்வமாக ஏற்புரை ஆற்றினார். விழாவின் நிறைவாக தமிழர் தலைவர்

கி. வீரமணி கருத்துரை, வாழ்த்துரை வழங்கினார். டாக்டர் சோம. இளங்கோவன்  நன்றி கூறி விழாவினை நிறைவு செய்தார். வெளிநாட்டில் - ஜெர்மனியில் பெரியார் சுயமரி யாதை இயக்கப் பன்னாட்டு மாநாடு மூன்று நாள்களும் எழுச்சி யுடன்  நடைபெற்றது. மாநாட்டில் பங்கேற்ற பன்னாட்டுப் பேராசிரியர்கள், பேராளர்கள் மாநாடு நடந்தவிதம் பற்றி  பெருமிதம் அடைந்து மகிழ்ந்தனர்; பாராட்டுத் தெரிவித்தனர்.

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner