எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பசுமைத் தீர்ப்பாயத்தின் திடீர் பல்டி

புதுடில்லி, ஆக.1 ஆர்ட் ஆப் லிவிங்(வாழும் கலை) அமைப்பு  சிறீ சிறீ ரவிசங்கர் தலைமையில் 2016ஆம் ஆண்டு மூன்று நாட்கள் டில்லி யமுனை நதிக்கரையில் உலக கலாச்சார மாநாடு என்ற பெயரில் மிகபெரிய சுற்றுச்சூழலை பாதிக்கும் அளவிற்கு நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது.

கடுமையான பாதிப்பு

இந்த நிகழ்ச்சிமுடிந்த பிறகு யமுனை நதியின் கரைப்பகுதி இன்னும் 5000 ஆண்டுகளுக்கு மீள முடியாத நிலைக்கு கடுமையான சுற்றுப்புறச்சூழல் கேட்டிற்கு ஆளாகியதாக பசுமைத்தீர்ப்பாயம் அறிக்கை விடுத்திருந்ததது. மேலும் யமுனை மற்றும் அதன் கரையை சீர் செய்ய நூறு கோடிகளை வாழும் கலை அமைப்பு இழப்பீடாக தரவேண்டும் என்றும் உடனடியாக 120 கோடி அபராதம் விதித்து 50 கோடியை உடனடியாக தரவேண்டும் என்று ஆணையிட்டிருந்தது.

இந்த நிலையில் சென்ற மாதம் மோடி தலைமையில் அமைச்சரவை கூடி ஒரே நாள் இரவில் பசுமைத்தீர்ப்பாயத்தை கலைத்துவிட்டு அதை மத்திய சுற்றுப்புறச்சூழல் அமைச்சகத்துடன் இணைத்துவிட்டது,

அன்றே கூறிய விடுதலை தலையங்கம்

இனி பசுமைத்தீர்ப்பாயம் என்பது பாஜவின் ஒரு அங்க மாக செயல்படும் என்று 25 ஜுலை அன்று விடுதலையில் தலையங்கம் தீட்டப்பட்டது, விடுதலை தலையங்கத்தின் ஈரம் காயும் முன்பே சிறீ சிறீ ரவிசங்கரால் யமுனைக் கரைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அரசின் அங்கமாக மாறியுள்ள பசுமைத்தீர்ப்பாயம் தற்போது அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

யமுனை நதிபாயும் மாநிலங்களான டில்லி, மற்றும் உத்தர பிரதேச அரசுகள் அமைத்த குழு ஜூலை 30-ஆம் தேதி சமர்பித்த அறிக்கையின் படி கடந்த ஆண்டு நிகழ்ச்சி நடந்துமுடிந்த பிறகு 420ஏக்கர் பகுதிகளைப் பார்வையிட்டோம் அங்கு எந்த ஒரு சுற்றுப்புறச்சூழல் கேடு நடக்கவில்லை, அப்பகுதி முழுவதும் பசுமையான புற்கள் கொண்ட ஒரு இயற்கை சூழியல் உருவாகியுள்ளது, மேலும் அங்கு நாங்கள் சில மாதிரிகளை சேகரித்த போது அந்த மாதிரி தாவரங்கள் எந்த ஒரு இயற்கை வேதிப்பொருளாலும் பாதிக்கப்படவில்லை. இங்கு வளர்ந்த பசுமைப் புற்கள் அனைத்தும் விதைதூவப்பட்டு உருவாகவில்லை, என்றும் முன்பிருந்த வேர்களில் இருந்து மீண்டும் வளர்ந்தவை, என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இது தொடர்பாக  இந்த அறிக்கையில் புதிய பசுமைத் தீர்ப்பாய நீதிபதி சுவதந்தர் குமார் கூறியதாவது, நாங்கள் உபி மற்றும் டில்லி அரசு நியமித்த சூழலியல் ஆய்வாளர்கள் அளித்த அறிக்கை அதனுடன் இணைத்த புகைப்படங்கள் மற்றும் கூகுள் செயற்கைகோள் மூலம் எடுத்த படத்தை வைத்து ஆய்வு செய்ததில், அந்த நிகழ்ச்சி நடந்த இடத்தில் எவ்வித பாதிப்பும் தெரியவில்லை. மேலும் குப்பைகள் சேர்ந்துள்ளதாகவும்,  இந்த குப்பைகள் மட்காதது என்று முன்பு கூறப்பட்டது,  தொடர்பான எந்த அடையாளமும் இல்லை, மேலும் சதுப்பு நிலங்கள் மீண்டும் பழைய நிலையை அடையாது என்று முன்பு கூறியதும் தவறான ஒன்றாகிவிட்டது, காரணம் அப்பகுதி எங்கும் நீர் ஊறிய வண்ணம் சகதி(சதுப்பு நிலம்)யாக நிறைந்துள்ளது, இதனால் மீண்டும் அங்கு பல்லுயிர் பெருக அதிக வாய்ப்புகள் உண்டாகிவிட்டது.  முன்பு கூறிய குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதிக்கானதே ஆகும்.

விவசாயம் அமோகமாம்

முக்கியமாக உத்தரபிரதேசத்தைச்சேர்ந்த அரசு சூழலியல் தலைமை பொறியாளர் அளித்த நேரடி சோதனை அறிக்கையில் நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு அருகில் 15 ஏக்கர் நிலம் தற்காலிக வாகன நிறுத்தமிடமாகத்தான் வழங்கப் பட்டது, அந்த வாகன நிறுத்தத்தில் சிறு, சிறு மாற்றங்கள் செய்தார்களே தவிர நிரந்தரமான எந்த ஒரு செயற்கை பொருளையும் வைக்கவில்லை, என்பது தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும் அந்த 15 ஏக்கர் நிலம் விவசாயிகளுடையது அறுவடை முடிந்த பிறகு அடுத்த விதைப்பிற்காக நீண்ட நாள் கால அவகாசம் இருந்த போதுதான்,  அந்த இடம் விவசாயிகளுக்கு தகுத்த குறுகிய கால தொகை கொடுத்து விவசாயிகளின் முழுமையான ஒப்புதலோடும்,  அப்பகுதி பஞ்சாயத்து தலைவர் மற்றும் ஊரின் முக்கிய பிரமுகர்களின் கையெப்பம் பெற்ற பிறகுதான்,  அந்த நிலம் வாகன நிறுத்ததிற்காக பயன்படுத்தப்பட்டது,

தற்போது மீண்டும் அங்கு விவசாயம் செய்யப்படுகிறது, அங்கு முன்பை விட நல்ல நிலையில் பயிர்கள் விளைச்சலை விவசாயிகள் கண்டதாக நேரடி சாட்சிகள் தெரிவிக்கின்றன.

மேலும் மிகவும் முக்கியமான ஒன்றாக நிகழ்ச்சி ஏற் பாட்டாளர்கள் சில வேதிப்பொருட்களை யமுனை நதியிலும், கரையிலும் தெளித்தார்கள். அதனால் நுண்ணுயிர் அழிந்து விட்டது என்று கூறப்படுகிறது, இதுதான் குற்றச்சாட்டின் மிகவும் முக்கியமான பகுதியாக கருத்தப்பட்டது.

ஆபத்தான வேதிப்பொருள்
கலக்கவே இல்லையாம்

ஆனால் வேதிப்பொருட்கள் அங்கு இருந்ததற்கான எந்த ஒரு தடயமும் இல்லை, 2016-ஆம் ஆண்டு மழைக்காலத்தில் அந்த வேதிப்பொருட்கள் அனைத்தும் அடித்துச் செல்லப் பட்டிருக்கலாம், அல்லது ஆற்று நீர் ஓட்டத்தில் வேதிப் பொருட்கள் அடித்துச்செல்லப்பட்டிருக்கலாம்,  இருப்பினும் நாங்கள் மிகவும் கவனமாக ஆய்வு செய்த்தோம் அந்த ஆய்வில் ஆற்றங்கரையிலும், கரையின் நிலப்பகுதியிலும் எந்த ஒரு செய்ற்கை வேதிப்பொருளும் இல்லை, என்பதும் ஆபத்தான வேதிப்பொருட்கள் தெளித்த சுவடுகள் கூட கிடையாது என்று உறுதிபடக்கூறுகிறோம்.

மேலும் வாழும் கலை அமைப்பு தானே முன்வந்து நிகழ்ச்சி முடிந்த பிறகு அங்குள்ள நிலத்தடி மாதிரிகளை எடுத்து உயர் தொழில் நுட்பத்துடன் கூடிய ஆய்வகத்தில் ஆய்வு செய்து அதன் அறிக்கையை எங்களிடம் சமர்பித் துள்ளது. மேலும் ஒரு சில பாதிப்புகள் நிகழ்ந்திருந்தாலும் அதை அந்த அமைப்பே பசுமைத்தீர்ப்பாயத்தின் தூய்மைப் படுத்துதல் மற்றும் வழிகாட்டுதல் விதியின் படி பெரும் பொருட்செலவில் அகற்றிவிட்டது,  இதையும் நாங்கள் உறுதிபடுத்தியுள்ளோம்.

மேலும் பசுமைத்தீர்ப்பாயம் அமைத்த புதிய ஆய்வுக்குழு யமுனை ஆற்றின் ஈர நிலப்பகுதி மற்றும் வெள்ளம் ஏற்படும் பகுதிகளைப் பார்வையிட்டு நிகழ்ச்சி நடந்த போது இருந்து எல்லா அடையாளங்களும் தெளிவாக அங்கிருந்து அகற்றப் பட்டு எந்த பாதிப்பும் ஏற்படாதவகையில் நடவடிக்கை எடுத்ததால்,  அப்பகுதியில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை, நிலம் மற்றும் வெள்ளம் வடியும் பகுதிகள் இயற்கையாகவே அப்பகுதிகளை மீண்டும் மாற்றியுள்ளது.

இது தொடர்பான விபரமான அறிக்கை ஆகஸ்ட் 4 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரும் போது அனைவருக்கும் தெரிவிக்கிறோம் என்று சுவந்திரக்குமார் கூறினார்.

120 கோடி அபராதம்  

சிறீ சிறீ ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பு(Art of Living Foundation) உலக கலாச்சார மாநாடு என்ற பெயரில் டில்லி அருகில் உள்ள யமுனை ஆற்றின் கரையில் 1200 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்ட மாநாடு ஒன்றை நடத்தியது.இந்த நிகழ்ச்சி 2016-ஆம் ஆண்டு மார்ச் 11 ஆம் தேதி தொடங்கியது, ஆனால் இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு 6 மாதங்களுக்கு முன்பே அந்த நிலப்பகுதிகளில் உள்ள விவசாயிகள் அங்கிருந்து அகற்றப்பட்டனர். விவசாய விளைநிலங்கள் சேதப்படுத்தப்பட்டு சமப்படுத்தப்பட்டது, மேலும் அங்கு தேவையற்ற புற்கள் மற்றும் நுண்ணுயிர்கள் உருவாகிவிடக்கூடாது என்பதற்காக பூச்சிக்கொல்லிகளும், வேதிக்கலவைகளும் தொடர்ந்து தெளிக்கப்பட்டு வந்தது, இந்திய ராணுவம் சிறீ சிறீ ரவிசங்கரின் ஏவுதலுக்கு பணியாற்றும் ஒரு அமைப்பாக மாற்றப்பட்டது. இது தொடர்பாக அப்போதைய இந்திய ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கரிடம் கேட்ட போது அவர் தனியார் பணிகளுக்கு நாங்கள் விலைபெற்றுக்கொண்டே செய்கின் றோம், இதற்கான அவர்கள் பெரும் தொகையை ராணுவத் திற்கு தருகிறார்கள் என்று கூறினார்.

யமுனை நதிக்கரை சிறி சிறி ரவிசங்கரின் வாழும் கலை அமைப்பினர் நடத்தும் மாநாட்டின் காரணமாக சீர்கெடுவது தொடபாக பல்வேறு சமூக ஆர்வலர்கள் உச்சநீதிமன்றத்திலும் பசுமைத்தீர்ப்பாயத்திலும் வழக்கு தொடர்ந்தனர். உச்சநீதி மன்றம் இந்த வழக்குகளை பசுமைத்தீர்பாயத்திடம் விசாரணை நடத்த ஆணையிட்டது, இதனடிப்படையில் பசுமைத்தீர்ப்பாயம் விசாரணை நடத்தியது பசுமைத் தீர்ப்பாயம் 120 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. பிறகு இந்த தொகை 50 கோடியாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடத்திய பசுமைத்தீர்ப்பாயம் வாழும் கலை அமைப்பு நடத்திய மாநாட்டினால் சுமார் 420 ஏக்கர் நிலம் மீண்டும் தானாகவே பழைய நிலைக்கு மாறமுடியாமல் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தது, மேலும் இந்த பாதிப்புகளை ஏற்படுத்தியதற்காக 42.2 கோடி அரசுக்கு வாழும் கலை அமைப்பு தரவேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது, இதை இரண்டு பகுதியாக பிரித்து பாதிக்கப்பட்ட இடங்களை செப்பனிட்டு மீண்டும் பழைய மாதிரி உருவாக 28.73 கோடி மற்றும் இப்பணிகளை செய்து முடித்த பிறகு அந்த இடங்களில் மீண்டும் நுண்ணுயிர் பெருக்கத்திற்கும் இதர அழிந்துபோன தாவர இனத்தை மீண்டும் உருவாக்க வைக்கும் முயற்சிக்கு 13.29 கோடியும் இரண்டு தவணையாக தரவேண்டும் என்று கூறியிருந்தது.
சிறைக்கு அனுப்புங்கள் சிறையை சொர்க்கபுரியாக மாற்றுகிறேன்

பசுமைத்தீர்பாயத்தின் இந்த ஆணையை, மதிக்காமல் இவர்கள் கூறும் தொகையைத் தர நான் என்ன தொழிலதிபரா என்று கூறி இந்த தொகையை நான் தரமுடியாது? என்னை சிறையில் தள்ளுங்கள் நான் சிறையை சொர்க்கபுரியாக மாற்றுகிறேன் என்று கதைவிட்டார். ஆனால் பசுமைத் தீர்ப்பாயம் இவரின் பேச்சைக் கேட்டுக்கொண்டு வேடிக்கைப் பார்க்காமல் காட்டமான கண்டன அறிக்கை விட்டிருந்தது, இந்த நிலையில் இவர் 4 கோடி வரை காசோலையாக பசுமைத்தீர்ப்பாயத்திற்கு கொடுத்திருந்தார். ஆனால் அந்த காசோலை அயல்நாட்டு வங்கியைச் சேர்ந்த காரணத்தால் அப்பணத்தை இந்தியாவிற்கு கொண்டுவருவதற்கு நிதி அமைச்சக உதவி தேவைப்பட்டது, நிதி அமைச்சகம் சிறீ சிறீ ரவிசங்கர் தொடர்பில் மென்மைப் போக்கை காட்டிவந்தது, இந்த நிலையில் பசுமைத்தீர்ப்பாயத்தில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மீண்டும் இந்தவழக்கு வந்த போது பசுமைத் தீர்ப் பாயத்தின் குற்றச்சாட்டுக்கு சிறீ சிறீ ரவிசங்கர் பதிலளிக்கையில் உங்களுக்கு யமுனை ஆற்றின் மீது அவ்வளவு அக்கரை இருந்தால், அந்த ஆறு தூய்மையானது, சீர்கெட்டுவிடும் என்றால் நிகழ்ச்சியை தடுத்திருக்கலாமே என்று திமிர்த்தனத்துடன் கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்த தேசிய பசுமைத் தீர்ப்பாய நீதிபதி, ரவிசங்கர் உங்களுக்கு சிறிதளவு கூட பொறுப்புணர்ச்சியே இல்லை. எதை வேண்டுமானாலும் பேசலாம் என்ற சுதந்திரத்தை தங்களுக்குக் கொடுத்தது யார். உங்கள் செயல் அதிர்ச்சியளிக்கிறது எனத் தெரிவித்திருந்தார்.

புறக்கணித்த குடியரசுத்தலைவர்  

நிகழ்ச்சி நடக்கும் முன்பே பெரும் விமர்சனத்திற்கு உள்ளானதால் முதன்மை விருந்தினராக கலந்துகொள்ள விருந்த இந்திய குடியரசுத்தலைவர் எவ்வித காரணமும் கூறாமல் புறக்கணித்தார். ஆனால் இந்த விமர்சனங்கள் குறித்து எனக்கு கவலையில்லை, நான் நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் பெருமை கொள்கிறேன் என்று கூறி மோடி மூன்று நாள் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.

இது தொடர்பாக 7 பேர் கொண்ட உயர்மட்ட ஆய்வுக்குழு 2016-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அளித்த அறிக்கையில் நிகழ்ச்சி நடந்த யமுனைக்கரை முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டது, இது மீளமுடியாத ஒரு அழிவு என்றும் அந்த அமைப்பு இந்த அழிவு பற்றி தெரிந்திருந்தும்,  சுய நலத்திற்காக இத்தகைய பேரழிவுச்செயலில் ஈடுபட்டது என்று கூறியிருந்தனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner