எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

-  ஏ.ஜி. நூராணி

 

(முஸ்லிம்கள் மீது இந்து வலதுசாரிகள் கொண்டிருக்கும் வெறுப்பிலிருந்து பிறந்ததுதான் இஸ்ரேல் நாட்டின் மீதும்,  ஜியானிசம் என்னும் யூதமத நாட்டுக் கோட்பாட்டின் மீதும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள கவர்ச்சி)

இஸ்ரேல் நாட்டுடன் இந்தியா நல்லுறவு வைத்திருக்க வேண்டும் என்பது சரியான கருத்துதான். ஆனால், ஜியானிசம் என்னும் யூதமதநாட்டுக் கோட்பாட்டுக்கு ஆதரவு தருவது எந்த ஒரு இந்தியனுக்கும் இழிவு சேர்ப்பதே ஆகும். யூத மதம் என்பது ஒரு பண்டைய, பெருந்தன்மை மிகுந்த மதமாகும். ஆனால் ஜியானிசம் என்னும் யூதமத நாட்டுக் கோட்பாடு என்பது, 1895 இல் தியோடர் ஹெர்சல் என்பவரால் உருவாக்கப்பட்ட பிரிவினை வாத நவீன அரசியல் கோட்பாடாகும். இதற்கு ஓர் எடுத்துக் காட்டைக் கூறலாம்.  இந்து மதம் என்பது ஒரு பழமையான மதமாகும்; ஆனால் இந்துத்துவா என்பது 1923 இல் சாவர்க்கரால் உருவாக்கப்பட்ட நச்சுத் தன்மை கொண்ட அரசியல் கோட்பாடு ஆகும். இந்து மதத்தைப் புனிதமாகக் கருதி பின்பற்றுபவர்கள் இந்துத்துவக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அது போலவே யூதமதத்தைப் புனிதமாகக் கருதி பின்பற்றுபவர்கள் ஜியானிசம் என்னும் யூதமதநாட்டுக் கோட்பாட்டை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இஸ்ரேல் நாட்டுடனான உறவை மேம்படுத்திக் கொள்ளும் இந்தியா, பாலஸ்தீனியர்கள் பிரச்சினையில் தனது முதுகைத் திருப்பிக் கொள்ளவோ, பாலஸ்தீன நாட்டின் மீது இஸ்ரேலினால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் தாக்குதல்களைக் கண்டிக்காமல் இருக்கவோ கூடாது.

அடிமைகளாக்கப்பட்ட அராபியர்கள்

இஸ்ரேல் என்னும் ஒரு நாடு உருவாவதற்குக் காரணமாக இருந்த ஜியானிச இயக்கத்தின் தந்தையான தியோடர் ஹெர்சலுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தியது என்பது மிகமிக முக்கியமான செய்தியாகும்; அத்துடன்  இஸ்ரேல் என்னும் ஒரு நாடு மக்களாட்சிக் கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது என்று மோடி கூறியிருப்பது அதை விட முக்கியமானது என்று தனது ஜூலை 5 இதழில் "டைம்ஸ் ஆப் இந்தியா" நாளேடு தெரிவித்துள்ளது. மதச்சார்பின்மை என்ற கோட்பாட்டினைப் பின்பற்றும் தனது கூட்டாளி இஸ்ரேல் என்று மோடி பெருமையுடன் அறிவித்துள்ளார்.

ஆனால், யூதமத நாடான இஸ்ரேலில் வாழும் அராபியர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாகவே வாழ்ந்து வருகின்றனர். 50 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேலினால் ஆக்கிரமித்துக் கொள்ளப்பட்ட பாலஸ்தீனத்தில் வாழும் மக்களுக்கு வாக்குரிமை கிடையாது. அவர்களது நிலங்கள் எல்லாம் இஸ்ரேல் குடியிருப்புகளால் கையகப்படுத்திக் கொள்ளப்பட்டன. அராபியர்கள் ஏறக்குறைய அடிமைகள் போலவே நடத்தப்படுகின்றனர்.

இஸ்ரேல் என்னும் நாடு வன்முறையின் மூலமாக உருவாக்கப்பட்டதே ஆகும்.  அராபிய மண்ணில் ஒரு யூதமத நாட்டை பின்னர் எவ்வாறு உங்களால் உருவாக்க முடியும்? 1947 இல் ஆங்கிலேயர் மேற் கொண்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, பாலஸ்தீனத்தில் இருந்த அராபிய முஸ்லிம்கள் 1,157,000 என்றும், அராபிய கிறித்துவர்கள் 146,000 என்றும்,  யூதர்கள் 580,000 என்றும் தெரிய வந்துள்ளது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இஸ்ரேலாக மாற்றம் பெற்ற பாலஸ்தீனத்தில் 200,000 அராபியர்களே எஞ்சி இருந்தனர். 1946 இல் பாலஸ்தீனத்தில் 12 சதவிகித நிலங்களைப் பெற்றிருந்த யூதர்கள்,1948-49 ஆம் ஆண்டு போருக்குப் பின்னர் 77 சதவிகித நிலங் களுக்கு  உடமைதாரர்களாக ஆகிவிட்டனர்.

1930 களில் நடந்தேறிய தீவிரவாதத் தாக்குதல்களில்,  பொதுக் கட்டமைப்புகளைத் தகர்த்த யூதர்கள்,  அரசு அலுவலகங்களை வெடி வைத்துத் தகர்த்தது மட்டுமன்றி,  ராணுவக் கிடங்குகள் மீது தாக்குதல் நடத்தி,  ஆங்கிலேய சிப்பாய்களையும்,  அரசு அதி காரிகளையும் கடத்தியும், தாக்குதல் நடத்தியும், சுட்டுக் கொன்றும் இருக்கின்றனர்.

காந்தியார் கருத்து என்ன?

ஜியானிசம் பற்றிய காந்தியின் நிலை மிகத் தெளிவாகவே இருந்தது: "எனது அனுதாபமெல்லாம் யூதர்களின் பக்கமே இருக்கிறது.  கிறித்தவ மதத்தின் தீண்டத்தகாதவர்களாகவே அவர்கள் இருந்தனர். கிறித்தவர்களால் அவர்கள் நடத்தப்பட்ட விதம்,  இந்துக்களால் தீண்டத் தகாதவர்கள் நடத்தப்பட்ட விதத்தைப் போலவே இருந்தது. மனிதாபிமானம் அற்ற முறையில் அவர்கள் நடத்தப்பட்டதை நியாயப்படுத்துவதற்காக மதத்தின் ஒப்புதல் எடுத்துக் காட்டப்பட்டது. நட்புறவையும் தாண்டி,  யூதர்கள் மீது நான் அனுதாபம் கொள்வதற்கு, உலகளாவிய பொதுக் காரணங்களும் உள்ளன.

ஆனால் இந்த அனுதாபம்,  நீதியின் தேவை களை நான் காணாத அளவிற்கு என்னைக் குருடாக்கிவிடவில்லை. தங்களுக்கு என்று ஒரு தேசிய நாடு தேவை என்ற யூதர்களின் கோரிக்கை ஏற்புடையதாக எனக்குத் தோன்றவில்லை. பைபிளில் அதற்கான அனுமதி கேட்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்திற்குத் திரும்பிய பிறகு யூதர்கள் மிகுந்த பிடிவாதத்துடன் தங்களது விருப்பத்தினை நிறைவேற்றிக் கொண்டனர். தாங்கள் பிறந்து, வளர்ந்த நாட்டைத் தங்களது தாயகமாக ஏற்றுக் கொண்டு,  தங்களது வாழ்வாதாரத்திற்காக தாங்கள் செய்து வந்த தொழில்களையே, மற்ற மக்களைப் போலவே, யூதர்களும் ஏன் செய்யக்கூடாது?

இங்கிலாந்து ஆங்கிலேயருக்கும், பிரான்ஸ் பிரெஞ்சுக்காரர்களுக்கும் எவ்வாறு சொந்தமானதோ, அதே போல பாலஸ்தீனமும் அராபியர்களுக்கு சொந்தமானது. அராபியர்கள் மீது யூதர்களைத் திணிப்பது மனிதாபிமானம் அற்றதும்,  தவறானதும் ஆகும். பாலஸ்தீனத்தில் இன்று என்ன நடந்து கொண்டு இருக்கின்றனவோ, அவற்றை எல்லாம் எந்த ஒரு நன்னெறிக் கோட்பாட்டு விதிகளால் நியாயப்படுத்தி விட முடியாது. கடந்த போரைத் தவிர அவர்களது வேறு எந்த செயல்களுக்கும்  எந்த வித அனுமதியும் இல்லை."  (ஹரிஜன் 1938)

சாவர்க்கரின் நிலைப்பாடு

இதற்கு நேர் மாறாக இருந்தது சாவர்க்கரின் நிலைப்பாடு.  1947 டிசம்பர் 19 அன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் அவர் கூறுகிறார்: "பாலஸ்தீனத்தில் ஒரு சுதந்திரமான யூதமத நாட்டை உருவாக்குவது என்ற யூதர்களின் கோரிக்கையை, உலக நாடுகளில் பெரும்பான்மையானவை அங்கீரித்து இருந்திருக்க வேண்டும் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் நான் குறிப்பிடுகிறேன்.  பல நூறாண்டு காலத் துன்பங்கள், தியாகங்கள் மற்றும் போராட்டங்களுக்கும்  பிறகு, பாலஸ்தீனத்தில் யூதர்கள் தங்கள் தாயகத்தை விரைவில்  உருவாக்கிக் கொள்வார்கள்.  அவர்களுக்கு அது அவர்களது தந்தையர் நாடாகவும், புனித நாடாகவும் இருக்கும் என்பதில் சந்தேகம் எதுவும் இருக்க முடியாது.

இந்திய பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகளில் இருந்து மதிப்பிடும் போது,  இந்த பாலஸ்தீனப் பிரச்சினையில் முஸ்லிம்களுக்கு ஆதரவான ஒரு வஞ்சமான பிரச்சாரத்தின் மூலம், பொது மக்களுக்கு ஒரு தவறான தகவல் அளிக்கப்படுவதாகவே தோன்றுகிறது. வரலாற்று பூர்வமாக பேசும்போது,  முகமது நபி பிறப்பதற்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, ஒட்டு மொத்த பாலஸ்தீனமும், யூத மக்களின் தாயகமாக இருந்து வந்துள்ளது. நீண்ட வரிசையிலான, அப்ரகாம், மோசஸ், டேவிட் மற்றும் சாலமன் போன்ற  அவர்களது தேவதூதர்களும், மன்னர்களும் யூத இனத்தில் தோன்றி, அந்த நாட்டை தங்களது தந்தையர் நாடாகவும்,  புனித நாடாகவும் நேசித்து வளர்த்து, பெருமைப்படுத்தி வந்துள்ளனர். நமது சிந்து நதி சமவெளியில் ஊடுறுவுவதற்கு சற்று முன்னர்தான் முஸ்லிம்கள் பாலஸ்தீனத்தின் மீது படையெடுத்துள்ளனர். பண்டைய எகிப்தியர்கள் மற்றும் பெர்சியர்களை அழித்தது போலவே   அதிக அளவிலான வெறியுடன், யூத மக்களையும் அவர்கள் கத்தி கொண்டும், தீயிட்டும் அழித்தனர். அராபிய முஸ்லிம்களின் புனித நாடு அரேபியாவில்தான் உள்ளது; பாலஸ்தீனத்தில் இல்லை என்ற உண்மையை கவனிக்க அவர்கள், தங்களது பேராசையின் காரண மாக,  தவறிவிட்டனர்.

எனவே, நியாயமாகப் பார்த்தால், ஒட்டு மொத்த பாலஸ்தீனமுமே யூதர்களுக்கு திருப்பி அளிக் கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அய்க்கிய நாடுகள் அவையில் உள்ள பலம் வாய்ந்த நாடுகளின் சுயநலம் காரணமாக,  பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியில் ஒரு யூத மத நாடு உருவாவதற்காக அவர்கள் ஆதரவு தந்ததே பெரிய விஷயமாகக் கருதப்பட வேண்டியதாக இருக்கிறது. எவ்வாறாயினும், பாலஸ்தீனிய மக்கள் தொகையில் இன்னமும் யூதர்கள் பெரும்பான்மையினராக இருந்து கொண்டு,  தங்களின் புனித மத தலங்களை தங்கள் நாட்டில் கொண்டிருப்பவர்களாகவும் இருப்பது,  வரலாற்று ரீதியில் நியாயமானதாகவும், முக்கியமானதாகவும் விளங்குகிறது.

அதனைத் தொடர்ந்து அய்க்கிய நாடுகள் அவையில் யூதமதநாடான இஸ்ரேலின் உருவாக்கத்திற்கு எதிராக நமது இந்துஸ்தானத்து அரசின் பிரதிநிதி வாக்களித்திருப்பது வருத்தப்பட வேண்டிய செய்தியாகும். ஒரு சுதந்திரமான யூதமதநாட்டை உருவாக்குவதன் மூலம் பாலஸ்தீனத்தின் முதுகில் குத்த இந்திய அரசு மறுத்துவிட்டது என்று இந்தியாவின் பிரதிநிதி விஜயலட்சுமி பேசியுள்ளார்."

இதுதான் சங் பரிவார் தொடர்ந்து கடை பிடித்து வரும் பாலஸ்தீனிய - இஸ்ரேல் கொள்கையாகும்.

ஆவணக் காப்பகத்தின் ஆதாரங்கள்

முஸ்லிம்களின் வாக்குகளை அலட்சியப்படுத்தி விட முடியாது என்று  2000 ஜூலை 2 அன்று டெல் அவிவில் இந்திய அயல்துறை அமைச்சர் ஜெஸ்வந்த் சிங் கூறினார்.  இந்தியாவின் இஸ்ரேல் கொள்கை, அதன் உள் நாட்டு அரசியலின் கைதியாக ஆகிவிட்டது. அகண்ட ஒரு மேற்கு ஆசிய கொள்கை காரணமாக, இந்தியாவின் இஸ்ரேல் கொள்கை முஸ்லிம் ஆதரவு நிலையை மேற்கொள்ள வேண்டியிருந்தது என்றும் அவர் கூறினார். சிலர் இதற்கு மவுலானா ஆசாத்தையும் குற்றம் சாட்டினர்.

ஆனால்,  ஜனசங்கம் மற்றும் பா.ஜ.க.வினால் பல பத்தாண்டு காலமாக வஞ்சகமாகப் போற்றி வளர்க் கப்பட்டு வந்த இத்தகைய மாயைகள் அனைத்தையும்,  ஆவணக் காப்பக செய்திகள் நொறுக்கித் தள்ளிவிட்டன. அயல்துறை விவகாரங்களில் ஆசாத்துக்கு எதிராக நேரு எப்போதுமே தலையிட்டதில்லை.  1947 இல் நடைபெற்ற ஆசிய உறவுகள் மாநாட்டுக்கு யூதர்களின் பிரதிநிதிக்கும் அவர் அழைப்பு விடுத்தார். 1955 இல் நடைபெற்ற பாண்டூங் மாநாட்டுக்கு இஸ்ரேலை அழைப்பதற்கு அவர்  ஆதரவளித்தார் என்பது அனைவரும் அறிந்த செய்தியேயாகும். ஆனால் ஒட்டு மொத்த அராபிய உலகமும் அந்த மாநாட்டைப் புறக்கணிக்கும் என்ற அச்சத்தினால் நேரு தனது விருப்பத்தின்படி செயல்பட இயலாமல் போய்விட்டது. இது ஆவணப் பதிவுக்கான காரணம். ஆனால் உண்மையான காரணம் காஷ்மீர் விவகாரம்தான்.

நேருவின் கொள்கை அரசியலில் நல்ல பயன்களை அளித்தது. நேருவும் அதனை அறிந்துதான் இருந் தார்.  1948 முதல் 1957 வரை காஷ்மீர்தான் ஓர் அனைத் துலகப்  பிரச்சினையாக விளங்கி வந்தது. அய்க்கிய நாடுகள் அவையின் பாதுகாப்புக் கவுன்சிலுக்கு வெளியே அந்த பிரச்சினையைக் கொண்டு வர பாகிஸ்தானால் முடியவில்லை. அதற்குக் காரணம் சோவியத் யூனியனின் வீட்டோ அதிகாரம்தான். பொது அவையில் எகிப்தும், மற்ற அரபு நட்பு நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவாக இருந்தன. இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே 1963 இல் சமரசப் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்ட போது, எகிப்து இந்தியாவுக்கு பலமான ஆதரவு அளிக்கும் நாடாக இருந்தது.

மற்ற விஷயங்களில் செய்தது போலவே, தேசிய நலனைக் கருத்தில் கொண்ட இந்த கொள்கையை முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறுவதற்காக காங்கிரஸ் தவறாகப் பயன்படுத்திக் கொண்டது. வலதுசாரி இந்து  ஆதரவாளர்கள், இஸ்ரேலுக்கு ஆதரவாளர்களாக விளங்குவதற்குக் காரணமாக விளங்குவது, இஸ்ரேல் மீது அவர்கள் கொண்ட நேசமா அல்லது முஸ்லிம்கள் மீது அவர்கள் கொண்ட பகையுணர்வா? குறிப்பிடத் தகுந்த சில முஸ்லிம் ஆதரவாளர்கள், இஸ்ரேலை வெளிப்படையாகப் பாராட்டும் ரசிர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அடுத்த முறை இஸ்ரேல் பிரதமர் இந்தியாவுக்கு வருகை தரும்போது, நரேந்திர மோடியை மகிழ்ச்சி அடையச் செய்வதற்காக, சாவர்க்கரைப் புகழ்ந்து பாராட்டி மரியாதை செய்தாலும், ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

நன்றி: "ஃப்ரண்ட் லைன்", 4.8.2017

தமிழில்: த.க. பாலகிருட்டிணன்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner