எழுத்துரு அளவு Larger Font Smaller Font


மத்திய பிஜேபி அரசைக் கண்டித்து மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாடு

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

கீழமை நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் மாநிலங்களின் அதிகாரத்தை பறித்து தம் அதிகாரக்குடையின் கீழ் கொண்டு வர முயற்சிக்கும் மத்திய பிஜேபி அரசைக் கண்டித்தும், மொழி உரிமை பறிப்பைக் கண்டித்தும், மக்கள் மன்றத்தை கூட்டி, வரும் செப்டம்பரில் மாநில உரிமைகள் பாதுகாப்பு மாநாட்டை நடத்திட ஏற்பாடு செய்து வருவதாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:-

மாநில உரிமைகளை மிக வேக வேகமாக பறிப்பதிலும் அதன் மூலம் மாநிலங்களின் ஆட்சி - அதிகாரம் மெல்ல நீக்கப்பட்டு நாட்டில் ஒற்றை ஆட்சி முறையே நீடிக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ். கொள்கையை, பிரதமர் மோடி தலைமையில் கடந்த 3 ஆண்டுகளாக நடக்கும் மத்திய அரசு செய்து வருகிறது.

ஆழ்ந்த சூழ்ச்சித் திட்டம்

பன் மதங்கள், பல மொழிகள், பல கலாச்சாரங்கள் உள்ள பரந்துப்பட்ட இந்தியாவை, 'ஹிந்துநாடாக்கவே' வேகமான ஒற்றை ஆட்சிக்கான முறைகளை, நீட் தேர்வு என்ற ஒற்றை மத்திய தேர்வு முறை; இதை ஏற்காத மாநிலங்களிலும் கட்டாயத் திணிப்பு, ஹிந்தி - சமஸ்கிருத ஒற்றை மொழித் திணிப்பு, ஒற்றை வரி என்பதன் மூலமும், ஒரே தேர்தல் என்றும் ஆழ்ந்த சூழ்ச்சித் திட்டத்தை நாளும் வெளியிட்டு வருகிறது!

கீழமை நீதிமன்றங்களில் நீதிபதிகளை மாவட்ட நீதிபதிகள் வரை நியமிக்கும் அதிகாரம் கடந்த 70ஆண்டுகளுக்குமேல் மாநிலங்களின் அதிகாரத்தின்கீழ், அந்தந்த மாநில பப்ளிக் சர்வீஸ் கமிஷன், ஆங்காங்குள்ள உயர்நீதிமன்ற ஒருங்கிணைப்புடன் நடைபெற்று வந்தது.

'நீட்' தேர்வு போல் நடத்தி பறிப்பது

திடீரென்று இன்று அத்தகைய பதவிகளை - அதாவது கீழமை நீதிமன்ற நீதிபதிகளையும் நியமிக்கும் அதிகாரத்தை 'நீட்' தேர்வு போல் ஒன்றை நடத்தி, பறித்துத் தம் அதிகாரக்குடையின் கீழ் கொண்டு வர செய்யும் ஏற்பாடு மிகவும் கண்டனத்திற்குரியதாகும்!
இந்த ஏற்பாடு செயல் வடிவம் எடுக்குமானால், அதன் விளைவு இரண்டு வகையில் மிக மோசமாகி விடும்.

1. சமூக நீதி என்ற ஒடுக்கப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினரின் இடஒதுக்கீடு நிச்சயம் குழிதோண்டிப் புதைப்படக் கூடும்.

2. மாநிலங்களின் உரிமைகள் பறிப்பு தொடரில் இது ஒரு அடுத்த அம்சமாகவும் மத்திய ஆட்சியின் போக்கு இருக்கிறது!

தங்களது அரசமைப்புச் சட்டத்தின் - ஒப்புமை பெற வேண்டிய பட்டியலில் (Concurrent List) (இதைத் தவறாக 'பொதுப்பட்டியல்' என்று தமிழாக்கம் செய்தல் சரியில்லை என்பது நமது கருத்து) உள்ள கல்வியை - மறைமுகமாக மத்திய அரசுப் பட்டியலுக்கே கொண்டு செல்லும் முயற்சி என்பதேயோகும்!

'இந்திய கூட்டாட்சி' (india is a union of states) என்ற இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கருத்தே, மங்கிடவும் மாறிடவும் திட்டமிட்டே செய்யப்படுகிறது.

மொழி உரிமை பறிப்பைக் கண்டித்து

ஒத்த கருத்துள்ளவர்களை திரட்டி மாநாடு

இதுபோன்று மொழி உரிமை பறிப்புப் செம்மொழி தமிழ் என்பதையே ஏதோ ஒரு மத்திய பல்கலைக்கழகத்தின் 'பத்தோடு பதினொன்று' துறை என்று ஆக்கி ஒன்றுமில்லாமல் செய்திடும் போக்கு பற்றி கண்டித்து மேல் நடவடிக்கை எடுப்பது பற்றி ஒத்த கருத்துள்ளவர்களை ஒன்று திரட்டி - மக்கள் மன்றத்தை கூட்டி, இம்மாதத்திலேயோ அல்லது வரும் செப்டம்பரிலோ மாநில உரிமைகள் பாதுகாப்பு - (ஹிந்தி - சமஸ்கிருத திணிப்பு ஆகியவை உட்பட) மாநாடு ஒன்றை திராவிடர் கழகம் நடத்திட ஏற்பாடு செய்து வருகிறது! விரைவில் தேதி அறிவிப்போம்.

காலத்தின் கட்டாயமாகவும் மாநாடு அமையும் என்பது உறுதி!

சென்னை                                                                                                                          தலைவர்
8-8-2017                                                                                                                       திராவிடர் கழகம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner