எழுத்துரு அளவு Larger Font Smaller Font


‘‘ஊசி மிளகாய்’’

நாட்டில் விவசாயிகள் வேதனையால் வெந்து கருகி, தற்கொலை செய்து கொள்ளும் போக்கு நாளுக்கு நாள் பெருகியே வருகிறது!
ஆனால் இன்றைய நாளேடுகளில் வந்துள்ள இரண்டு செய்திகளைப் படித்தால், புத்தியும், மனிதாபிமானமும் உள்ள எவருக்கும் நெஞ்செரிச்சல் ஏற்படவே செய்யும் என்பது உறுதி.

திருப்பதியில் உள்ள மெகா கோடீசுவரக் கடவுளான வெங்கடாஜலபதிக்கு ஊர்வலம் நடத்த 'தங்க சர்வ பூபாள வாகனம்' தயாராகிக் கொண்டிருக்கிறதாம்!

அதுவும் 9 கோடி ரூபாய் செலவில். மிக உயர்ந்த 'பெராரி' கார் வாங்கினால் கூட இவ்வளவு விலை இருக்காதோ என்னமோ!
எதற்காக இப்படி 'சந்தனம்' மீந்து விட்டால் எந்தெந்த இடங்களில் பூசுவது என்று தெரியாது பூசிக்கொள்வது போல உள்ளது - இச்செய்கை!

எதற்குப் பயன்படும் இந்த வாகனம்? அப்படி அந்தக் கடவுள் சவாரியா செய்கிறது? ஏதோ ஒரு நாள் கூத்து - ஆண்டில் - மற்ற நாள் கருவறைச் சிறையில் தானே இருப்பார்?

மற்றொரு செய்தியையும் பாரீர்!

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் சுமார் 2 1/2 கோடி ரூபாய் செலவில் செய்த 'தங்க நாகாபரணம்' செய்து வைக்கிறார்கள் இவ்வாண்டு!

தங்கப் பாம்பை செய்பவரின் முன்பாக, நேரில் பாம்பாக கடவுள் வந்தால், என்ன செய்வார்கள்?

2 1/2 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் முடக்கப்படுகிறது! ஜி.எஸ்.டி.யெல்லாம் இங்கே நுழையுமோ யாம் அறியோம் பராபரமே!
மதுரை மீனாட்சியின் 'மூக்குத்தி 5 லட்சம் ரூபாய் - வைர மூக்குத்தி என்பது ஏன்?

இவைகள் எல்லாம் வறுமை ஒழிப்புத் திட்டமா?

"கடவுளின் பிள்ளைகள்" தானே ஏழை பட்டினி விவசாயிகள்! அவர்களுக்கு எந்தக் கடவுளும் கருணை காட்டவில்லை என்பது ஒரு புறமிருந்தாலும், அது மட்டுமா? ராஜஸ்தானில் தக்காளி விலை மேலே மேலே பறக்கிறது; வெங்காயவிலை அதற்கும் மேலே, அதுவும் அதன் உற்பத்தி மாநிலமான மகராஷ்டிரத்தில் அவற்றின் விலை தக்காளி ஒரு கிலோ 100 ரூபாய்,  அரிசி கிலோ 75 ரூபாய் - வெங்காயம் குவிண்டால் 500 ரூபாய் இப்போது ரூபாய் 2,200 - இடைத்தரகர்களே கொழுக்கிறார்கள் என்றாலும் கடவுளர், கடவுளச்சிகளுக்கு தங்க வாகனம், சர்ப்ப ரூபம்.

நம்ம 'பொன்னார்' மண்டைக்காடு (ஆர்.எஸ்.எஸ். முன்பு எம்.ஜி.ஆர். ஆட்சியில் கலவரம் செய்ததே அந்தப் பூமியில்) பகவதி அம்மனுக்கு தங்கத்தேருக்கு மத்திய அமைச்சர் நிதி திரட்டுகிறாராம்!

என்னே அதிகார துஷ்பிரயோகம்! - தேவையா?

மண்டைக்காடு, குமரி, மீனவர் வாழ்வு நலவாழ்வா? துன்ப வாழ்வா? எண்ணிப் பார்த்தது உண்டா?

பக்தி வந்தால் புத்தி போகும் என்றாரே பெரியார், அது எவ்வளவு உண்மை பார்த்தீர்களா?

இவை எல்லாம் 'பெரியவர்களின் பிள்ளை விளையாட்டு அல்லவா? - தேவையா?

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner