எழுத்துரு அளவு Larger Font Smaller Fontதஞ்சை கதிராமங்கலத்தில் எண்ணெய்த் துரப்பணப் பணிகளால் அப்பகுதி மக்க ளுக்கு ஆபத்து ஏற்படுவதால், எதிர்ப்புத் தெரிவித்த, அம்மக்கள்மீது தடியடி, கைது, குண்டர் சட்ட மிரட்டல்கள் தேவைதானா? கைதானவர்களை உடனே விடுதலை செய்து பேச்சு வார்த்தை மூலம் தமிழக அரசு சுமுகத் தீர்வு காணட்டும் என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்

கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:

'குடிதழீஇக் கோலோச்சும்' அரசே ஜனநாயகக் குடிஅரசு - மக்களாட்சியாகும்!


மத்தியில்  பிரதமர் மோடி தலைமையில் உள்ள அரசானாலும், மாநிலத்தில் தற்போது உள்ள அ.தி.மு.க. அரசானாலும் - அறிவிப்புகளுக்கும், அதாவது பேச்சுக்கும் - நடத்தை - செயற்பாடுகளுக்கும் முரண்பட்ட நிலையிலே நடைபெறும் அரசுகளாக இருப்பது அவர்கள் பதவியேற்குமுன் "அரசமைப்புச் சட்டத்தின் மாண்புகளை மதித்து, காத்திடுவோம்" என்று எடுத்த பிரமாணத்திற்கு நேர் எதிரானதாகவே உள்ளன!

காவிச் சின்னங்கள்

'பசு பாதுகாப்பு' என்ற பெயரில், காலிகளும், கொலை வெறியாளர்களும் காவிச் சின்னங்களை - காக்கிச் சின்னங்களை புனைந்து கொண்டு காவல் துறையை விட தங்களுக்குத் தாங்களே முடிவு எடுத்து செயல்படுவோர்; சிறுபான்மையின இஸ்லாமியர், தாழ்த்தப்பட்ட "தலித்" சமூகத்தினர் பலரைக் கொல்ல பசு மாட்டை ஒரு போலிச் சாக்காக வைத்து பயங்கரவாதத்தைத் தங்கு தடையின்றி அமல்படுத்துகின்றனர்!
பிரதமர் ஏதோ ஒரு முறை இதற்குக் கண்டனம் என்று - அதுவும் காலந்தாழ்ந்து கூறிடுகிறார்.

உ.பி.யில் இப்படி உயிர்க்கொலை, ரவுடித்தனத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் கைது செய்த காவல்துறை பெண் அய்.பி.எஸ். அதிகாரியை - உ.பி.யின் காவிச் சாமியாரான முதல்வர் பணியிட மாறுதல் என்று 'தூக்கி அடித்து' எல்லையோரப் பகுதிக்கு அனுப்பியுள்ளார்!

'நீட்' தேர்வுக்கு எதிரான நிலைப்பாடு

தமிழ்நாட்டில் 'நீட்' தேர்வுக்கு எதிரான அ.தி.மு.க. அரசின் நிலைப்பாடு - தனியே இரண்டு மசோதாக்கள் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியான திமுகவும், அதன் செயல் தலைவர் எதிர்க்கட்சித் தலைவர்  தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும் மற்றும் அனைத்து எதிர்க்கட்சி களும் ஆதரித்து வாக்களித்து நிறைவேற்றி அய்ந்தரை  மாதங்களாகியும் அம்மசோதாக்கள்  ஊறுகாய் ஜாடியில் ஊறப் போடப்பட்டுள்ளன!

சமூகநீதியும் பறி போகிறது!

புதுக்கோட்டை நெடுவாசலில், ஹைட்ரோ கார்பன் எரிவாயு  தோண்டி எடுக்கும் ஒப்பந்தத்திற்குத் தமிழக அரசு ஒப்புதல் தரவில்லை என்று முதல்வர், அமைச்சர்கள் கூறி வருவது ஒருபுறம்; மறுபுறம் அதிகாரிகள் சென்று பூர்வாங்கப் பணிகளைச் செய்யும்போது, ஒட்டு மொத்த கிராம மக்களும் கட்சி, ஜாதி, மதம் என்ற எந்த பேதமும் இன்றி ஒன்றுபட்டு எதிர்க்கிறார்கள் - அறவழியில்!

அடக்குமுறையின் மூலம் தடுக்க நினைப்பதா?

அதனைக் கண்டு கொள்ளாமல், அடக்குமுறையின் மூலம் தடுக்க நினைப்பதா?

"டாஸ்மாக்" மதுக் கடைகள் எங்கள் ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையைச் சீரழித்துச் சின்னா பின்னமாக்கி வருகிறது என்று கிராமத்துத் தாய்மார்கள், பெண்கள் எதிர்ப்புத் தெரிவித்தால், அதனை அடக்கக் காவல் துறையை ஏவுவதா?  அம்மக்கள் தங்கள் வேதனையை, துன்பத்தை ஜனநாயக ரீதியில் வெளியிட வேறுவழிதான் என்ன? இதேபோல காவல்துறையை ஏவிவிட்டு, தடியடி நடத்தி திருப்பூரில் ஒரு காவல் அதிகாரி அத்துமீறி ஒரு பெண்ணின் கன்னத்தில் அறைவதா? 'காவல்துறை உங்கள் நண்பன்' என்பதற்கு இது அடையாளமா?

எந்த விசாரணையும் இன்றி அவ்வதிகாரிக்கு  பதவி உயர்வு (புரோமோஷன்) தருவதா? 

மக்கள் இவற்றை மறந்து விடுவார்களா? தேர்தல் எப்போது வந்தாலும் பிரதிபலிக்காதா?

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம் என்பது ஒரு சிறிய கிராமம் - குத்தாலம் அருகே!

விவசாயத்திற்கு  ஆபத்து!

அங்கே எண்ணெய்த் துரப்பணப் பணிகள் ளி.ழி.நி.சி. மூலம் நடத்துவதால் அங்குள்ள நிலங்கள் பாதிக்கப்பட்டு விவசாயத்திற்கு  ஆபத்து! அக்குழாய்கள் உடைந்து  குடிநீரிலும் கலந்து அந்த கிராமவாசிகளுக்குப் பாதகம் ஏற்படுகிறது என்ற வேதனையை வெளிப்படுத்தும் அறப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் ஜெயராமன் மற்றும் கிராமவாசிகள்மீது தடியடி, கைது, குண்டர் சட்ட மிரட்டல் - இவை தேவைதானா?  நடைபெறுவது ஜனநாயக ஆட்சியல்லவா!

எதேச்சதிகார ஆட்சி

மக்கள் தங்களது நியாயமான வேதனைகளை - இழப்புகளை - அச்சத்தை வெளியிடும்போது, தமிழக அரசின் முதல்வர் மற்றும் அமைச்சர்களும் அம்மக்களைச் சென்று சந்தித்தோ, அல்லது அவர்களது பிரதிநிதிகளை, பேராளர்களை - நேரில்   வரவழைத்துப் பேசியோ, சுமுகமான முறையில் தீர்வு காண முயற்சி செய்யாது,  அடக்குமுறையை ஏவி விடுவது விரும்பத்தக்கதா? அவர்களது அச்சத்தைப் போக்குவதற்குப் பதில் போலீஸ் குண்டாந்தடியும், சிறை வாழ்வும் என்றால், நாம் என்ன எதேச்சதிகார ஆட்சியின் கீழா இருக்கிறோம்?

நோயாளிகளுக்குத் தேவை சிகிச்சை என்பதுபோல, அம்மக்களின் வேதனையை - விசாரத்தைத் தீர்க்கும் தீர்வு தான் முக்கியமே தவிர, அடக்குமுறைப் பாணம் அல்ல!

'கடிதோச்சி மெல்ல எறியும்' அணுகுமுறையை காவல்துறையோ அதன் பொறுப்பு மிக்கவர்களோ கையாளவேண்டும்.

கைதானவர்களை உடனே விடுதலை செய்து பேச்சு வார்த்தை மூலம் சுமுகத் தீர்வு காணட்டும்!

சென்னை      தலைவர்
8-7-2017       திராவிடர் கழகம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner