எழுத்துரு அளவு Larger Font Smaller Font

'முரசொலி'க்கு 'விடுதலை'யின் பாராட்டு

முத்தமிழ் அறிஞரும், மானமிகு சுயமரியாதைக்காரருமான நமது கலைஞரின் மூத்த முதற்பிள்ளை “முரசொலி" நாளேட்டிற்கு நாளை 75ஆவது ஆண்டு பவள விழாக் கொண்டாட்டம்!

“முரசொலி" நாளேடு - அரசியல் கட்சியான தி.மு.க.வின் பகுத்தறிவு நாளேடு!

மூடநம்பிக்கைச் செய்திகளோ, ஜோதிட, ராசி பலன் பிழைப்போ அதனிடம் இல்லாத 'அதிசய' அரசியல் நாளேடு 'முரசொலி'!

கையெழுத்துப்பிரதி, துண்டறிக்கை போன்று அச்சிடப்பட்ட இதழ், வார ஏடு - இப்படிப் பல பருவங்களைக் கடந்து வளர்ந்தோங்கி நிற்கும் "முரசொலி" நமது சகப்போராளி ஏடு ஆகும்! நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!!

 

நமது 'விடுதலை'க்கு 83 ஆண்டுகள்!
நமது 'முரசொலி'க்கு 75 ஆண்டுகள்!

- இந்த இரண்டு திராவிடர் இயக்கத்தின் தமிழ் நாளேடுகள் - வாளாகப் போரிடும் ஆயுதங்கள்! - இவை சந்தித்த எதிர்ப்புகள், அடக்குமுறைகள், சோதனைகள் கொஞ்ச நஞ்சமல்ல...!

அவை எல்லாம் அவற்றின் விழுப்புண்கள்தான்! பல லட்சங்கள் - பிரதிகள் ஓடும் ஏடுகள் என்பதைவிட, சமூகத்திற்குத் தேவையான லட்சியங்களைப் பரப்பும் சமூக மருத்துவ ஏடுகள் - நமது நாளேடுகள்!

"நெருக்கடி நிலை கால"த்தில் 1976 ஜனவரி முதல் 1977 வரை இந்த இரண்டு தமிழ் நாளேடுகளும் சந்தித்த அன்றாடச் சோதனைகள், எவராலும் எளிதில் ஏற்று செரிமானம் செய்யப்படக்கூடியவையல்ல!

'முரசொலி'யின் முழக்கம் தொடர்ந்து கேட்பதற்கு, கலைஞரால் அடையாளம் காணப்பட்ட ஆற்றல்மிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆற்றல் செயல் திறனே இன்று முக்கிய காரணம் ஆகும்!

இயக்க நாளேடுகளை நடத்துவது என்பது சறுக்கு மரம் ஏறும் பணி போன்றது என்றாலும், சறுக்காத, சளைக்காத சரித்திரம் படைத்து வரும் 'முரசொலி' என்னும் முத்தமிழ் அறிஞரின் மூத்த செல்வத்துக்கு நமது தாய்க்கழகத்தின் நெஞ்சம் நிறைந்த பாராட்டு, முத்தங்கள்!

"காரிருள் அகத்தில் நல்ல
கதிரொளி நீதான்! இந்தப்
பாரிடைத்துயில்வோர் கண்ணிற்
பாய்ந்திடும் எழுச்சி நீதான்!"
- புரட்சிக்கவிஞர்

திராவிடர் இயக்கத்தின் முனை மழுங்காத கருவியாம்  'முரசொலி'யின் முன்னேற்றம், திராவிடர் தம் எழுச்சி, ஏற்றம், சமுதாய மாற்றம், என்பதை மறவாதீர்! ஆதரிப்பீர்!!

வாழ்க! வளர்க!!


சென்னை                                                                                                                            ஆசிரியர்
9.8.2017                                                                                                                             விடுதலை

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner