எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திராவிடர் இன வரலாற்றில் அதன் ஏடுகள், இதழ்கள் பொறித்த முத்திரைகள் முன்னுதாரணம் இல்லாத வகையில் பெரும் சாதனை முத்திரைகளைப் பொறித்தவையே!

பழைமைச் சனாதானச் சேற்றில் முகம் தெரியாத அளவுக்கு மூழ்கிக் கிடந்த இன மக்களிடையே தன்மான உணர்வைத் தட்டி எழுப்பி, பகுத்தறிவுச் சிந்தனைத் தீயை மூட்டி, இன இழிவின் இருளை எடுத்துக்காட்டி, சமூக நீதிக்கான போர்ச் சங்கை ஊதி, மூடநம்பிக்கைக் காட் டைச் சுட்டெரித்து, மண்ணுரிமைக்காக மகத்தான குரலெழுப்பி, ஆரியத்தின் ஆணவக் கட்டமைப்பை அக்குவேறு - ஆணி வேறாகப் பிய்த்துத் தோரணமாகத் தொங்கவிட்டு, வருணாசிரமம், ஜாதி அமைப்பின் வேர்களைப் பொசுக்கும் தீப் பந்தத்தை ஏந்தச் செய்த வீரசாகசத்துக்கு சொந்தமானவைதான் - திராவிடர் இயக்க ஏடுகள்!

ஆண் என்றால் எஜமானர், பெண் ணென்றால் அடிமை என்னும் மனுதர்மத் தின் கோரைப் பற்களைப் பிடுங்கி எறிந்து, பகுத்தறிவு - சுயமரியதை என்னும் புதிய தோர் உலகைப் படைத்திட திராவிட இயக்க ஏடுகளும், இதழ்களும் ஆற்றியிருக்கும் அரும்பெரும் தொண்டுகள் அனந்தம்! அனந்தம்!!

இவற்றிற்காக இவை கொடுத்த விலைகள் - பட்ட இன்னல்கள் - இரணங்கள் - ஏற்ற இழப்புகள் - சந்தித்த அடக்குமுறைகள் - ஜாமின் தொகைகள் - பறிமுதல்கள் -ஆசிரியர்களும், பதிப்பாளர்களும் வெஞ்சிறை ஏகவேண்டிய கட்டாயம் என்று எடுத்துக் கூறிக் கொண்டே போகலாம்.

இந்த வகையில் விடுதலை 83ஆம் ஆண்டில் பயணிக்கிறது என்றால் முரசொலி பவள விழா என்னும் பவழம் அணிந்து 75ஆம் ஆண்டில் ஜொலிக்கிறது.

துண்டறிக்கைத் தாளாகத் தொடங்கி, கையெழுத்துப் பிரதியாக நடைவண்டியில் பயின்று - பரிணாம வளர்ச்சி பெற்று 75ஆம் ஆண்டில் ஈடு இணையற்ற வெற்றிப் புன்னகையை முறுவலிக்கிறது 'முரசொலி'.

அதனை ஆவணப்படுத்தும் வகையில் சென்னை கோடம்பாக்கத்தில் அமைந்துள்ள முரசொலி ஏட்டின் வளாகத்தில், முரசொலி தொடர்பான காட்சி அரங்கம் அறிவியல் சாதனைகளின் யுக்தியோடு - அடேயப்பா! ஆயிரம் கால் சிங்காரத் தேராக, கலை வண்ணத்தின் கைத்திறனாக, 75 ஆண்டு கால வரலாற்றின் ஆவணப் பெட்டகமாக அணி வகுக்கச் செய்த ஆற்றலை, முயற்சியை, உழைப்பினை எவ்வளவுப் பாராட்டினாலும் தகும்! தகும்!! பார்த்தோர் நெஞ்சில் புத்தெழுச்சியைத் தரும்! தரும்!!

திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்கள் வரிசையில் இன்று இருக்கக்கூடியவரும், முரசொலியின் நிறுவனர் - ஆசிரியர் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களோடு மாணவப் பருவந் தொட்டு தோளோடு தோள் நின்று பிரச்சாரகராக, களப் பணியாளராக விளங்கிக் கொண்டிருப்பவரும், அவரால் அன்பு இளவல் என்று ஆரத்தழுவப்படுபவரும், திராவிட இயக்கத்தின் மூத்த போர்க்கருவி நாளேடான விடுதலையின் 55 ஆண்டுகால மூத்த ஆசிரியருமான மானமிகு கி.வீரமணி அவர்கள் முரசொலி பவள விழாவையொட்டி ஒப்பனை ஒளி பாய்ச்சிய முரசொலி காட்சி அரங்கத் திறப்பு விழாவிற்குத் தலைமை தாங்குவதுதானே பொருத்தம்! பொருத்தம்!!

தமிழர் தலைவர் ஆசிரியர் நேருக்கு நேர் சொன்னது போல திராவிட இயக்க ஏடுகளின் கொள்கைகளுக்கு எதிர்முனையில் இருக்கும் நூற்றாண்டு கண்ட (1878) இந்து (ஏட்டின்) குழுமத்தின் தலைவர் என்.ராம் அவ்விழாவில் பங்கேற்று காட்சி அரங்கத்தினைத் திறந்து வைத்தது வித்தியாசமான ஒரு நிகழ்வு என்பதில் அய்யமில்லை.

இந்து ராம் அவர்கள் செய்தியாளர் களிடம் சொல்லும் போது, திராவிட இயக்கம் - அதன் ஒப்பற்ற ஏடுகளான விடுதலை, முரசொலியின் வரலாற்றுப் பங்கு, தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோர்களின் பெரும் பணிகளைச் சுட்டிக் காட்டியதும் குறிப்பிடத்தகுந்த தகவல்களும், கருத்துமாகும்.

சரியாக இன்று காலை 9.45 மணிக்கு முரசொலி அலுவலக வளாகத்திற்கு வருகை தந்த கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை, திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் வாயிலில் நின்று பூங்கொத்து கொடுத்து, பட்டாடை அணிவித்து கைகுலுக்கி வரவேற்றார்.  இந்து குழுமத் தலைவர் என்.ராம் அவர்களையும் அவ்வாறே சிறப்பு செய்து அன்புடன் வரவேற்றார்.


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner