எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மக்கள் மன்றம்தான் இறுதி தீர்ப்பாகும்

சென்னை, ஆக. 12- தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 'நீட்' தொடர்பான மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற மாநில அரசு தவறியுள்ளது; உச்சநீதிமன்றம் பொருத்தமற்ற வினாக்களை எழுப்பியுள்ளது. இந்த நிலையில் இறுதி நம்பிக்கை மக்கள் மன்றமே என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

தமிழ்நாட்டுக் கிராம மக்களின் பிள்ளைகளையும், மாநில பாடத் திட்டத்தில் படித்தவர்களையும் டாக்டராக விடாமல் தடுக்கும் 'நீட்' தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்குத் தேவை என்று மத்திய அரசை, குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றுத் தரும் வகையில், தமிழக சட்டமன்றத்தில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பே திரு. ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் முதல் அமைச்சராக இருந்தபோதே, 2 மசோதாக்கள் - எதிர்க்கட்சிகளான தி.மு.க., காங்கிரசு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு அவை மத்திய அரசின் உள்துறையில் நிலுவையில் உள்ளன!

இதற்கிடையே மத்திய அரசின் பிரதமர் தொடங்கி, மத்திய சுகாதார அமைச்சர், மனிதவள அமைச்சர், உள்துறை அமைச்சர்களோடு சந்திப்பு, முறையீடுகள், மீண்டும் ஓர் அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் என்றெல்லாம் தமிழ்நாட்டு முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் டில்லிக்குப் பலமுறை படையெடுத்தும், 'எண்ணெய்ச் செலவே தவிர பிள்ளை பிழைத்த பாடில்லை‘ என்ற பழமொழிக்கேற்ப உருப்படியான பலன் ஏதும் இன்று வரை கிடைக்கவில்லை.

மத்திய அரசைப் போட்டிப் போட்டுக் கொண்டு ஆதரித்தும் பலன் என்ன?

மத்திய ஆளுங்கட்சிக்குள் பா.ஜ.க.வின் குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல்களுக்குக் கூட தமிழ்நாட்டு அதிமுகவின் மூன்று அணி எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்களும் ஒருவரை ஒருவர் முந்திக் கொண்டு வாக்களித்து வெற்றி பெற வைத்தும் கூட, டில்லியின் இசைவு இதுவரை இந்தப் பிரச்சினையில் கிடைக்காதது ஏமாளிகளைப் போன்ற தமிழ்நாட்டு மக்களை வெட்கமும், வேதனையும் அடையச் செய்கிறது!

இதற்கிடையில் யாரோ சில அதிகாரிகள் கூறிய யோசனைகளை ஏற்று 85 சதவிகித இடஒதுக்கீடு மாநிலப் பாடத்திட்டத்தில் படித்தவர்களுக்கே என்று அரசு ஆணையைப் போட்டது இப்போதுள்ள திரு. இ.பழனிச்சாமி தலைமையில் உள்ள அரசு.

அப்போதே நாம் இது சட்டப்படி நிற்குமா என்ற அய்யத்தை எழுப்பவே செய்தோம்!

சென்னை உயர்நீதிமன்றம் இதனைச் செல்லாது என்று தீர்ப்பளித்தது. அதனைத் எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ததில் சென்னை உயர்நீதிமன்றத்தின் 85 சதவிகித இட ஒதுக்கீடு ஆணை செல்லாது என்ற தீர்ப்பை, அது நேற்று (11.8.2017) உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.

உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விகள்
நியாயமானது தானா?

இதுபற்றிய தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள் - உள்நோக்கமற்றவை என்ற போதிலும் - முற்றிலும் சட்டவிரோதமான, தேவையற்ற கேள்விகளாகும். பாதிக்கப்பட்ட மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியவர்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது!

நாடு முழுவதும் 'நீட்' தேர்வு நடக்கும் போது தமிழகத்துக்கு மட்டும் விலக்குக் கேட்பதா என்று கேட்டிருப்பது நமது மாநில உரிமையையே மறுதலிப்பதாக உள்ளது!

இந்தக் கேள்விக்கு நாம் பதில் அளிப்பதைவிட, ஏற்கெனவே உச்சநீதிமன்றத்தின் மற்றொரு தீர்ப்பு ஆணை காரணமாக, முழுமையாக விசாரிக்காமலே நிறுத்தி, வைக்கப்பட்டு முடிக்கப்பட்டுவிட்ட 'நீட்' பற்றிய கேள்விகளே தக்க பதிலாகும்!

நீட் தேர்விலிருந்து விலக்குக்

கேட்கக் கூடாதா?

'நீட்' தேர்விலிருந்து தமிழ்நாடு விலக்குக் கோருவது எந்த வகையில் சட்ட விரோதம் ஆகும்?

அதுமட்டுமா? இந்த 'நீட்' தேர்வுக்கு மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறிய நிலையில், நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிந்துரைகளில் முக்கியமான ஒன்று, 'நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரும் உரிமை எந்த மாநிலத்திற்கும் உண்டு' என்பது தானே!

அத்துடன் நீட் தேர்வு கல்வி அடிப்படையில் ஒப்புதல் பெற வேண்டிய அதிகாரப் பட்டிய (Concurrent List) லின் கீழ் உள்ளது என்பதை மாண்பமை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறியாதவர்களா?

தமிழ்நாட்டின் சமூகநீதி
வரலாறு எத்தகையது!

85 சதவிகித ஆணை செல்லாது என்பதுடன் நிறுத்திக் கொண்டிருந்தால் அது சட்டப்படி சரி! ஆனால் தேவையற்ற கேள்விகளை இப்படி எழுப்புவது எவ்வகையில் சரியானது? தமிழ்நாடு கேட்பதற்கு காரணங்கள் பல உண்டு; தமிழ்நாடு சமூகநீதியின் முன்னோடி.
தமிழ்நாட்டில் 21 ஆண்டுகளாக ஏற்காது, தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து இறுதியில் குடியரசுத் தலைவர் ஒப்புதலுடன் நுழைவுத் தேர்வுக்கு எதிரான சட்டம் இயற்றி அமுல்படுத்திய மாநிலம் என்பதோடு,

இந்த நீட் தேர்வு வந்தவுடன் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது முதலாண்டு விதி விலக்குக் கேட்டுப் பெற்று நடைமுறைப்படுத்திய மாநிலம்.

மேலும் 9ஆம் அட்டவணையின் கீழ் இந்தியாவிலேயே இடஒதுக்கீடாக 69 சதவிகித இடஒதுக்கீடு - தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு கல்வி, வேலை வாய்ப்புகளில்  தமிழ்நாடு பெற்று வருகிறது (1989). அதற்கு முன்பே 68 சதவிகிதத்தை (1980) 37 ஆண்டுகளாக அனுபவித்து வருகிறது. சட்ட ரீதியாக, இந்தியாவிலேயே இந்த சாதனை தமிழ்நாட்டுக்கு மட்டுமே உண்டு!

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் முதலாவது சட்டத் திருத்தம் நிறைவேறிடப் போராடி வெற்றி கண்ட மாநிலம், 76ஆவது அரசியல் சட்டத் திருத்தத்திற்குக் காரணமான மாநிலம் என்பதை உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்குத் தெளிவுபடுத்திச் சுட்டிக் காட்டியிருக்க வேண்டாமா?

தமிழ்நாடு அரசின்
இரட்டை வேடம் எடுபடாது!

ஏதோ ஒப்புக்குப் பேசுவதுபோல இப்படி வித்தைகள் காட்டுவதான தமிழக அரசின் இரட்டை வேடம் எவ்வளவு நாளைக்குச் செல்லும்?

'நீட்' தேர்வுக்கு மக்கள் மன்றம்தான் இறுதி நம்பிக்கையாகும்!

மக்களைத் திரட்டுவோம்; மனுநீதி சாய்ப்போம்!

இந்தக் கேள்விகளுக்கு விடை எங்கே?

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் மதிப்பெண்ணுடன் 12ஆம் வகுப்பு மதிப்பெண்ணை சேர்க்கக்கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. (9.6.2017) விசாரணையின் போது நீதிபதிகள் சிபிஎஸ்இ நிர்வாகத்தினரைப் பார்த்து பல முக்கிய கேள்விகளைக் கேட்டனர்.

1. இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டம் இல்லாத நிலையில் நீட் தேர்வை எதிர்கொள்வது எப்படி?

2. 12ஆம் வகுப்பு தேர்வு முடிந்தவுடன் நீட் தேர்வு நடத்தாததற்கு காரணம் என்ன?

3. சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலிருந்து அதிக கேள்விகள் கேட்கப்பட்டதன் காரணம் என்ன?

4. கல்வித்தரம் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபாட்டுடன் இருக்கும் நிலையில் நீட் தேர்வை மாணவர்கள் எப்படி எதிர்கொள்வார்கள்?

5. கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கும் கல்வித்தரம் வேறுபடும்போது அனைவரும் சி.பி.எஸ்.இ தேர்வை எப்படி எதிர்கொள்ள முடியும்?

6. மாநில மொழிகளில் உள்ள வினாத்தாள்களுக்கும், இந்தி, ஆங்கிலம் மொழிகளில் உள்ள வினாத்தாள்களுக்கும் வேறுபாடுகள் எப்படி வந்தன?

- என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மிகச் சரியான, நியாயமான இந்த வினாக்களை உச்சநீதிமன்றம் பொருட்படுத்தாதது சரியா?

சென்னை                                                                                                                                    தலைவர்
12.8.2017                                                                                                                               திராவிடர் கழகம்தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner