எழுத்துரு அளவு Larger Font Smaller Font


தொலைக்காட்சிக்கு தமிழர் தலைவர் அளித்த பேட்டி

சென்னை, ஆக. 13- மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு நீட்டிலிருந்து ஓராண்டுக்கு மட்டுமே விலக்கு என்பது, தற்காலிகமான முதலுதவி போன்றதே - நிரந்தரமாக விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதே தமிழ்நாட்டின் நிலைப்பாடு என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். நியூஸ் 18 தொலைக்காட்சிக்குப் பிரத்தியேகமாக அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் கிராமப்புறத்தைச் சேர்ந்தவர்களுக்கு ஓராண்டுக்கு மட்டும் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அவசரச்சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தால், அதனை மத்திய அரசு ஏற்று, இசைவு வழங்கும் என்று மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தெரிவித்துள்ள கருத்துக் குறித்து நியூஸ் 18 தொலைக் காட்சிக்கு  இன்று (13.8.2017) திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தெரிவித்த கருத்து வருமாறு:

மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்பு நோயாளிக்கு முதலுதவி அளிப்பது போன்றதே. அந்த வகையில் வரவேற்கத்தக்கதே! அதேநேரத்தில் நீட் நுழைவுத் தேர்வு அறவே கூடாது என்பதே தமிழ்நாட்டின் நிலை.

இந்தியாவிலேயே சமூக நீதித் திசையில் முன்னுதாரணமான மாநிலம் தமிழ்நாடு.

இங்கு 69 சதவீத இடஒதுக்கீடு என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் பாதுகாப்புப் பெற்றிருப்பது - இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான்! இந்தப்பிரச்சினையில் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு அதிக அக்கறை கொண்டதாகும்.

2007முதல் தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு கிடையாது. அதற்கான சட்டமும் இயற்றப்பட்டது.

கல்வி பொதுப்பட்டியலில் உள்ள நிலையில், நீட் தேர்வு குறித்து மாநில அரசின் கருத்து கேட்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு கேட்கப்படாமல் தன்னிச்சையாக மத்திய அரசு நீட்டைத் திணிப்பது சட்ட விரோதமானது, - நியாய விரோதமானது.

கிராமப்புற, நகர்ப்புற தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும். இந்தியா முழுவதும் ஒரே வகையான கல்வி இல்லாத நிலையில் சிபிஎஸ்இ கல்வித்திட்ட அடிப்படையில் வினாத்தாள் தயாரிப்பது எப்படி சம வாய்ப்பும், சம நீதியும் ஆகும?

இதனை உச்சநீதிமன்றம்கூடக் கேட்டிருக்கிறதே!

நீட் தேர்வை தமிழ்நாட்டு மாணவர்கள் சந்திக்கத் தயங்குவது ஏன் என்றும், மாநிலக் கல்வித்திட்டத்தில் உள்ள திறன் குறைபாடே இதற்குக் காரணம் என்று சொல்லுவதும் சரியல்ல!

சிபிஎஸ்இ அடிப்படையில் கேள்வித்தாளைத் தயாரித்துவிட்டு மாநிலக் கல்வித்திட்ட அடிப்படையில் படித்த மாணவர்கள் அதற்கு விடையளிக்கவேண்டும் என்று சொல்லுவதும், அந்த அடிப்படையில் தகுதியை நிர்ணயிப்பதும் எப்படி சரியாகும்?

வருணாசிரமக் கண்ணோட்டத்தில் சிபிஎஸ்இ என்பது உயர்ந்தது என்பதும் மாநிலக் கல்வித் திட்டம் என்பது தாழ்ந்தது என்பதெல்லாம் ஏற்றுக் கொள்ளப்பட முடியாதவை!

இன்றைக்கு நுழைவுத் தேர்வுக்கு வக்காலத்து வாங்கும் அனந்தகிருஷ்ணன் போன்றவர்கள்தான் 2007இல் நுழைவுத்தேர்வு கூடாது என்பதற்காக திட்டத்தைத் தயாரித்துக்கொடுத்த குழுவின் தலைவர்  என்பதை மறந்துவிடக்கூடாது.

காற்றடித்த திசையில் சிலர் செல்லுவதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

நிரந்தரத் தீர்வு என்பது நீட் தேர்வு கூடாது என்பதே. எங்களின் கருத்து - ஒட்டு மொத்த தமிழ்நாட்டின் கருத்து.

சமூகநீதி கோருவது சலுகையல்ல. சட்டப்படி யானது. மாநில அரசு இந்த ஆண்டு அதைப் பெற்றாலும்கூட,  அதோடு நிறுத்தி விடக் கூடாது. ஆனால், ஒன்று, இதுவரையிலே அந்தக் கோப்புகள் எங்கிருக்கின்றன என்று தெரியாது என்று சொன்ன அமைச்சர் இப்போது ஓராண்டுக்கு விதிவிலக்கு கொடுப்போம் என்று சொல்லும்போது மக்கள் சக்திக்கு இருக்கின்ற மரியாதையை இதன்மூலம் உணர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று பொருள் என்று கூறினார் திராவிடர் கழகத் தலைவர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner