எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மாநிலக் கல்வித் திட்டத்தின் கீழ் படித்து டாக்டர்கள் ஆனவர்கள் சிறந்தவர்களாகவே ஒளி வீசுகிறார்கள்

சிபிஎஸ்இ கல்வி திட்டமே உயர்ந்தது என்று கூறி புதிய வருணாசிரமத்தைத் திணிக்க வேண்டாம்!
தேவை 'நீட்'டிலிருந்து நிரந்தர விலக்கே!

கலைஞர் தொலைக்காட்சிக்கு தமிழர் தலைவரின் பிரத்தியேகப் பேட்டி

சென்னை, ஆக. 14- மாநிலக் கல்வித் திட்டத்தின் கீழ் படித்தவர்கள் சிறந்த டாக்டர்களாகத் தான் ஒளி வீசிக் கொண்டுள்ளனர். அப்படியிருக்கும்பொழுது சிபிஎஸ்இ அடிப்படையில் படித்தால்தான்தகுதி - திறமை வரும் என்பது ஒருவகையான வருணாசிரமக் கண்ணோட்டம், தமிழ்நாட்டுக்குத் தேவை நீட் டிலிருந்து நிரந்தர விலக்கே என்று கலைஞர் தொலைக்காட்சிக்கு தமிழர் தலைவர் பிரத்தியேகப் பேட்டி அளித்தார்.

மருத்துவ மாணவர் சேர்க்கையில்  நீட்  நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்துக்கு ஓராண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுவது குறித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கலைஞர் தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்தியேகப் பேட்டியின் விவரங்கள் வருமாறு:

செய்தியாளர்: தமிழகத்துக்கு இந்த ஓராண்டுக்கு மட்டும்  நீட்  தேர்விலிருந்து விலக்கு அளிப்பதற்கு அனுமதிக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள். இது எந்த வகையில் மாணவர்களுக்கு ஏற்றதாக இருக்கும்? கிராமப்புற மாணவர்களுக்கு ஏற்றதாக இருக்குமா? வருங்காலத்தில் என்ன செய்ய வேண்டும்?

தமிழர் தலைவர்:  நீட்  தேர்வுக்கு எதிராக தமிழக ஆளுங்கட்சியாக இருக்கக்கூடிய கட்சி உள்பட, நீட் தேர்வுக்கு எதிராக இருக்கிறோம் என்று சொல்லக் கூடிய அளவுக்கு நிலைமை இருக்கிறது. வெளிப் படையாக  நீட்  தேர்வு தேவை என்று சொல்வதற்கு பாஜகவைத் தவிர வேறு எந்த அமைப்பும் கிடை யாது.

மக்களிடையே எதிர்ப்பு

இந்த சூழ்நிலையிலே, மக்களுடைய எதிர்ப்பு என்பது நாளுக்கு நாள் பெருகிவரக்கூடிய சூழலில்,  நீட்  தேர்வை எதிர்த்து, தமிழகத்தைப் பொருத்த வரையிலே விலக்கு அளிக்க வேண்டும் என்ற இரண்டு மசோதாக்களை ஆறு மாதங்களுக்கு முன்னாலே தமிழக சட்டப்பேரவையிலே, திரு.ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலக்கட்டத்திலேயே இது வந்து, எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்ற தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், திமுக, காங்கிரசு, இந்திய யூனியன் முசுலீம் லீக் உள்பட அனைவரும் அதற்கு ஆதர வைத் தெரிவித்து ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட அந்த மசோதாக்கள் இரண்டும், டில்லியிலே அப் படியே ஊறுகாய் ஜாடியிலே ஊறிக்கொண்டிருக் கின்றன.

நாங்கள் பிரதமரைப் பார்த்தோம், உள்துறை அமைச்சரைப் பார்த்தோம், சுகாதாரத்துறை அமைச் சரைப் பார்த்தோம், கல்வி அமைச்சரைப் பார்த்தோம் என்றெல்லாம் திரும்பத் திரும்ப நம்முடைய அமைச் சர்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்களே தவிர, அந்த மசோதாக்கள் சட்டமாக ஆகியிருந்தால், இந்த அவசர சட்டத்துக்கு அவசியமே ஏற்பட்டிருக்காது.

இரண்டாவது, அதை குடியரசுத் தலைவரிடமே கொண்டுபோய் சேர்க்காமலேயே மத்திய அரசு குறுக்கே கட்டையைப் போட்டுவிட்டு, அவர்கள் கருத்தைச் சொல்கிறார்கள்.

அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது

ஆரம்பத்திலேயே தெளிவாகச் சொன்னதைப் போல,  நீட்  தேர்வு என்ற அனைத்து இந்தியாவுக்கும் பொதுவான ஒரு மருத்துவ நுழைவுத் தேர்வு இருக்கிறதே, அந்த நுழைவுத் தேர்வை நடத்துவதற்கு அரசமைப்புச்சட்டத்தின்படி, மத்திய அரசுக்கு முழு அதிகாரம் கிடையாது. மாநில அரசும் ஒப்புதல் அளிக் கப்பட வேண்டிய பட்டியலிலே கல்வி இருக்கிறது. எனவே, நமக்கும் அதிலே உரிமை இருக்கிறது. நம் முடைய அவர்கள் பெற்றாக வேண்டும்.

நீட்  தேர்வு என்ற ஒரு தேர்வை நுழைக்க வேண்டும் என்று மத்திய அரசாங்கத்திலே நினைத்த நேரத்திலே, நாடாளுமன்ற நிலைக்குழு ஒன்றை நியமித்து, இதைப்பற்றி ஆய்வு செய்தார்கள்.

அதனுடைய முக்கியமான பரிந்துரைகளில் ஒன்று, 'எந்த மாநிலம்  நீட்  தேர்விலிருந்து விலக்கு கோருகிறதோ, அந்த மாநிலத்திற்கு அதனுடைய விருப்பப்படி விலக்கு அளிக்க வேண்டும்' என்பது அந்தப் பரிந்துரையாகும்.

எனவே, அரசமைப்புச் சட்டப்படி, ஒரு மாநிலம்  நீட்  தேர்வில் கலந்துகொள்ளமாட்டோம், எங்களுக் குத் தேவையில்லை என்று சொன்னால், சொல்வ தற்கு முழு உரிமை அரசமைப்புச்சட்டத்தின்படி இருக்கிறது.

நாம் கோருவது பிச்சையல்ல

எனவே, இப்போது நீட் தேர்விலே விலக்கு வேண்டும் என்று நாம் கேட்பது இருக்கிறதே, இது மத்திய அரசாங்கத்திடமிருந்து நாம் கோரும் சலுகை அல்ல. பிச்சை அல்ல. மாறாக, அரசமைப்புச் சட் டத்திலே தெளிவாக இருக்கிற மாநில உரிமை. எனவே, இந்த  நீட்  தேர்வின் மூலமாக, சமூக நீதி பறிக்கப்படுகிறது என்பது ஒரு பக்கம், அதேநேரத் திலே மாநில உரிமையும் பறிக்கப்படுகிறது என்பது இன்னொரு பக்கம். இந்த இரண்டுக்கும் விடை காண வேண்டும் என்பதுதான், நம்மைப்போன்ற வர்கள்,  நீட்  தேர்வை எதிர்க்கக்கூடிய திராவிடர் கழகம், திமுக மற்றும் அனைத்து முற்போக்கு இயக் கங்கள், காங்கிரசு, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி இந்திய யூனியன் முசுலீம் லீக், மனித நேய மக்கள் கட்சி உள்பட எல்லா அமைப் புகளும் நீட்டை எதிர்த்துக்கொண்டிருக்கின்றன.

இந்த சூழ்நிலையிலே, பிடிவாதம் காட்டுவது என்பது கொஞ்சங்கூட நியாயம் இல்லை. அது மட்டுமல்ல, நாம் எதையெதையெல்லாம் இந்த  நீட்  தேர்வினால் தீய விளைவுகள் ஏற்படும், தமிழகத் துக்கு, கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று எடுத்துச்சொன்னோமோ, அதை நடைமுறையிலே பார்க்க வேண்டிய அளவிற்கு  நீட்  தேர்வு கேள்வித்தாள்களும், அது நடந்த முறையும் தெளிவுபடுத்திவிட்டன.

உச்சநீதிமன்றமே ஒப்புதல்

உச்சநீதிமன்றமே  நீட்  தேர்வில் தவறு நடந்துள் ளது என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறது. இனிமேல் அதுபோன்று நடக்காமல் பார்க்க வேண்டும், ஒரே மாதிரி யான கேள்விகள் இல்லை என்று கூறியுள்ளது.

பொதுத்தேர்வு என்று சொல்லிவிட்டு, இந்தியா முழுவதும் ஒரேவிதமான கேள்வித்தாள் இல்லை. குஜராத்துக்கு ஒரு கேள்வி, மேற்கு வங்காளத்துக்கு ஒரு கேள்வி, தமிழ்நாட்டுக்கு இன்னொரு கேள்வி, கேரளாவுக்கு இன்னொரு கேள்வி என்று சொன் னால், எப்படி ஒரு சீர்மையான, சமநீதியான, ஒரே விதமான அமைப்பாக இருக்க முடியும்?

ஒட்டுமொத்தமாகவே இது ரத்து செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.

தமிழகத்தைப் பொருத்த வரையிலே, நாம் இதைத் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கக் கூடிய அமைப்புகள் என்று சொல்லும்போது, இதில் சமூகநீதி அடிபடுகிறது. கிராமத்துப்பிள்ளைகளுக்கு உரிய வாய்ப்புகள் இல்லாமல் இருக்கின்றன.

இன்னொரு மிக முக்கியமான செய்தி என்ன வென்றால், எப்போது பொதுவான தேர்வு  நடத்த முடியும்? பொதுமையானத் தேர்வு என்றால்,  ஒரே கல்வி முறை இருந்தால், பொதுமையானத்  தேர்வு நடத்தலாம்.

ஒரே மாதிரியான கல்வி முறை உண்டா?

மாநிலத்துக்கு மாநிலம் கல்வி முறைகள் வேறு, சிபிஎஸ்இ முறை வேறு, மத்திய கல்வி முறை வேறு, மாநில கல்வி முறை வேறு என்று இருக்கக்கூடிய சூழ்நிலையிலே, கேள்விகளையெல்லாம், மத்திய கல்வித்துறை சிபிஎஸ்இ பாடத்திட்டத்திலே கேட்பது சமவாய்ப்பும் சமநீதியும் ஆகும்! அந்த பிள்ளைகளுக்கு ஒரு சலுகை, இந்த பிள்ளைகளுக்கு வாய்ப்பு கேடு என்றிருப்பது முறையல்ல என்பதையெல்லாம் சுட்டிக்காட்டிதான், தமிழ்நாட்டுக்கு விலக்குத் தேவை என்பதை தொடர்ந்து நாம் அன்றுமுதல் இன்று வரை, கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக வலியுறுத்தி வருகிறோம்.

இந்த சூழ்நிலையிலே, ஒரேயொரு ஆண்டுக்கு மட்டும்தான் விலக்கு என்று சொன்னால், அடிபட்டவனுக்கு,  நீட்  தேர்வினாலே ஏற்பட்ட மிகப்பெரிய விபத்துக்கு முதலுதவி மட்டும்தான் செய்வோம், முற்றாக சிகிச்சை செய்யமாட்டோம் என்று சொன்னால், அது எவ்வளவு மனிதாபிமானக் கடமையிலிருந்து தவறிய ஒன்றோ, அதேபோலத்தான், இவர்களும் தங்கள் அரசமைப்புச் சட்டக் கடமையிலிருந்து தவறுகிறார்கள்.

எனவே, இதில் ஓரளவுக்கு இந்த ஆண்டு இந்த மாணவர்களைக் காப்பாற்றலாம், அதற்குப் பயன்படும் என்று சொன்னாலும்கூட, நம்முடைய வலியுறுத்தல் என்பது நிரந்தரமாக்கப்பட வேண்டும்.

அதிலும் நகரப் புறத்தில் வாழும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதும் முக்கியமாகும்.

நீட் விலக்கு நிரந்தரமாக்கக் கூடாது என்பதற்கு நியாயமான காரணங்களை அவர்கள் சொல்லவில்லை.

ஏன் தமிழ்நாடு விலக்குக் கேட்கிறது!

ஏன் தமிழ்நாடு மட்டும் விலக்குக் கேட்கிறது என்று சிலர் கேட்கிறார்கள். அவர்களுக்குப் பதில், தமிழ்நாட்டிற்கு மட்டும்தான் 69 சதவிகித இடஒதுக்கீடு. தமிழ்நாடுதான் அரசமைப்புச்சட்டத்தில் முதலாவது சட்டத் திருத்தத்தையும், 76ஆவது சட்டத் திருத்தத்தையும்  கொண்டு வருவதற்கு காரணமாக இருந்துள்ளது.

தமிழ்நாடுதான் சமூகநீதிக்கே வழிகாட்டியது. தமிழ்நாட்டிலேதான் நுழைவுத் தேர்வை எதிர்த்து 22 ஆண்டுகள் திராவிடர் கழகம், திமுக போராடி, கலைஞர் அவர்களுடைய ஆட்சியிலே தனியே ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து, அந்த சட்டம், அதுவும் நிபுணர்கள், இன்றைக்கு யார் நுழைவுத் தேர்வை ஆதரிக்கிறார்களோ, அன்றைக்கு அவர்கள் இந்த நுழைவுத் தேர்வு கூடாது என்கிற பரிந்துரைக் கொடுத்து, அந்த பரிந்துரையை ஏற்று சட்டத்தை கலைஞர் அவர்கள் முலமைச்சராக இருந்தபோது செய்து, அது உச்சநீதிமன்றத்தாலும், குடியரசுத் தலைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட வரலாறு தமிழ்நாட்டுக்கு மட்டும்தான் உண்டு. ஆகவே, தமிழ்நாட்டில் மட்டும் ஏன் கேட்கிறார்கள் என்பவர்கள் விவரம் தெரியாத, வரலாறு தெரியாத, புரியாதவர்கள் கேட்கக்கூடிய கேள்வியாகும்.

ஆகவே, நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு தேவை என்பதுதான் நமது நிலைப்பாடு.

பாடத்திட்டத்தில் குறைபாடு உள்ளதுபோல் சொல்கிறார்கள். அது உண்மையல்ல தமிழ்நாட்டுப் பாடத் திட்டம் கல்வி நிபுணர்களால் தான் தயாரிக்கப்பட்டது. அந்தத் திட்டத்தில் படித்து மருத்துவர் ஆனவர்கள் சிறப்பாகத்தானே பணியாற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.

சிபிஎஸ்இ என்றால் அது ஏதோ உயர்ந்த ஜாதி மாதிரியும், மாநில பாடத்திட்டம் ஏதோ தாழ்ந்த ஜாதி மாதிரியும் இவர்கள் புதிய வருணாசிரமத்தை கோடு போட்டுக் காட்டுகிறார்கள். அது உண்மையல்ல.

எனவேதான்  நீட்  தேர்விலிருந்து நிரந்தர விலக்கு

தேவை என்கிற நிலைப்பாடு தொடர வேண்டும், தொடரும்!

இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பேட்டியில் தெரிவித்தார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner