எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கட்சிகளை மறந்து ஒன்று கூடி முடிவெடுப்போம்!

சென்னை, ஆக. 18- மேகத்தாதுவில் அணை கட்ட தமிழ்நாடு அரசு ஒப்புதல் தந்து துரோகத்தை இழைத்துவிட்டது. இதிலிருந்து மீள கட்சிகளைக் கடந்து ஒன்று கூடி முடிவெடுப்போம் என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-

காவிரி நதி நீர்ப் பிரச்சினையில் தமிழ்நாடு தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருகிறது. 1973 முதலே இந்த வஞ்சனை தொடர்கதையாகிவிட்டது.

சட்டத்துக்கும், தீர்ப்புக்கும்
கட்டுப்பட்டதுண்டா கருநாடகம்?

காவிரி நடுவர் நீதிமன்றம் சொன்னாலும் சரியே. உச்சநீதிமன்றம் உத்தரவிட்டாலும் சரியே. அவற்றை எல்லாம் பந்தயம் கட்டி உதாசீனப்படுத்தி வருகிறது கருநாடகம்.

போதும் போதாதற்கு மத்தியில் உள்ள மோடி தலைமையிலான பிஜேபி அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவையே கேள்விக்குறியாக்கி, 'உச்ச நீதிமன்றத்திற்கு இப்படி உத்தரவிட அதிகாரம் இல்லை' என்று உரத்தக் குரலில் முழங்கியதுண்டு.

கருநாடக மாநில சட்டப் பேரவைத் தேர்தலின்மீது மோப்பம் கொண்டு உச்சநீதிமன்றத்தையே முரட்டுத் தனமாக எதிர்க்கிறது.

அதிர்ச்சி தரக்கூடியது!

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தில் காவிரி நதி நீர்ப் பிரச்சினை தொடர்பான வழக்கில் தமிழ்நாடு அரசு தமிழ்நாடு நடந்து கொண்டுள்ள விதம் அதிர்ச்சித் தரக்கூடியதாக இருக்கிறது.

தமிழ்நாட்டுக்குரிய தண்ணீரை கருநாடகம் வழங்குமேயானால் காவிரியின் கருநாடக எல்லையில் மேகத்தாதுவில் அணைகட்டிக் கொள்ள எங்களுக்கு ஆட்சேபணையில்லை என்று தமிழ்நாடு அரசின் வழக்குரைஞர்கள் உச்சநீதிமன்றத்தில் ஒப்புதல் அளித்துள்ளனர்.

இந்த அரிய சந்தர்ப்பத்தை கருநாடக அரசு நழுவ விடுமா? கண்டிப்பாக தருவோம். தமிழ்நாட்டிற்கு தண்ணீரை சேமித்து வைப்பதற்காகத்தானே இந்த அணையைக் கட்டுகிறோம் என்று தேன் தடவிய சொற்களை வக்கணையாக உதிர்த்துள்ளனர் கருநாடக அரசு சார்பில் வாதிட்ட வழக்குரைஞர்கள்.

எந்த சட்டத்திற்கும், நீதிக்கும், நியாயத்திற்கும் எந்தக் கால கட்டத்திலாவது மதிப்பு கொடுத்திருக்கிறதா கருநாடக அரசு? கருநாடகத்தில் ஆளும் கட்சிகள் மாறலாம், ஆனால் காவிரிப் பிரச்சினையில் அடாவடித் தனமாக நடந்து கொள்வதில் தான் அவர்களுக்குள் போட்டியே தவிர - தமிழ்நாட்டுக்குரிய உரிமையை எந்த வகையிலும் அவர்கள் கணக்கில் கொண்டதேயில்லை, இல்லவே இல்லை.

இந்த நிலையில் தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தருவதில் தடையில்லை என்றால் மேகத்தாதுவில் கருநாடகா அணை கட்டிக் கொள்ளலாம் என்று தமிழக அரசின் வழக்குரைஞர் கருத்துக் கூறியிருப்பது ஆபத்தானது - அதிர்ச்சிக்குரியது. கருநாடகத்தின் கடந்த கால நிலைப்பாடுகளைத் தெரிந்திருந்தும் கண்ணிருந்தும் குழியில் விழலாமா? கூட்டுச் சதிக்கு தமிழ்நாடு பலியாகலாமா? இந்த முடிவுக்காக தமிழ்நாடு அரசு கடும் விலை கொடுத்தாக வேண்டும்; ஒட்டுமொத்த தமிழ்நாடே எதிர்த்து நிற்கப் போகிறது.

தாகங்களைத் தீர்த்துக் கொண்டு விட்டனர்

கருநாடக அரசு தன் தாக வெறியைத் தீர்த்து கொள்கிறது - மத்திய பிஜேபி அரசு தன் அரசியல் ஆதாயத் தாகத்தையும் தீர்த்துக் கொள்கிறது.

மத்திய அரசின் கண் ஜாடையில் தமிழ்நாடு அரசோ தன் பதவிச் சுகத்துக்காக சரண் அடைகிறது.

இந்த வஞ்சனைகளின் கூட்டுச் சதியால் தமிழ்நாடு பாலைவனமாக மாறுவதற்கான சாவோலை எழுதப்பட்டு விட்டது.

தமிழ்நாட்டு வீதிகளில் போராட்டம் நடத்தினால் என்ன? டில்லி சென்று மாதக் கணக்கில் போராட்டங்களை நடத்தினால் என்ன?

தமிழ்நாட்டை வஞ்சிப்பதில் கூட்டுச் சதி செய்வோர் வெற்றி பெற்று வருகின்றனர்.

என்னதான் பரிகாரம்?

இதற்கு என்னதான் பரிகாரம்? வீதிப் போராட்டத்தில் புது முறைகள் தேவைப்படுமா? கட்சிகளுக்கு அப்பாற்பட்டு ஒன்று கூடி விரைவில் முடிவெடுப்போம்! தயவு செய்து இதில் அரசியல் வேண்டாம் - வேண்டவே வேண்டாம்!

திருச்சி                                                                                     தலைவர்
18.8.2017                                                                 திராவிடர் கழகம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner