எழுத்துரு அளவு Larger Font Smaller Font

உரத்தநாடு, ஆக. 20- தஞ்சாவூர் மாவட்டம் உரத்த நாடு நகர, ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பில் 1001 'விடுதலை' சந்தாக்களுக்கான 9 லட்சத்து 900 ரூபாயினை திராவிடர் கழகத் தலைவர், 'விடுதலை' ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் அளித்து சாதனைப் படைத்தனர். மழை ஒரு பக்கம் மிரட்டிக் கொண்டிருந்ததென்றாலும், இயற்கையின் ஒத்துழைப்புடன் விழா பசுமையான பயிர் போன்ற குளிர்ச்சியுமாய் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந் தளித்தன.

83 ஆண்டுகளாக வீறு நடைபோட்டு வரும் உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான விடுதலைக்கு 1999 தொடங்கி தொடர்ந்து 17 ஆண்டுகளாக உரத்த நாடு 'விடுதலை' சந்தாக்களை அளித்து வருவது அடிகோடிட்டுக் குறிப்பிடத்தக்கதாகும். 32ஆம் தவணையாக ஆயிரம் சந்தாக்கள் வழங்கும் விழா, திருவிழாவாக, பெருவிழாவாக நேற்று (19.8.2017) உரத்தநாடு பேருந்து நிலையம் அருகில் வெகு எழுச்சியுடன் உற்சாகத்துடன் நடைபெற்றது

வாழ்விலே ஒரு திருநாள் என்று விடுதலையின் 55 ஆண்டுகால ஆசிரியர் மிகவும் மகிழ்ந்து, 'வாழ்நாளில் என்றும் பெறாத மகிழ்ச்சியை இன்று பெற்றேன்' என்று உணர்ச்சித் ததும்பிட உரைக்கும் அளவுக்கு அவ்விழா சிறப்புற்றது.

சுவர் எழுத்துகளும், பதாகைகளும், உரத்தநாட்டின் ஒவ்வொரு சாலையின் இரு புறங்களிலும் கழகக் கொடிக்காடுகளும் உரத்தநாடு 'பெரியார் நாடு' என்றே மீண்டும் நிரூபித்து விட்டன.

சுயமரியாதைச் சுடரொளிகள் கண்ணந்தங்குடி சிவ.பாலசுப்பிரமணியன், திருமங்கலக்கோட்டை (தெற்கு) கி.தியாகராசன் நினைவரங்கத்தில் இவ்விழா சரியாக 5.30 மணிக்கு அரங்கேறியது.

பகுத்தறிவு இன்னிசை

கழகச் சொற்பொழிவாளர் இராம.அன்பழகன், மாநில கலைத்துறை செயலாளர் தெற்கு நத்தம் ச.சித்தார்த்தன் ஆகியோர் இணைந்து பகுத்தறிவுப் பாடல்களைப் பாடி எழுச்சியூட்டினர்.

தொடர்ந்து கழகத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் உரத்தநாடு இரா.குணசேகரன், கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் ஆகியோரும் மூடநம்பிக்கையின் முதுகெலும்பை முறியடிக்கும் பகுத்தறிவுப் பாடல்களை எழுச்சியுடன் பாடி பலத்த கர ஒலியைப் பெற்றனர்.

இசையிலே முனைவர் பட்டம் பெற்ற கழகப் பாடகர் திருத்தணி டாக்டர் பன்னீர்செல்வம் அவர்க ளின் இன்னிசை களைகட்டியது. பாடல்களைக் கேட்டு மகிழ்ந்தோர் அன்பளிப்புகளை வழங்கினர்.

சரியாக ஏழு மணிக்கு அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் அணிவகுத்தன (நிகழ்ச்சியின் நிரலை தனியே காண்க!)

"பெரியாரால் வாழ்கிறோம்"

பெரியாரால் வாழ்கிறோம் என்ற தலைப்பில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்து.

'ஜாதி மத வெறி மாய்ப்பாளராக' என்னும் பொருளில் வழக்குரைஞர் பூவை.புலிகேசி உரை யாற்றுகையில் குடந்தை கல்லூரி மாணவர் விடுதியில் பார்ப்பனருக்கு ஒரு தண்ணீர்ப் பானை, பார்ப்பனர் அல்லாதாருக்குத் தனித் தண்ணீர்ப் பானை என்று பேதப்படுத்திய கொடுமையை எதிர்த்து, அந்தப் பானைகளை உடைத்து - அதன் விளைவாக திராவிடர் மாணவர் கழக பிரசவித்த வரலாற்றினை பாங்குற எடுத்துரைத்தார்.

'மூடநம்பிக்கை ஒழிப்பாளராக' என்னும் தலைப்பில் கருத்துரை வழங்கிய கழகச் சொற்பொழிவாளர் இராம.அன்பழகன் தந்தை பெரியார் ஆணையிட்டு நடத்திய பிள்ளையார் உடைப்பு, ராமன் பட எரிப்பு - அம்பகரத்தூரில் நடைபெற்ற காளியம்மன் கோவில் கிடாவெட்டு எதிர்ப்பு போராட்டங்களை நிரல் படுத்தினார்.

இந்தப் போராட்டம் ஆசிரியர் தலைமையில் 26.5.1964 அன்று நடைபெற்றது. அடுத்தாண்டு முதல் கிடா வெட்டு நிறுத்தப்பட்டது.

இராமன் பெயரைச் சொல்லி மக்கள் நலத் திட்டமான சேது சமுத்திரத் திட்டம் முடக்கப்படுவதையும் நினைவூட்டினார் இராம.அன்பழகன்.

'தமிழ் இனமெழி உணர்வாளராக' என்னும் தலைப்பில் கழகச் சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன் தனதுரையில், தமிழன் மீது தொடுக்கப்பட்ட இந்தித் திணிப்பு, சமஸ்கிருத ஊடுருவல், இவற்றை இயக்கம் எதிர்த்து முறியடித்த வரலாற்றையும், புரோகிதர் பார்ப்பனரைப் புறக்கணித்து தமிழன் வீட்டுத் திருமணத்தை ஒரு தமிழன் தலைமை தாங்கி நடத்திட வேண்டும் என்ற ஒரு நிலையை ஏற்படுத்திய வரலாற்றையும் நேர்த்தியாக எடுத்துரைத்தார்.

'சமூக நீதி காப்பாளராக' எனும் தலைப்பில் கழகச் சொற்பொழிவாளர் முனைவர் அதிரடி க.அன்பழகன் உரையாற்றுகையில், இந்திய அரசமைப்புச் சட்டம் முதன் முதலாகத் திருத்தப்பட்டு ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கல்வியில் இடஒதுக்கீடு, தந்தை பெரியார் பெயரில் ஆண்டு தோறும் சமூக நீதி விருதினை அரசு சார்பில் கொடுக்கும் நிலைக்கு வித்திட்டது, தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி பெயரால் பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில் சமூக நீதிக்கான வீரமணி விருது, அகில இந்திய அளவில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு - சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது கொண்டு வருவதற்குக் கழகமும், கழகத் தலைவரும் எடுத்த முயற்சிகளைப் பட்டியலிட்டார்.

கருத்தரங்கத்திற்கு தலைமை வகித்த திராவிடர் கழக துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் தன் உரையில், தமிழர்கள் மட்டுமல்ல, பார்ப்பனர்கள் கூட பாதுகாப்பாக தமிழ்நாட்டில் வாழ்வதற்குத் தந்தை பெரியார் தான் காரணம்; காந்தியாரை நாது ராம் கோட்சே என்ற பார்ப்பனன் சுட்டுக் கொன்ற போது - மும்பையில் பார்ப்பனர்கள் தாக்கப்பட்டனர், பூணூல்கள் அறுக்கப்பட்டன, வீடுகள் கொளுத்தப்பட்டன, ஆனால் தமிழ்நாட்டிலோ அந்த நிலை ஏற்படாமல் வானொலி மூலம் உரை நிகழ்த்தி சமூக அமைதி காத்த சான்றாண்மை மிக்க மிகப் பெரிய தலைவராக - தந்தையாக பெரியார் விளங்கிய அந்தப் பெற்றியை எடுத்துரைத்து, நியாயமாக பார்ப்பனர்கள் கூட தந்தை பெரியாருக்கு நன்றி பாராட்டக் கடமைப்பட்டுள்ளனர் என்று கூறினார்.

இறுதியாக நிறைவுரையை தமிழர் தலைவர் நிகழ்த்தினார்.

அன்பளிப்புகள் குவிந்தன

கழகக் குடும்பத்தினரும், அனுதாபிகளும் நகரப் பிரமுகர்களும், பல்வேறு அமைப்பினைச் சார்ந்தவர்களும் தமிழர் தலைவருக்குச் சால்வைகளை அணிவித்தனர். மாலைக்குப் பதில் ரூபாய்களை வழங்கினார்கள். 'விடுதலை' சந்தாக்களையும் அன்புடன் வழங்கினர்.

தஞ்சை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் காது கேளாதோர் மற்றும் வாய்ப் பேசாதோர் சங்கத்தினைச் சேர்ந்தவர்கள் - தமிழர் தலைவரைச் சந்தித்து சால்வை அணிவித்தனர் (பேசா மடந்தையினராகக் கிடந்தவர்களுக்கு உணர்வூட்டிய இயக்கம் அல்லவா).

பெரியார் பிஞ்சுகள் போட்டிப் போட்டுக் கொண்டு நன்கொடைகளை வழங்கினர்.

பட்டுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் அத்திவெட்டி வீரையன் தம் இணையர் மாலதியுடன் மேடைக்கு வந்து தங்களின் 27ஆம் ஆண்டு திருமண நாளின் மகிழ்வாக உலக நாத்திகர் மாநாட்டுக்கு நன்கொடையாக ரூபாய் ஆயிரம் தந்தனர். அவர்கள் இருவரையும் இணைத்துப் புத்தாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார் கழகத் தலைவர்.

உரத்தநாடு நகரச் செயலாளர் ரெ.இரஞ்சித் சிங் தம் இணையர், குழந்தையுடன் கழகத் தலைவரைச் சந்தித்து நன்கொடையாக ரூ.500 அளித்து மகிழ்ந்தார்.

புதிய வரவுகள்

புதிய இளைஞர்கள் கழகத்தில் இணைந்தனர் (பெட்டிச் செய்தி காண்க).

தொகுப்பு: மின்சாரம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner