எழுத்துரு அளவு Larger Font Smaller Font

“தாமரை இலை தண்ணீர் போல”  தமிழ்நாட்டின் ஆட்சி நிலை!

முதல் அமைச்சர்மீது நம்பிக்கை இல்லை என்று 19 உறுப்பினர்கள்

மனு கொடுத்த நிலையில் ஆளுநர் செய்ய வேண்டியது என்ன?

பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கோர வேண்டும்

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிமீது நம்பிக்கை இல்லை என்று 19 சட்டப் பேரவை உறுப்பினர்கள் ஆளுநரிடம் மனு கொடுத்த நிலையில், பெரும்பான்மையை நிரூபிக்குமாறு முதல் அமைச்சரை ஆளுநர் கோர வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஜெ.ஜெயலலிதா அவர்கள் கடந்த டிசம்பர் 5இல் மறைந்ததிலிருந்தே, டில்லியிலிருந்து பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். பொம்மலாட்ட அரசியல் சித்து விளையாட்டைத் தொடங்கியது.

பிஜேபி நடத்திய பொம்மலாட்டம்

கடந்த பல மாதங்களாக அந்த பொம்மலாட்ட அரசியல் நாடகம் பிரதமர் மோடி, பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, இங்குள்ள ஆர்.எஸ்.எஸ். ஆடிட்டர் குருமூர்த்தி அய்யர் ஆகியவர்களின் இயக்குதலுக்கேற்ப, பிரிவு, பிளவு, இரட்டை இலை முடக்கம் ஆர்.கே.நகர் தேர்தல் கடைசி நேரத்தில் ரத்து போன்ற பல்வேறு அரசியல் நடப்புகளும் ஆட்சியை - ஆட்சியாக நடக்க விடாமல், காட்சியாக்கி, இறுதியில் நேற்று இணைப்பு என்று ஆக்கி, பன்னீர்செல்வம் குழுவினை (மனு) ‘தர்ம யுத்த’ நாடகம் ஓர் உச்ச கட்ட காட்சிக்குப் பிறகு எதிர் உச்சகட்ட காட்சியாக  (Climax and Anti Climax) நாடகக் காட்சியாகியது!

திருமதி சசிகலாவை நீக்குவது சாத்தியமா?

இதற்கிடையில் கட்சியில் இவ்விரு குழுவினருமே வேண்டிக் கேட்டு, காலில் விழுந்து அழைத்து வந்து பொறுப்பேற்க வைத்த அதன் பொதுச் செயலாளர் திருமதி சசிகலாவை நீக்குவோம் என்று கூறும் நிலையில்,  அது முடியுமா? திருமதி சசிகலாவால் நியமிக்கப்பட்ட துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் அவர்களுக்கு ஆர்.கே. நகர் தேர்தலில் ஓடிஓடி வாக்குச் சேகரித்தார் - செலவழித்தார் என்ற குற்றச்சாட்டுக்கும் ஆளாகிய, வருமான வரித்துறை போன்ற வைகளால் குற்றம் சுமத்தப்பட்ட அமைச்சர்களும்   'இணைந்தனர்' என்ற நாடகத்தின், இறுதிக் கட்டம் நேற்று  ஆளுநர் முன்னிலையில் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது.

தாமரை இலை தண்ணீர் போல

இதன் மூலம் அக்கட்சியும் சரி, அக்கட்சியினரின் ஆட்சியும் சரி, காப்பாற்றப்பட ஒரு நிலையான நேர்மையான ஆட்சிக்கு வழிவகுக்காத - மனசாட்சிப்படி அவர்கள் பெருமிதப்பட முடியாத நிலைதானே இன்று?, தமிழ் நாட்டு ஜனநாயகத்தின் இறக்கைகள் வெட்டப்பட்டு, இப்போதுள்ள ஆட்சி "தாமரை இலை தண்ணீர் போல" தத்தளிக்கும் நிலையை அவர்கள் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் இன்று காலை ஆளுநரைச் சந்தித்துள்ளனர்.

இன்றைய முதல் அமைச்சருக்குக் கொடுத்து வந்த ஆதரவினை தாங்கள் விலக்கிக் கொள்வதாகத் தெரிவித்து விட்டனர். சுற்றி வளைத்துச் சொன்னாலும் - இதன் பொருள் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையிலான ஆட்சிக்கு எங்கள் ஆதரவு இல்லை என்பது தானே!

செய்ய வேண்டியது என்ன?

ஓராண்டாக நீடிக்கும் தமிழக பொறுப்பு ஆளுநர் மேதகு வித்தியாசாகர் அவர்கள், உடனே ஆளும் அமைச்சரவை நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தச் சொல்லி (Floor Test)
பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டிட ஒரு வாரத்திற்குள் காலக் கெடு கொடுத்து, அரசியல் சட்ட நடைமுறைப்படிச் செய்து ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டும்!

மக்கள் நம்பிக்கையையும் பெறாது, சட்டமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மையும் இன்றி பெரும் குழப்பமான தேக்க நிலை இருப்பது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும் கேடு என்பதால், ஆளுநர் உடனடியாக தனது ஜனநாயகக் கடமையைச் செய்ய  வேண்டும்.

நியாயமாக ஆளுங் கட்சியே, தானாகவே முன் வந்துகூட தனது பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டலாமே!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

 

சென்னை    
22-8-2017

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner