எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

குடிசைப் பகுதிகளிலும் விநாயகர் பொம்மைகளை வைக்கப் போகிறார்களாம்.

"எந்தப் பிள்ளையாரை உடைத்து நாத்திகத்தை வளர்த்தார்களோ, அதே பிள்ளையாரை வைத்து இன்று ஹிந்து முன்னணி எழுச்சியை ஏற்படுத்தி வருகிறது" - என்று இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ். ஏடான "விஜயபாரதம்" (25.8.2017) எழுதுகிறது.

பூனைக்குட்டி வெளியில் வந்தது என்பார்களே, அது இதுதான்.

பிள்ளையார் ஊர்வலம் நடத்துவது பக்திக்காக அல்ல - ஹிந்து எழுச்சியை ஏற்படுத்துவதற்காகத்தான் இந்த ஊர்வலம் என்று இந்து முன்னணியின் அதிகாரபூர்வ வார ஏடே ஒப்புக் கொண்டு விட்டது.

குடிசைப்பகுதிகளில் தான் ஏராளமான பிள்ளையார் பொம்மைகளை வைக்கப் போகிறார்களாம்.

இதற்கு மட்டும்தான் குடிசைப் பகுதிகளை அவர்கள் தேர்வு செய்வார்கள்.

குஜராத் கலவரத்துக்கு மலைவாழ் மக்களைத் தேடிச் செல்லவில்லையா?

குடிசைப் பகுதியில் வைக்கப்படும் பிள்ளையார் பொம்மைகளை தாழ்த்தப்பட்ட மக்கள்  தொட்டுக் கும்பிடலாம். ஆனால் மயிலை கபாலீஸ்வரர் கோவிலுக்குள்ளிருக்கும் பிள்ளையாரைத் தீண்ட முடியாது - வல்லபக் கணபதி கோயிலில் உள்ள பிள்ளையாரை மட்டும் தீண்டக்கூடாது.

தாழ்த்தப்பட்டோர் பகுதியில் பிள்ளையாரைப் பிரதிஷ்டை செய்ய முன்வரும் ஆர்.எஸ்.எஸ்.காரர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும்.

1893இல் பாலகங்காதரர் என்ற பார்ப்பனர் தான் இந்த பிள்ளையார் ஊர்வலத்துக்குக் கடைக்கால் போட்டவர்.

முஸ்லிம்களைச்  சீண்டுவதுதான் இந்த சிண்டுகளின்  நோக்கம்.

பிள்ளையார் ஊர்வலத்துக்கென்று பஜனைப் பாடல்களை உருவாக்கினார்கள்.

இம்மதம் - நம்மதம் - இந்து மதமா ஏன் இன்று மறுதலிக்கிறாய்?

கணங்களின் நாயகன் கணபதியையும், சிவனையும், வாயுபுத்திரனையும் எங்ஙனம் மறந்தாய்?

வேற்றுச் சின்னங்களை பணங்களை எப்போது பெற்றாய்?

என்ன வரம் அளித்தார் அல்லா உனக்கு?

இன்று நீ முகமதியன் ஆகி விட்டாய்

அந்நிய மதம் தனை அந்நியப்படுத்து

உன் மதத்தை மறந்திடில் நின் வீழ்ச்சி நிச்சயம்

சின்னங்களை மதியாதே!

நம் அன்னை கோமாதாவை மறந்து விடாதே!

அழைத்திடுவீர் அனைவரையும்!

அருமையாகக் காத்திடுவீர் நம் மதத்தை

தூக்கி எறிவீர் பஞ்சாசையும் நூல்களையும்!

இந்த பாடலில் பக்தி நுரை தள்ளுகிறதா? பச்சை மதவாதம் கொம்பு முளைத்துப் பாய்கிறதா?

சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் திருவல்லிக்கேணிப் பகுதியில் கலகம் விளைவிப்பவர்கள்  யார்? மசூதி பக்கம் சென்றே தீருவோம் என்ற பற்களை நர நரவென்று கடித்துக் கொண்டு பாய்ந்து கிளம்புவது யார்?

ஒவ்வொரு ஆண்டும் இராமகோபாலன் சண்டித்தனம் செய்வதும் காவல்துறை கையணைப்பாக அவரைக் கொண்டு சென்று சில மணிநேரங்களுக்குப் பிறகு விடுவிப்பு எல்லாம் விஷமத்தனம் அல்லவா?

பிள்ளளையார் ஊர்வலத்தில் போடப்படும் முழக்கங்கள் எந்தத் தரத்தில் இருக்கும் என்பதை ஏற்கெனவே நாடு பார்த்து கொண்டிருந்தது.

இந்தக் கேவலமான ஊர்வலத்திற்கெல்லாம் வெற்றிலைப் பாக்கு வைத்து அனுமதிக் கடிதத்தை காவல்துறை கொடுக்கும் - ஊர்வலத்திற்கு பாதுகாப்பும் அளிக்கும்.

மக்கள் உரிமைக்காகக் குரல் கொடுக்கும் பிரச்சினைகளின் அடிப்படையில் ஊர்வலம் செல்ல அனுமதி கேட்டால், ஒரே வரியில் அனுமதி மறுப்பு.

காலித்தனத்துக்கு 'ஜே'!

கண்ணியமான ஊர்வலத்துக்கு 'நோ' இதுதான் நாட்டின் நடப்பு வெட்கக்கேடு!

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner