எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

சென்னை, ஆக. 26- மாநில அதிகார மீட்பு, சமஸ்கிருத - இந்தித் திணிப்பு மாநாடுகள் சென்னை பெரியார் திடலில் நேற்று (25.8.2017) இரு வேளைகளிலும் எழுச்சித் தீ பறக்க சிறப்பாக நடைபெற்றன.

இந்தக்கால கட்டத்திற்கு இவ்விரு பெரும் மாநாடுகள் மிக முக்கியமானவை, திராவிடர் கழகத்தின் சார்பில் காலத்தால் மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகள் என்று கட்சிக்கு அப்பாற்பட்டவர்களால் பாராட்டப்பட்ட மாநாடுகளாக நடைபெற்றன.

மழையால் ஏற்பட்ட அச்சுறுத்தலைக் கடந்து பெருந்திரளாக மக்கள் கூடினர்.

வரவேற்புரையில் திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் வீ.குமரேசன் குறிப்பிட்டபடி மழையை வென்று மாநாடு எழுச்சியுடன் தொடங்கியது.

தமிழர் தலைவர் முன்னுரை

மாநாட்டின் தலைவர் - திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் முன்னுரையாக மாநாட்டின் நோக்கத்தைக் கூறினார்.

மாநிலங்களவையில் உரையாற்றிய அறிஞர் அண்ணா அவர்கள், மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே துறைக்கு எதற்காக தனித்தனி அமைச்சர்கள் என்று எழுப்பிய வினாவை நினைவூட்டினார்.

கல்வியை மாநிலப் பட்டியலிலிருந்து, மாநில அரசுகளின் அனுமதி பெறாமலேயே நெருக்கடி நிலை கால கட்டத்தில் 'கன்கரண்ட்' பட்டியலுக்குக் கொண்டு சென்றது ஏன்?

அப்படியே பார்த்தாலும் கன்கரண்ட் என்றால் மத்திய - மாநில அரசுகளின் இணைக்கத்துடன் ஒத்திசையுடன் முடிவு செய்யப்பட வேண்டியவை என்றுதான் பொருளே தவிர, தன்னிச்சையாக மத்திய அரசு எப்படியும் நடந்து கொள்ளலாம் என்று பொருள் அல்ல என்ற நுட்பமான கருத்தினை வெளிப்படுத்தினார்.

பேராசிரியர் ஜவாஹிருல்லா

மனித நேய மக்கள் கட்சியின் நிறுவனர் பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்கள் மாநாட்டின் தொடக்கவுரையை நிகழ்த்தினார்.

இன்றைக்கு மத்திய பிஜேபி அரசு கொண்டு வந்துள்ள ஜி.எஸ்.டி. வரி விதிப்பினை - குஜராத் மாநில முதல் அமைச்சராக இருந்தபோது கடுமையாக எதிர்த்தவர் தான் நரேந்திர மோடி. எதிர்க்கட்சியாக இருந்தால் ஒரு நிலை, ஆளும் அதிகாரத்தில் அமர்ந்தால் அதற்கான எதிர் நிலை என்ற இரட்டை வேடம் ஏன் என்று அர்த்தமிக்க வினாவை எழுப்பினார்.

வழக்குரைஞர் அருள்மொழி

உணவு உரிமையிலும் மூக்கு நுழைப்பு எனும் பொருளில் உரையாற்றிய திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி அவர்கள் தனது உரையில், தனி மனிதனைக் கும்பலாகச் சேர்ந்து அடித்துக் கொல்லலாம் என்ற புது வகைக் கலாச்சாரத்தினை மத்தியில் உள்ள பிஜேபி அரசும், சங்பரிவார்களும் ஏற்படுத்தி வருகின்றனர். ஒருவர் வீட்டில் உள்ள ஃபிரிட்ஜில் என்ன உணவு இருக்கிறது என்று மோப்பம் பிடித்து அது மாட்டுக்கறிதான் என்று குற்றம் சுமத்தி, அந்த வீட்டில் இருந்த முதியவரை கும்பலாகச் சென்று அடித்துக் கொன்ற கொடுமையை என்னவென்று சொல்லுவது என்ற வினாவை எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய பேராசிரியர் அ.மார்க்ஸ் அவர்கள் எந்தெந்த வகைகளில் எல்லாம் மத்திய பிஜேபி ஆட்சி இந்துத்துவா கண்ணோட்டத்துடன் நடந்து கொள்கிறது என்பதைப் பட்டியலிட்டார். காவிரி நதி நீர்ப் பிரச்சினையில் எவ்வாறு எல்லாம் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது என்பதையும் எடுத்துக் கூறினார்.

கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு

தமிழ்நாட்டில் 22 மருத்துவக் கல்லூரிகள் செயல்படுகின்றன. காமராசர் ஆட்சியில் பல்வேறு மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரிகள் ஏற்படுத்தப்பட்டன. அந்தந்தப் பகுதிகளில் வாழும் மக்களிடமிருந்து மருத்துவர்கள் உருவாக வேண்டும் என்பதுதான் அதன் நோக்கம்.

ஆனால் இப்பொழுது என்ன நடந்திருக்கிறது? அதற்கு நேர் எதிராக அந்த இடங்களையெல்லாம் அகில இந்தியாவிற்கு கொண்டு செல்லுவது நேர்மையானது தானா?

இந்திய அளவில் மட்டுமல்ல. உலகமயம் என்ற பெயரில் வெளிநாட்டில் வாழ்பவர்களுக்கும் நமது மருத்துவக் கல்லூரியில் தாரை வார்க்கப்படுகின்றன என்பது எத்தகைய கொடுமை! என்று வேதனை தெரிவித்தார்.

பேராசிரியர் மறைமலை இலக்குவனார்

அரசியல் கட்சிகளுக்கு மட்டுமல்ல. உலகப் பல்கலைக் கழகங்களுக்கெல்லாம் தாய்க் கழகம் திராவிடர் கழகம் என்று எடுத்த எடுப்பிலேயே கூறினார் பேராசிரியர் மறைமலை இலக்குவனார்.

எத்தனையோ பல்கலைக்கழகங்கள் நாட்டில் இருந்தாலும் நாம் யார்? நமது வரலாறு என்ன? நாம் எந்தெந்த வகைகளில் எல்லாம் சுரண்டப்படுகிறோம்? என்பதை எடுத்துச் சொல்லி ஓர் இனத்தை எழுச்சி பெற பாடுபட்டுக்கொண்டிருக்கும் திராவிடர் கழகம்தானே உண்மையான பல்கலைக்கழகமாக இருக்க முடியும் என்ற பொருள் பொதிந்த வினாவையும் எழுப்பினார்.

மனோன்மணியம் சுந்தரனார் அவர்களே, தென்னகத்தின் வரலாறு புறக்கணிக்கப்படுகிறது என்று ஆதங்கப்பட்டதையும் மறைமலை இலக்குவனார் ஆதாரத்துடன் அணியப்படுத்தினார்.

பேராசிரியர் அ.இராமசாமி

மேனாள் துணைவேந்தரும், திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்தின் தலைவருமான முனைவர் பேராசிரியர் அ.இராமசாமி அவர்கள் தன் உரையில் கலகலப்பாக பல தகவல்களை வெளிப்படுத்தினார்.

இந்திய அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட அந்தக் காலகட்டத்திலேயே அது மனுதர்மத்தின் மறுபதிப்பு என்று அடையாளம் காட்டியவர் அய்யா பெரியார் அவர்களே! இரயில்வே நிலையங்களில் இருந்த இந்தி எழுத்துக்களை தார் கொண்டு அழித்தவரும் அவரே! தார் சட்டியை தூக்கி ஒரு போராட்டத்தை நடத்தலாம் என்று உலகத்திலேயே முதன் முதலாக அறிமுகப்படுத்தியவர் தந்தை பெரியாரே என்று அவர் எடுத்துச் சொன்னபொழுது, பலத்த கரவொலி எழுந்தது.

'நீட்' என்ற பெயராலே சமூக அநீதி இழைக்கப்பட்டுள்ளது. நான் வரலாற்றில் எம்.ஏ. படிக்கிறேன் என்றால் என்னிடம் கெமிஸ்டரி பற்றிக் கேட்டால் நான் எப்படி பதில் சொல்ல முடியும்?

அதேபோல்தான் நீட் தேர்வு என்று சொல்லி சிபிஎஸ்இ அடிப்படையில் கேள்வித் தாள் தயாரிக்கப்பட்டு மாநிலக் கல்வி திட்ட முறையில் படித்தவர்கள் தேர்வு எழுத வேண்டும் என்பது மிகப்பெரிய சமூக அநீதி என்று ஆணித்தரமாகக் குற்றம் சாட்டினார் பேராசிரியர் அ.இராமசாமி அவர்கள்.

இந்தி - சமஸ்கிருத திணிப்பு கண்டன மாநாடு

பிற்பகல் 5.45 மணிக்கு இந்தி - சமஸ்கிருதத் திணிப்புக் கண்டன மாநாடு தொடங்கப்பட்டது. திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் வரவேற்புரையாற்றினார்.

அவர் தனது உரையில் 1991ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கின்படி இந்தியாவில் சமஸ்கிருதம் பேசியோர் எண்ணிக்கை 49,736; 2001 கணக்குப்படி வெறும் 14,135 ஆக சுருங்கிப் போய் விட்டது - இப்படிப்பட்ட மொழியைத் தான் திணிக்கப்பார்க்கிறார்கள் என்று எடுத்துக் கூறினார்.

அறிமுகவுரையாற்றிய திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் 1926ஆம் ஆண்டிலேயே (மார்ச் 26) 'குடிஅரசு' இதழில் "தமிழர்க்குத் துரோகமும் இந்தியின் இரகசியமும்" எனும் தலைப்பில் தந்தை பெரியார் எழுதியிருந்ததை நினைவூட்டினார்.

கோடிக்கணக்கான ரூபாய்களை சமஸ்கிருத வளர்ச்சிக்காக மத்திய அரசு கொட்டியழுதாலும் சமஸ்கிருதத்தைப் படிக்க யாரும் முன்வராத காரணத்தால், சமஸ்கிருதக் கல்லூரிகள், துறைகள் மூடப்பட்டு விட்டன என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த ஸ்மிருதி ராணி நாடாளுமன்றத்தில் கூறிய ஒப்புதல் வாக்குமூலத்தையும் எடுத்துச் சொன்னார் திராவிடர் கழகத் துணைத் தலைவர்.

பேராசிரியர் சுப.வீரபாண்டியன்

திராவிடர் இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்கள் தன் உரையில், சமஸ்கிருதத்தைக் கொண்டு வர வேண்டும் என்பதற்காகத் தான் இந்தியைத் திணிக்கிறார்கள் என்றும், ''சமஸ்கிருதம் செத்த மொழி என்று சொல்வதே கூட சரியானது அல்ல; அது உயிரோடு இருந்திருந்தால் தானே சாவதற்கு?" என்று பாவாணர் கூறியதையும் எடுத்துச் சொன்னார் பேராசிரியர் சுப.வீ.

பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன்

ஜெர்மன் வரை சென்று தந்தை பெரியாரின் கருத்துகளைப் பரப்பி வரும் ஆசிரியர் வீரமணி அவர்களுக்கு இந்த நேரத்தில் எமது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சமீபத்தில் கூட இந்திய பிரதமர் இஸ்ரேலுக்குச் சென்று வந்தார். சமஸ்கிருதத்தைப் போல ஹிப்ரு மொழியும் செத்துப் போன ஒன்று; அதற்கு உயிரூட்ட அங்கு முயற்சி நடைபெறுவதைப் போன்றுதான் இங்கு செத்துப்போன சமஸ்கிருதத்திற்கு உயிரூட்ட நினைக்கிறார்கள் என்று கூறிய காதர் மொய்தீன் அவர்கள் - வடக்கேயிருந்து வீசும் வாடைக் காற்றைத் தடுத்திட தந்தை பெரியார் கருத்துகளை முன்னெடுப்போம் என்று கூறினார்.

பிற்போக்குத் தனங்களை முறியடிக்க பெரியார் கொடுத்துச் சென்ற சம்மட்டி உள்ளது; திராவிடப் பாரம்பரியம் என்றைக்குமே தீய சக்திகளை சந்திக்கத் தயார்தான் என்றார் பேராசிரியர் காதர் மொய்தீன்.

பேராசிரியர் தீபக் பவார்

மும்பைப் பல்கலைக்கழக குடிமை இயல் மற்றும் அரசியல் துறைப் பேராசிரியர் தீபக் பவார் தமது ஆங்கில உரையில் முக்கிய கருத்தைப் பதிவு செய்தார்.

இந்தி - சமஸ்கிருத எதிர்ப்பில் தமிழ்நாடு எப்பொழுதுமே முன்னோடியாக இருந்து வந்துள்ளது. இந்தி பேசாத மாநிலத்தைச் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு மாபெரும் பொறுப்பு உண்டு. நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவதன்மூலம் நாடு முழுவதற்கும் அது சென்றடையும். இந்தி பேசாத மக்களின் உதடுகளில் இந்தி மொழியினைக் கட்டாயப்படுத்தி உச்சரிக்க வைக்கப்பட்டால், இந்திய நாட்டின் பிரிவினைக்கு அது வழிவகுத்துவிடும் என்று எச்சரித்தார்.

இதயதுல்லா (காங்கிரஸ்)

காங்கிரஸ் ஊடகத்துறை செயலாளர் இதயதுல்லா அவர்கள் தனது உரையில் இத்தகைய மாநாடுகளை திராவிடர் கழகத்தால்தான் நடத்த முடியும். தந்தை பெரியார் இருந்திருந்தால் எதைச் செய்திருப்பாரோ அதனை அப்படியே செய்கிறார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். எந்தப் பதவியைப் பற்றியும் கவலைப்படாமல் செய்ய வேண்டிய பணிகளை திராவிடர் கழகம் செய்து வருகிறது. இந்த மாநாட்டில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை ஏற்றுக்கொண்டு காங்கிரஸ் துணை நிற்கும் என்று கூறினார்.

தோழர் ஜி.இராமகிருஷ்ணன்

சி.பி.எம். மாநிலச் செயலாளர் தோழர் ஜி.இராமகிருஷ்ணன் அவர்கள் தன் உரையில் "திராவிடர் கழகத்தின் இந்த முயற்சியைப் பாராட்டுகிறோம். மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட அருமையான தீர்மானங்களை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டுக் கட்சி வரவேற்கிறது. 1938இல் தந்தை பெரியார் மூட்டிய தீ இன்னும் அணையவில்லை - அணைய விடவும் கூடாது என்பதற்கான முக்கிய மாநாடு இம்மாநாடு" என்று எடுத்த எடுப்பிலேயே அழுத்தமாகப் பதிவு செய்தார்.

"மத்திய அரசுப் பணிகளில் இந்தியில் யார் யாரெல்லாம் பாண்டித்தியம் பெற்று இருக்கிறார்களோ, அவர்களுக்குப் பதவி உயர்வு கொடுக்க வேண்டும் என்கிறார்கள். இந்தியை மேம்பாடு அடையச் செய்வதற்கு 117 அம்சங்களை வெளிப்படுத்தியுள்ளனர்.

ஆராய்ச்சி நூல்களை வாங்கும்போதுகூட சரிபாதித் தொகை இந்தி நூல்களை வாங்குவதற்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதும் அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று பல்வேறு ஆதாரங்களை அடுக்கடுக்காக எழுந்து வைத்தார் தோழர் இராமகிருஷ்ணன்.

எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் தனது உரையில் ஆவேச அக்னியாகக் கிளர்ந்தெழுந்து, கருத்துகளைக் கொட்டினார்.

தந்தை பெரியார் 1938இல் இந்தியை எதிர்த்து விரட்டவில்லையென்றால் இன்றைக்கு நாம் வீடுகளில் கூட இந்தியைத்தான் பேசிக் கொண்டு இருப்போம். தமிழ்த்தேசியம் எல்லாம் பேசிக் கொண்டு இருக்க முடியாது என்றும், தமிழ்த் தேசியம் என்ற பெயராலே தந்தை பெரியாரைக் கொச்சைப்படுத்தும் பேர்வழிகளின் மண்டையில் அடித்தார் தொல்.திருமா.

இலங்கையில் சிங்கள மொழி திணிப்புதான் கடைசியில் தனியீழத்தில் கொண்டு போய் நிறுத்தியது. இந்தி திணிப்பும் அந்த நிலையை ஏற்படுத்தும் என்றும் எச்சரித்தார்.

மாநில சுயாட்சி என்பது - பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வாக இருக்கும் - செப்டம்பர் 24 அன்று சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாநில சுயாட்சி மாநாடு நடைபெறுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக் கூறினார் எழுச்சித் தமிழர் திருமா.

தோழர் தா.பாண்டியன்

இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் தோழர் தா.பாண்டியன் அவர்கள் தனது உரையில், "அடுத்து நாம் நடத்தவிருக்கும் போராட்டத்திற்கான முன்னோட்டம்தான் இந்த மாநாடு" என்று அவர் சொன்னபொழுது பலத்த கைதட்டல்.

"நம்மை எதிர்க்கும் பிற்போக்கு சக்தி அதிகாரப் பீடத்தில் அமர்ந்து இருக்கிறது. மக்கள் பணத்தைப் பயன்படுத்தி கலாச்சார ஆக்கிரமிப்பை நடத்தத் துடிக்கிறது. குள்ளநரி வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

நம்மிடையே சகோதர சண்டைகள் வேண்டாம். மூலப் பகையைப் பார்க்கத் தவறிவிட்டோம். உத்தரப் பிரதேசத்தில் அது தான் நடந்திருக்கிறது.

தொலைக்காட்சிகளில் நாம் அன்றாடம் பார்க்கிறோம். வீட்டுக்குள் காட்டுப் பன்றிகள் நுழைந்தன - காட்டு யானைகள் நுழைந்தன என்று பார்க்கிறோம் - கோபப்படுகிறோம்; அதைவிட என்னென்னவெல்லாமோ நாட்டிலும் வீட்டிலும் நுழைகின்றனவே அதைப் பற்றி சிந்திக்க வேண்டாமா?

மனுஸ்மிருதியின் அடிப்படையில் பா.ஜ.க. ஆட்சி நடத்துகிறது என்றால் அதற்குக் குண்டர் படையாக செயல்படுவது ஆர்.எஸ்.எஸ்." என்று கூறினார் தோழர் தா.பாண்டியன்.

தமிழர் தலைவர் ஆசிரியர்

மாநாட்டின் நிறைவுரையில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:

சமஸ்கிருதம் தேவ மொழி என்றால் தமிழ் அசுர மொழி என்று பொருள். இந்தத் தேவாசுரப் போராட்டம்தான் தொடர்ந்து கொண்டுள்ளது. தமிழுக்குச் செம்மொழி தகுதி வந்த போதுதான் சமஸ்கிருதத்துக்கு அந்தத் தகுதிக்கு வழி செய்தனர்.

சமஸ்கிருதத் திணிப்பு, இந்தித் திணிப்பு என்பது வெறும் மொழி திணிப்பு மட்டுமல்ல. ஒரு பண்பாட்டுத் திணிப்பு.  துளசிதாசர் இராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்ன?

இராமன், பிர்மா, சிவன் பிராமணர்களை வணங் னர்  என்று சொல்லுவதுதான் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள்? கடவுளுக்கு மேல் "பிராமணர்கள்" என்பதைத்தானே சொல்கிறார்கள். எந்த மொழியைப் படித்தால் என்ன? பல மொழிகளைப் படித்தால் நல்லது தானே என்று இதோபதேசம் செய்பவர்கள் இதனை எல்லாம் கருத்தில் கொள்ள வேண்டாமா? என்ற வினாவை எழுப்பினார் தமிழர் தலைவர்.

வடசென்னை மாவட்ட திராவிடர் கழக மகளி ரணி செயலாளர் பொறியாளர் இன்பக்கனி நன்றி கூறிட மாநாடு இரவு 9.45 மணிக்கு நிறைவுற்றது.

(தலைவர்களின் உரைகள் பின்னர் வெளிவரும்.)

 

தொகுப்பு:

மின்சாரம்

 


 

தீப்பொறி பறந்த கருத்துக்கடல் மாநாடு

சென்னையில் நேற்று நடைபெற்ற இருபெரும் மாநாடுகளும் மழையின் அச்சுறுத்தலையும் கடந்து எழுச்சியுடன் நடைபெற்றன.

மாநாட்டில் ஒவ்வொருவரும் ஆற்றிய உரைகள் ஆவேசமாகவும். அறிவுத்திறனுடன், உணர்ச்சிக் கொப்பளிக்க பெரியார் திடலே தீ பிழம்பாக கனகனத்தது.

தமிழ்நாடு பலவழிகளிலும் சுரண்டப்படுகிறது. மொழி, கலாச்சாரம் பொருளாதாரம், மாநில உரிமைகள் அனைத்திலும் ஆர்.எஸ்.எஸ். கொள்கை தலை கொழுத்து ஆடுகிறது என்பதை ஆதாரங்களுடன் வெகு நேர்த்தியாக எடுத்துரைத்தார்கள்.

ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்ற இவ்விரு மாநாடுகள் வரலாற்றில் பேசப்படும் என்பதில் அய்யமில்லை.


"பெரியார் கொட்டிய போர் முரசு"

திராவிடர் கழகம் நடத்தும் எந்த நிகழ்ச்சியிலும் பெரும்பாலும் நூல் வெளியிடுவதை ஒரு வழமையாகக் கொண்டுள்ளது. அந்த வகையில் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களைத் தொகுப்பாசிரியராகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள "பெரியார் கொட்டிய போர் முரசு" எனும் நூல் நேந்று மாலை நடைபெற்ற இந்தி - சமஸ்கிருத எதிர்ப்பு மாநாட்டில், திமுக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களால் வெளியிடப்பட்டு, மேடையில் இருந்த பல்வேறு கட்சித் தலைவர்களால் பெற்றுக் கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து ரூ.120 நன்கொடை கொண்ட அந்நூல் மாநாட்டுச் சிறப்புத் தள்ளுபடியாக ரூ.100க்கு அளிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான பொது மக்கள் மேடைக்கு வந்து கழகத் தலைவரிடம் நூல்களைப் பெற்றுக் கொண்டனர்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner