எழுத்துரு அளவு Larger Font Smaller Font(சமஸ்கிருதம் பரவினால்தான் பார்ப்பனர் வாழ முடியும், சுரண்ட முடியும், நம்மை கீழ் ஜாதி மக்களாக ஆக்க முடியும். அவர்கள் பிராமணனாக இருக்க முடியும் என்ற உண்மையை ஆய்வு நோக்கில் வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் கட்டுரை.

மேலும் திராவிடர் இனத்திற்கும், தன்மானத்திற்கும் உரிமைக்கும் பேராபத்து உருவாகாமல் தடுத்த இந்தி எதிர்ப்புப் போர், தமிழ்ப் பண்டிதர்களின் சுயமரியாதையை மீட்டெடுத்த வரலாறு ஆகிய அரிய தகவல்களை அறிந்து கொள்ள உதவும் தந்தை பெரியார் அவர்களின் கட்டுரை.)
தமிழ்

இன்று இந்நாட்டில் நடைபெறும் ஆட்சியானது, ஜனநாயகக் குடியரசு என்ற போலிப் பெயரைக் கொண்டதாயினும், உண்மையாக இது பார்ப்பன நாயகம் என்பதையும், பார்ப்பனர்களது நலத்தைப் பாதுகாக்கின்ற தன்மையில் அவர்களால் நடத்தப்பெற்று வருவதாகும் என்பதையும், நான் பல தடவைகள் எடுத்துக்காட்டி வந்திருக்கிறேன்; இன்றும் அதைத்தான் செய்துகொண்டு வருகிறேன். இந் நாட்டில் உள்ள மற்ற அரசியல் கட்சிகள் என்கின்ற யாவும், இந்த அரசாங்கத்தில் நமக்கு ஏதாவது பங்கு கிடைக்கிறதா? நாமும் பொறுக்கித் தின்று வாழ்வதற்கு வகை கிடைக்காதா? என்கின்ற தன்மையில்தான் - அதனை ஒழிக்கவே போட்டி போடுவதைப் போல் நடித்து மக்களிடம் ஓட்டு வாங்கிக் கூட்டுக் கொள்ளைப் பங்கு பெறத் துடித்துக்கொண்டும் இருக்கின்றன. அரசாங்கத்தினரும் இவர்களுக்கும் பங்கு கிடைக்கவே பல ஏற்பாடுகள் செய்து வைத்து ஆசைகாட்டு கிறார்கள். ஆகவே, அவர்களால் (இதில் பங்கு பெறுபவர் களால்) இதைப் பார்ப்பன நாயகம் என்பதை ஒருநாளும் ஒப்புக் கொண்டதாகக் காட்டிக் கொள்ளமுடியாது. நெஞ்சார உணர்ந்ததை வெளியே சொன்னால் வயிறு கழுவுவது, காலட்சேபம் நடத்துவது - கொள்ளைப் பணம் சேர்ப்பது - பதவி பெறுவது பாதிக்கப்பட்டுவிடுமே என்று கருதி அஞ்சி, பயந்து ஒடுங்கி, பார்ப்பான் பாடுகிற - ஜனநாயக சங்கீதக் கச்சேரிக்கு இவர்கள் பக்கமேளம் வாசிப்பவர்களாக இருக்கிறார்கள். ஏனெனில், இதை ஜனநாயகம் என்று இவர்கள் ஒப்புக் கொள்ளாவிட்டால் இவர்கள் தேர்தலுக்கு நிற்க முடியாது; பதவிக்குப் போட்டி போடமுடியாது.

இது பகுத்தறிவைப் பயன்படுத்துகிற அறிவாளிகளுக்கு விளங்காமற் போகாது. இதை எவன் புரிந்துகொள்கின்றானோ அவனால்தான் திராவிடர் கழகத்தின் மகத்தான தொண்டின் சக்தி, மகத்துவம், பெருமை என்னவென்று உணரமுடியும்.

இன்று நடைபெறும் ஆட்சி பச்சைப் பார்ப்பன ஆட்சி என்றும், சூத்திரனை - பிராமணன் மேல்ஜாதி - கீழ்ஜாதிக் காரன் என்பவன் அப்படியே நீடித்து நிலைத்து என்றென்றும் சிரஞ்சீவியாக இருக்கவேண்டும் என்று பாடுபட்டுவரும் ஆட்சி என்றும் காட்டுவதற்கு இதுவரை பலவித ஆதாரங் கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன என்றாலும், இன்றும் ஒரு எடுத்துக்காட்டு காட்டுகிறேன்.

இந்த நாட்டில் பல காலமாக சமஸ்கிருதம் என்கின்ற ஒரு வடமொழியை (ஆரிய மொழியை) ஆரியர் இந் நாட்டில் புகுத்தி, அதற்குத் தேவ பாஷை எனப் பெயரிட்டுக் கடவுள்கள் - தேவர்கள், சமயம், சாத்திரம் ஆகியவைகளுக்கு அதில் சொன்னால்தான் புரியும் - பயன்படும் என்று காட்டி, நமது பரம்பரை இழிவிற்கு நிரந்தரப் பாதுகாப்பு ஏற்படுத்தி வருகிறார்கள்.

இந்நாடு நம்முடைய நாடு; இந்நாட்டில் நாம் தமிழர்கள் 100க்கு 97 பேர்கள் வாழ்கிறோம். நமது நாட்டு மொழி தமிழ் மொழி. இந்த நிலையில் நமது மொழிக்கும், நம் கலாச்சாரத் திற்கும், நம் பழக்க வழக்கங்களுக்கும் சம்பந்தமில்லாத - நம் நாட்டு மக்கள் எண்ணிக்கையில் நூற்றுக்கு 3 பேராக உள்ள - இந் நாட்டிற்குப் பிழைக்க வந்து குடியேறிய ஆரியப் பார்ப்பனர்களுடைய தாய்மொழியாக உள்ளதும், எழுத்தே இல்லாததுமான சமஸ்கிருதம் என்னும் மொழிக்கு இன்று இருந்துவரும் செல்வாக்கு, தமிழுக்கு உண்டா? இவ்வாரியர் புகுதலுக்குப் பின் இருந்திருக்கிறதா? இன்றைய இளைஞர் கள், வாலிபர்கள் பலருக்கு ஒரு முப்பது, நாற்பது வருடங்க ளுக்கு முந்திய நிலைமை எப்படி? தமிழுக்கு அப்பொழுது இருந்த மரியாதை, அந்தஸ்து என்ன? பார்ப்பன மேலோர் மொழியாக - சமஸ்கிருதத்திற்கு இருந்த அந்தஸ்து என்ன? என்பது பற்றிய பல விஷயங்கள் தெரியுமா? தெரியாது என்றே நினைக்கின்றேன். சுமார் 40 வயதுக்கு மேற்பட்ட வர்களுக்கு ஒரு வேளை தெரியக்கூடும்.

முன்பெல்லாம் ஒரு காலேஜில் ஒரு சமஸ்கிருத புரொஃப சர் வாங்கும் சம்பளத்துக்கும், தமிழ்ப் பண்டிதர் (புரொஃபசர்) வாங்கும் சம்பளத்துக்கும் மலை அளவு வித்தியாசம் இருக்கச் செய்தது. அரசாங்கத்தில் சமஸ்கிருதம் படித்தவ னுக்கு அவ்வளவு சலுகை! சமஸ்கிருத புரோஃபசருக்கு 350 ரூபாய் சம்பளம்! தமிழ்ப் பண்டிதருக்கு (புரொஃபசருக்கு) 75 ரூபாய்தான் சம்பளம். சமற்கிருத ஆசிரியருக்குப் பெயர் - புரொஃபசர்; தமிழ் ஆசிரியருக்குப் பெயர் - ஆசிரியர்.

காலஞ்சென்ற பேராசிரியர் திரு.கா.நமச்சிவாய முதலியார் அவர்கள் பிரசிடென்சி காலேஜில் புரொஃபசராக இருந்தபோது வாங்கின சம்பளம் ரூபாய் 81 என்பதாகத்தான் ஞாபகம். அதே நேரத்தில் அங்கு சமஸ்கிருத புரோஃபசராக இருந்த திரு. குப்புசாமி சாஸ்திரி (என்று ஞாபகம்) என்பவர் வாங்கின சம்பளம் ரூ.300க்குமேல்! ஜஸ்டிஸ் கட்சி அரசாங்கத்தில் முதல் மந்திரியாக இருந்த திரு. பனகல்ராஜா அவர்களே இதைக்கண்டு மனம் கொதித்து என்னிடத்தில் நேரில் சொல்லி, நீங்கள் இதைக்கண்டித்து ஒரு தலையங்கம் எழுதுங்கள் என்றும் சொன்னார். அவர் சமஸ்கிருதம் படித்தவர்; புலமைவாய்ந்தவர். என்ற போதிலும்கூட அந்தமாதிரி - அந்தஸ்திலும், சம்பளத்திலும் வேறுபடுத்திய கொடுமையைக் கண்டித்தார். பிறகு அரசாங்க உத்தரவு போட்டு அதன்மூலம் இவ்வேற்றுமையை ஒழித்தார். அன்று நாங்கள் போட்ட கூப்பாடும், ஜஸ்டிஸ் மந்திரி சபையின் உத்தரவும் இல்லாதிருந்தால் இன்றும் தமிழ்ப்பண்டிதர்கள் இதே நிலைமையில்தான் இருக்கக்கூடும். பிறகு, திரு. இராஜகோபாலாச்சாரியார் அவர்கள் 1937இல் இந்தியைக் கொண்டுவந்ததன் உள்நோக்கமே சமஸ்கிருதத்துக்குச் செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாகச் சரிந்து வருவதைத் தடுத்து அதை உயர்த்தவும், அந்த சமஸ்கிருத எதிர்ப்பு உணர்ச்சியை அழிக்கவுமேயாகும். இதை அவர் வெளிப் படையாகவே பல கூட்டங்களில் சொற்பொழிவுகளின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார். இதை நாம் இப்பொழுது விட்டால் நமது இனத்திற்கும், தன்மானத்திற்கும், உரிமைக் கும் பேராபத்து என்று கருதித்தான், ஆச்சாரியாரின் கட்டாய இந்தித் திணிப்பைப் பலமாக எதிர்த்துப் போராட்டம் துவக்கி சுமார் 2000 பேர்களைச் சிறைக்கு அனுப்பியதோடு, நானும் மூன்று ஆண்டுகள் கடின காவல் தண்டனை பெற்றேன். இன்று தமிழ்நாட்டில் சமஸ்கிருதம் என்ற ஒரு மொழி உண்மையிலேயே தேவைதானா? எதற்காவது பயன்படு கிறதா? அதற்கும் நமக்கும் கடுகத்தனையாவது, எதிலாவது, ஒற்றுமை - பொருத்தம் எவ்வகையிலாவது இருக்கிறதா என்று எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் தமிழர்க ளின் வாழ்வில், சமயத்தில், சமுதாயத்தில், அரசியலில், விஞ்ஞானத்தில் மற்றும், ஏதாவது ஒரு காரியத்திற்கு இந்த சமஸ்கிருதம் பயன்படுகிறதா? மற்றும், தமிழ் மக்கள் தமிழில் எவ்வளவுதான் மேதாவிகளாய் இருந்தாலும், அவர்களால் சமஸ்கிருதத்தைச் சரியானபடி உச்சரிக்க முடிகிறதா? தமிழர் யாராய் இருந்தாலும் சமஸ்கிருதம் உச்சரிப்பது என்றால் அது சிறிதாவது கஷ்டமானதும் சரிவர உச்சரிக்க முடியாதது மானதாகவே இருக்கிறது. தமிழ்நாட்டின் சீதோஷ்ண நிலைக்குப் பொருந்தாது - உச்சரிப்பதானால் சரியானபடி உச்சரிக்க முடிவ தில்லை; மனிதனின் சக்தியை அதிகம் பயன்படுத்தி ஆக வேண்டும். குளிர்நாட்டு மொழி, சமஸ்கிருதம், ஆகவே, அது நமக்குப் பேச்சு வழக்குக்கு உதவாததாகும்.

ஒரு மொழியின் தேவை - முக்கியத்துவமெல்லாம் அது பயன்படுகின்ற தன்மையைப் பொறுத்ததே ஆகும். அது எவ்வளவு பெரிய இலக்கியக் காவியங்களையும், தெய்விகத் தன்மையையும் தன்னிடத்தே கொண்டது என்று சொல்லிக் கொள்ளப்படுவதானாலும் - அது மக்களது அன்றாட வாழ்க்கையில், அவர்களது அறிவை வளப்படுத்தும் தன் மையில் எந்த வகையில் உபயோகப்படும்படி இருக்கிறது என்பதையே அளவுகோலாகக் கொண்டு அளக்கவேண்டும்.

உதாரணமாக, இன்று இங்கிலீஷ் மொழி சிறந்த மொழி என்று பல்லோராலும் ஒப்புக்கொள்ளப்படுகின்றதென்றால், அது புராதன மொழி என்பதோ அல்லது தெய்வாம்சம் உள்ள மொழி என்பதோ அதற்குக் காரணம் அல்ல. அதனுடைய உலக உபயோகமும், அது உலக மக்களது அறிவை, வாழ்வை வளப்படுத்த உதவிய, உதவுகின்ற தன் மையையும் பொறுத்ததேயாகும்.

1. ஒருவன் ஆங்கில மொழியைச் சுலபமாகக் கற்றுக் கொள்ள முடியும்.

2. ஆங்கில மொழியை அறிந்தவன் உலகத்தின் எந்தக் கோடிக்கும் சென்று அறிவைப் பெற்றுத் திரும்பிவர இயலும்.

3. ஆங்கில மொழியானது அறிவைத் தூண்டும் உணர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறதே தவிர, அது சுதந்திர மாகச் சிந்திக்கின்ற தன்மைக்கு விலங்கிட்டதாக ஒரு போதும் கிடையாது.

இம் மாதிரிக் காரணங்களால் அது சிறந்த மொழி என்று கருதப்படுகிறது. வெறும் அழகை மாத்திரம் வைத்துக் கொண்டு இப்படிச் சொல்லாமல், அதன் பயனைக் கணக் கிட்டுத்தான் அதனைப் பாராட்டித் தீரவேண்டிய நிலையில் இருக்கிறோம்.

இதற்குரிய யோக்கியதாம்சங்களில் ஏதாவது ஒன்றாவது நம் நாட்டில் உள்ள மொழிகளுக்கு இருக்கிறதா? அதிலும் குறிப்பாக - தேவ பாஷையான சமஸ்கிருதத்துக்கு உண்டா? என்ற கேள்விக்கு இன்றல்ல - பல ஆண்டுகளுக்கு முன்பே, இல்லை என்ற பதில் கிடைத்துவிட்டது. அது, பேச்சு வழக்கு இல்லாத ஒரு பாஷை ஆகும். இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள சுமார் 40 கோடி மக்களில் எத்தனைப் பேர்களுக்கு சமஸ்கிருதம், தாய் பாஷை? எத்தனைப் பேர்கள் பேசு கிறார்கள்?

பார்ப்பனர்கள் வகுத்த அரசியல் சட்டத்தில் அங்கீகரிக் கப்பட்ட 14 மொழிகளில் சமஸ்கிருதமும் ஒன்று என்று சர்வ ஜாக்கிரதையாக எழுதி வைத்துக்கொண்டு இருக்கின்றனர். இதுவே பெரிய மோசடி எண்ணத்தின் விளைவு என்பேன். சமஸ்கிருதம் பேசுகின்றவர்கள் இந்தியாவிலேயே மொத்தம் 441 பேர் - அதாவது சுமார் 500க்கும் குறைந்தவர்கள் என்ற புள்ளி விவரத்தை திரு. பி.ஜி. கேர் தலைமையில் ஏற்படுத்தப் பட்ட இந்திய ஆட்சி மொழிக் கமிஷனின் ரிப்போர்ட்(Official Language Commission Report)தெரிவிக்கிறது.

இதுகூடப் புரட்டு என்றுதான் கூறவேண்டும். சமஸ் கிருதத்தை வழக்கில் பேசுகின்றவர்கள் இந்த நாட்டில் யாருமே இல்லை. இந்திய சர்க்காரால் ஆண்டுதோறும் வெளியிடப்படும், இந்தியா ஆண்டு வெளியீட்டில் (India Year Book 1960)
உள்ள புள்ளி விவரம் - பக்கம் 45 இல் தரப்பட்டிருப்பதானதைக் கீழே பாருங்கள் :

மொழி    எண்ணிக்கை    மொத்தத்தில்
இலட்சத்தில்    சதவிகிதம்

இந்தி

உருது     1,499     46.3
இந்துஸ்தானி

பஞ்சாபி

தெலுங்கு     330     10.2
மராத்தி     270     8.3
தமிழ்     265     8.2
வங்காளி     251     7.8
குஜராத்தி     163     5.0
கன்னடம்     145     4.5
மலையாளம்     134     4.1
ஒரியா     132     4.1
அஸ்ஸாமி     50 1.5
காஷ்மீரி     0.05  
சமஸ்கிருதம்     0.01     
100

இந்தப் புள்ளிவிவரங்களின்படி மிகமிகக் குறைந்த மக்கள் - மைக்ராஸ்கோபிக் (விவீநீக்ஷீஷீsநீஷீஜீவீநீ) (பூதக் கண்ணாடி வைத்துத் தேடவேண்டிய அளவு) மைனாரிட்டியினர் மொழியாகத்தான் - (நாம் இந்தப் புள்ளிவிவரத்தை ஒப்புக் கொண்டே பேசுவதானாலும் கூட) அது இருக்கிறது.

அப்படி இருந்துங்கூட, மேலே பலநூறு இலட்சக்கணக் கான மக்களால் பேசப்படும் பல மொழிகளுக்குக் கிடைக்காத சலுகை இன்று இதற்குத் தரப்படுகிறதே, காரணம் என்ன?

சமஸ்கிருதமொழி ஒரு செத்தமொழி என்ற உண்மை (Dead Langugage) பல்லோராலும் மறுக்காமல் ஒப்புக்கொள் ளப்பட்ட உண்மையாகும்.அதை உயிர் ஊட்டுவதற்காகப் பார்ப்பனர்களைக் குடியாட்சித் தலைவர்களாகவும், மந்திரி களாகவும், நீதிபதிகளாகவும் கொண்டுள்ள இந்த ஆட்சி யினர், சமீப காலமாகச் செய்துவரும் பகீரதப் பிரயத்தனங் களும் அதற்காக மற்ற மக்களிடத்தில் கசக்கிப் பிழிந்து வாங்கும் வரிப்பணத்தைக் கரியாக்குவதையும் பற்றி இந்த நாட்டில் உள்ள பொதுமக்கள் தலைவர்களோ, மொழிவல்ல டாக்டர்களோ யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவே இல்லை.

எடுத்துக்காட்டாக, அக்டோபர் 1956இல் சமஸ்கிருதக் கமிஷன் என்ற ஒன்றை இந்திய சர்க்கார் நியமித்தார்கள். இந்தக் கமிஷனின் நோக்கங்கள் யாவை என்பதையும் அர சாங்கத்தினர் சொன்னார்கள். அதன் நோக்கம் பல்கலைக் கழகங்களிலும், வெளியிலும் சமஸ்கிருதத்தை - சமஸ்கிருதக் கல்வியைப் பரப்புவதும், அதற்கு மீண்டும் புத்துயிர் ஊட்டு வதுமேயாகும். இந்தக் கமிஷன் தனது அறிக்கையை டிசம்பர் மாதம் 1957இல் சமர்ப்பித்தது. இதன் சிபாரிசுகளை அரசாங்கம் அப்படியே ஏற்றுக்கொண்டு, அதைத் தனது திட்டமாகச் செயல்படுத்திக் கொண்டுவருகிறது. இந்த ஆட்சிக்குப் பெயர் ஜனநாயகமாம்!

நன்றாகச் சிந்தித்துப் பார்க்கவேண்டும். ஒரு கமிஷன் என்றால் அதற்குப் பல்லாயிரக் கணக்கான ரூபாய்கள் செலவு - வீண் விரயம் என்று அர்த்தம். இதனால் யாருக் காவது காதொடிந்த ஊசியளவு பிரயோசனம் உண்டா? விரயம் செய்யப்பட்ட பணம் அத்தனையும் நம்மிடத்தி லிருந்து வரியாகக் கோடிக் கணக்கில்-தில்லி சர்க்காரால்-பகற் கொள்ளையரைப்போல் எடுத்துச் செல்லப்படுவது தானே? பார்ப்பனரிடம் இருந்து போகும் வரி விகிதாசாரம் என்ன? நம்மிடம் இருந்துபோகும் வரியின் விகிதாசாரம் என்ன? அண்டைவீட்டு நெய்யே, என் பெண்டாட்டி கையே என்கின்ற தன்மையில், இலட்சக்கணக்கில் இப்படி வாரி யிறைத்துப் பதறப் பதற நாசமாக்கிக் கொண்டிருப்பதை - நாம் இன்னமும் சகித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இவ்வாறுதான் இருக்கவேண்டுமா?

சமஸ்கிருதக் கமிஷன் சிபாரிசுப்படி மத்திய சர்க்காரி லேயே மத்திய சமஸ்கிருத போர்டு (சிமீஸீtக்ஷீணீறீ ஷிணீஸீsளீக்ஷீவீt ஙிஷீணீக்ஷீபீ) என்ற ஒரு அமைப்பு 1957 ஆகஸ்ட் முதல் தேதியிலிருந்து ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதற்கு, முன்னாள் சுப்ரீம்கோர்ட் சீப் ஜஸ்டிஸ், திரு. பதஞ்சலி சாஸ்திரி தலைவர்; மற்றும் 8 பேர் உறுப்பினர்கள், மூன்று வருடங்களுக்கு இவர்கள் பதவியில் இருப்பார்கள். (மெயில் தேதி 1.7.1959)
இந்தப் போர்டினது பிரதான நோக்கம் எல்லாம் - சமஸ்கிருதத்தை இந்தியா முழுவதிலும் எப்படிப் பரப்புவது என்பதற்கான வழிவகைகளை ஆராய்ந்து மத்திய சர்க் காருக்கு அவ்வப்போது ஆலோசனை கூற வேண்டியது தானாம். சமஸ்கிருதக் கமிஷனின் சிபாரிசுகளை நடை முறைக்குக் கொண்டுவருவதற்காக இரண்டாவது அய்ந் தாண்டுத் திட்டத்தில் பல இலட்ச ரூபாய் அதற்காக ஒதுக்கப்பட்டதாம்.  (Central Sanskrit Board) 14.06.1959).

இப்படிப் பல இலட்ச ரூபாயைக் கரியாக்குவதன்மூலம் யாருக்கு என்ன நன்மை என்பது ஒருபுறம் இருக்கட்டும்; அரசியல் சட்டத்தில் உள்ள மற்ற 13 மொழிகளுக்குக் காட் டாத சலுகை, சமஸ்கிருதத்திற்கு மட்டும் என்ன தேவை? அப்படிச் சமஸ்கிருத இலக்கியத்திற்கும் மொழிக்கும் ஊக்கம் அளிப்பது என்றால், அதைத்தனிப்பட்டவர்களான பிர்லா, கே.எம். முன்ஷி போன்றவர்களால் அதற்கெனவே ஏற்படுத்தப்பட்டுப் பிரச்சாரம் செய்யப்பட்டுவருகின்ற - பாரதிய வித்யாபவனம், பாரத இதிகாச சமிதி, சமஸ்கிருத விசுவபரிஷத் போன்றவைகள் செய்து கொள்ளலாம் அல்லவா? மத்திய சர்க்கார் மாத்திரம் இதற்கு ஏன் இவ்வளவு சலுகை காட்டவேண்டும்? இது மாத்திரம் அல்ல. மத்திய சர்க்காரின் ஆதரவுள்ள, சாகித்திய அகடமியின் ஆதரவில் சமஸ்கிருதத்தைப் பரப்புவதற்கென்றே ஒரு பத்திரிகையும் துவக்கப் பெற்றுச் சிலமாதங்களாக நடந்துவருகின்றது. இதற் கெல்லாம் அடிப்படையான காரணம் என்ன? இவ்வளவு ஆர்வம் செலுத்துவதன் உள்நோக்கம் என்ன? என்று ஆராய்ந்தால்தான் பார்ப்பான் தனது ஆதிக்கத்தையும் ஏகபோக உரிமையையும் பாதுகாப்பதில் எவ்வளவு கண் ணும் கருத்துமாக இருக்கிறான் என்பது விளங்கும்.

சமஸ்கிருதம் பரவினால்தான் பார்ப்பான் வாழமுடியும்; சுரண்டமுடியும் நம்மைக் கீழ்ஜாதி மக்களாக ஆக்கமுடியும்; அவன் பிராமணனாக இருக்க முடியும். அதன் நலிவு, பார்ப்பன ஆதிக்கத்தின் சரிவு என்பதை உணர்ந்துதான் ஒவ்வொரு பார்ப்பனரும் சர்வ ஜாக்கிரதையாக - விழிப் போடு காரியம் செய்து வருகிறார்கள்.

இல்லாவிட்டால், உலகம் பூராவும் சுற்றி வருகிற சசிவோத்தம சர்.சி.பி. இராமசாமி அய்யர், சமஸ்கிருதந்தான் இந்தியாவின் அரசாங்க மொழியாக இருக்கவேண்டும் என்று பேசிவருவாரா? அதுமட்டுமா? தமிழைத் தாய்மொழி என்று கூறுகின்ற பார்ப்பனரைக் காணமுடிவதில்லையே! தப்பித் தவறி எங்காவது ஒன்று இரண்டு சுட்டிக்காட்டுவீர் களானால் அது வயிற்றுப்பிழைப்பைக் கருதி அப்படி உதட் டளவில் கூறிய பார்ப்பனனாக இருக்கும், அவ்வளவுதான்.

சமஸ்கிருத விஸ்வ பரிஷத்தின் கூட்டம் புதுதில்லியில் பாபு இராஜேந்திர பிரசாத் தலைமையிலே, அதுவும் இராஷ் டிரபதி பவனத்தில் நடக்கிறது. அதில் தீர்மானம் கொண்டு வருகிறார்கள்;  அரசாங்கத்திடம் சொல்லி - சமஸ்கிருதப் படிப்புக்கு என ஒதுக்கி இருக்கும் தொகையைச் செல வழிக்காவிட்டாலும்கூட, அதை சமஸ்கிருதமல்லாதவற்றிற் குச் செலவிடக் கூடாது; அது சம்பந்தமாகச் சட்டங்கள் செய்யப்படுவதோ, உத்தரவு போடப்படுவதோ தடுக்கப்பட வேண்டும் என்று கூற ஒரு கமிட்டி ஏற்படுத்தி, அதில் உறுப்பினர்களாக, இந்திய பார்லிமெண்ட்டின் சபாநாயகர் திரு. அனந்த சயனம் அய்யங்கார், இன்றைய சுப்ரீம் கோர்ட் பிரதம நீதிபதி திரு. பி.பி. சின்ஹா போன்ற சிலர் நியமிக்கப்பட்டு உள்ளனர். (பவன்ஸ் ஜர்னல், 23.03.1959).

சமஸ்கிருதத்திற்கு ஒதுக்கப்படும் பணம் செலவாக வழியில்லை என்றால்கூட, வேறு காரியத்திற்குச் செலவிடப் படக்கூடாதாம்! எவ்வளவு பரந்த மனப்பான்மை! இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பார்ப்பனரின் காலைக் கழுவிய திரு. இராஜேந்திரபிரசாத் - குடியாட்சித் தலைவரின் தலைமையின் கீழாகும். இதைப் போய் - மதச் சார்பற்ற அரசாங்கம் என்றும், பார்ப்பன அரசாங்கம் அல்ல என்றும் சொல்லுவது, மனிதன் உடனே சாகக்கூடிய மாதிரியில் கடிக் கின்ற பாம்புக்கு நல்ல பாம்பு என்று பெயர் வைத்திருப்பது போன்றதல்லவா? ரிட்டயரான ஒவ்வொரு பார்ப்பன ஜட்ஜ், அதிகாரி, தலைவர் எல்லோருக்கும் எப்படி சமஸ்கிருதத்தைப் பரப்புவது என்பதில்தான் கவலை. அது பரவினால், ஆழ வேரூன்றினால்தான் பார்ப்பன ஜாதித் திமிருக்கு உரம் போட்டது போலவாகும் என்பதை நன்றாக உணர்ந்துதான் அவர்கள் இவ்வாறு தீவிரமாக இதில் ஈடுபட்டுக் கொண்டிருக் கின்றார்கள்.

நம்முடைய மக்களோ இதைப்பற்றியெல்லாம் கவலைப் படாமல், நாம் எவனுக்கு வைப்பாட்டி மக்களாக இருந்தால் என்ன? வயிறு நிரம்ப வேண்டியதுதானே என்று இருக்கிறார்கள்.

நம்முடைய புலவர்கள், அறிஞர்கள் எல்லோரும் இதைப் பற்றியே நினைக்க நேரமில்லாத மாதிரி காட்டிக் கொண்டு, பார்ப்பானின் காலைக் கழுவி கதி மோட்சம் பெறுவதில் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

- "விடுதலை", 15.2.1960

சமஸ்கிருதமொழி ஒரு செத்தமொழி என்ற உண்மை  பல்லோராலும் மறுக்காமல் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மையாகும்.அதை உயிர் ஊட்டுவதற்காகப் பார்ப்பனர்களைக் குடியாட்சித் தலைவர்களாகவும், மந்திரிகளாகவும், நீதிபதிகளாகவும் கொண்டுள்ள

இந்த ஆட்சியினர், சமீப காலமாகச் செய்துவரும் பகீரதப் பிரயத்தனங்களும் அதற்காக மற்ற மக்களிடத்தில் கசக்கிப் பிழிந்து வாங்கும் வரிப்பணத்தைக் கரியாக்குவதையும் பற்றி இந்த நாட்டில் உள்ள பொதுமக்கள் தலைவர்களோ, மொழிவல்ல டாக்டர்களோ யாரும் கவலைப்பட்டதாகத் தெரியவே இல்லை.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner