- ஆளுநர் செய்வாரா? தமிழர் தலைவர் பேட்டி
கரூர், ஆக. 28- சட்டமன்றத்தை உடனே கூட்டி, அரசியல் சட்டப்படி ஆளுநர் தன்னுடைய கடமையை செய்ய வேண்டும், அதன்மூலம் தான் குதிரைப் பேரம் நடக்காமல் தடுக்க முடியும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்..
நேற்று (28.8.2017) கரூரில் செய்தியாளர்களுக்குத் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பேட்டியளித்தார்.
அவரது பேட்டி வருமாறு:
செய்தியாளர்: சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநரை சந்தித்திருக்கிறார்களே, ஆளுநர் என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?
தமிழர் தலைவர்: அரசமைப்புச் சட்டப்படி ஆளுநர், பொறுப்பு ஆளுநராக இருந்தாலும், சில நாள்கள் இங்கே தங்குவேன் என்று சொல்லியிருக்கிறார். அரசமைப்புச் சட்டப்படி அவர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
வெளிப்படையாகவே ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்களே இந்த அரசு மைனாரிட்டி அரசாங்கமாக ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இல்லை, இல்லை, நாங்கள் மெஜாரிட்டியை நிரூபிப்போம் என்று ஆளுபவர்கள் சொன்னால், இதற்கு ஒரே வாய்ப்பு - சட்டமன்றத்தை உடனே கூட்டி, Floor Test நடத்துவது தான். எவ்வளவு காலம் தாழ்த்துகிறார்களோ, அவ்வளவுக்கவ் வளவு குதிரை பேரங்கள் அதிகமாகக் கூடிய வாய்ப்பு இருக்கிறது.
தமிழ்நாட்டில் வரலாற்றில் இதுவரை குதிரைப் பேரங்கள் நடந்ததில்லை. புதிதாகக் குதிரைகளைக் கொண்டு வந்து இறக்கியிருக்கிறார்கள். குதிரை பேரம் நடக்கக்கூடாத அளவிற்கு, ஆளுநர் அரசமைப்புச் சட்டப்படி அவருடைய கடமையை செய்ய வேண்டும்.
செய்தியாளர்: ஆளுநர் அப்படி செய்வார் என்று எதிர்பார்க் கிறீர்களா?
தமிழர் தலைவர்: நல்ல எண்ணத்தைத்தான் நாங்கள் எதிர் பார்க்க முடியும். அப்படி செய்வாரா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். எதிர்க்கட்சிக்கான தி.மு.க., காங்கிரசு போன்ற கட்சி களும் ஆளுநரை சந்தித்திருக்கின்றன. ஆகவே, அவர் செய்வார் என்றுதான் எதிர்பார்க்கின்றோம். அப்படி அவர் செய்யவில்லை என்றால், மக்களை அணுகவேண்டியதைத் தவிர வேறு வழியில்லை.
ஏனென்றால், இது மற்றொரு பஞ்சாப்பாக ஆகாது என்று அவர்களுக்கே தெரியும். பெரியார் பிறந்த மண் இது - ஜனநாயக ரீதியாகத்தான் போராடுவோம். திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கட்சியாக இருந்தாலும், குறுக்குவழியில் நாங்கள் பதவி யைப் பிடிக்கப் போவதில்லை; கொல்லைப்புற வழியாக ஆட் சிக்கு வரப் போவதில்லை என்று நாணயத்தோடு எதிர்க்கட்சித் தலைவர் தளபதி ஸ்டாலின் அவர்கள் சொல்லியிருக்கிறார்.
இதையெல்லாம் புரிந்துகொண்டு ஜனநாயகத்தைக் காப்பாற்ற வேண்டியது ஆளுநருடைய கடமை!
ஆளுநர் யார் கையை, எப்பொழுது பிடித்தார் என்பது முக்கியமல்ல. இப்பொழுது அரசமைப்புச் சட்டத்தை கைகளிலி ருந்து நழுவ விடக்கூடாது.
செய்தியாளர்: அ.தி.மு.க. எம்.எல்.ஏ.,க்களின் நடவடிக்கைகள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரியாகப் பேசுகிறார்கள். முதலில் சொன்ன கருத்துக்கு மாறுபாடான கருத்தை சொல் கிறார்களே?
தமிழர் தலைவர்: ஆமாம்! மார்க்கெட் விலை அதிகமாக வேண்டும் என்பதற்காக!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.