எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இல்லையேல் மக்கள் கிளர்ச்சி வெடிக்கும்!

பெரும்பான்மையை இழந்து விட்ட ஆளுங்கட்சி, சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கச் செய்ய ஆளுநர் ஆவன செய்ய வேண்டும்; இல்லையேல் மக்கள் கிளர்ச்சி வெடிக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் உள்ள மக்களின் சுயமரியாதையையும், அரசியல் புரிந்துணர்வையும் மத்தியில் உள்ள பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். அரசு திட்டமிட்டே அலட்சியப்படுத்தி வருகிறது!

கோலெடுத்துக் குரங்காட்டம்!

இங்குள்ள  ஆளுங்கட்சியினை 'கோலெடுத்து குரங்காட்டம்' ஆடச் செய்யும் அரசியல் அவலத்தை - அரசமைப்புச் சட்டத்தினைப் புறந்தள்ளி - அன்றாடம் அரங்கேற்றி, தமிழ்நாட்டவர்களுக்கு - ஜனநாயகத்திற்கு - அறைகூவல் விட்டுக் கொண்டே இருக்கிறது!

இங்கே ஆர்.எஸ்.எஸ். நபர்கள் சிலரை அரசமைப்புச் சட்டத்திற்கு அப்பாற்பட்ட டில்லியின் உளவு சக்திகளாக்கி தமிழ்நாட்டின் பலமான ஆளுங்கட்சியை பிளவுபடுத்தும் வேலை நடந்து வருகிறது. தங்கள் வசம் உள்ள அதிகாரங்களை ஏவுகணைகளாக்கி - வருமானவரித்துறை மற்றும் சில அமைப்புகள் மூலம் - அடிபணிய வைத்ததோடு அவர்கள் ஆணைக்கேற்ப ஆடவும் செய்கின்றனர்.

இது "உலகறிந்த ரகசியமாகி" வெளிச்சம் போட்டுக் காட்டப்படுகிறது!

கையிணைக்கும் ஆளுநர்

ஆளுங்கட்சியில் உள்ள, ஒருவர் ஓர் அணியாகி வெளியேறியவுடன், அவருக்கே தனிச் செல்வாக்கு உண்டு என்று காட்டுவதுபோல, அன்று முதல் இன்று வரை பல செயல்கள் நடந்து வருகின்றன!

அதிமுகவின் இரு அணிகள் இணைவதாகப் பேச்சு வார்த்தைக்கு டில்லி நாள் குறித்ததன் அடிப்படையில்,  பொறுப்பு ஆளுநர் - (தனி ஆளுநர் இருக்கும் தகுதியைக் கூட தமிழ்நாடு இழந்து நிற்கும் பரிதாப நிலையில்) அவரது மகாராட்டிர மாநில அலுவல்களைக்கூட தள்ளி வைத்து விட்டு, தமிழ்நாட்டிற்கு அவசர அவசரமாக வந்து அணிகளை ஒன்று சேர்க்கக் காத்திருப்பது போல், உடனடியாக நேரம் ஒதுக்கி, பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் நிலையில், ராஜாவை விஞ்சும் ராஜவிசுவாசி என்பார்களே அதுபோல, இரண்டு பேரின் கைகளைப் பிடித்த அந்தக் காட்சியை டி.வி.கார்கள் எடுத்துக் காட்டும் வகையில் முகமலர்ச்சியோடு கடமையாற்றுகிறார்!

அமைச்சரின் ஒப்புதல்

அதே கட்சியின் 19 சட்டமன்ற உறுப்பினர்கள் தாங்கள் எடப்பாடி தலைமையிலான முதல் அமைச்சருக்குத் தந்த ஆதரவினை விலக்கிக் கொள்கிறோம் என ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் தனித்தனியே கையெழுத்துப் போட்டு ஆளுநரைச் சந்தித்து மனு கொடுத்துவிட்டனர்!

ஆளுங்கட்சி அமைச்சர் ஒருவரே தாங்கள் 'மைனாரிட்டி'  ஆகியுள்ளோம் என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததோடு, பணம் பாதாளம் வரை பாயும் என்ற முறையில் அதனால் நாங்கள் எங்கள் பலத்தினைக் காட்டுவோம் (குதிரைபேரத்தில் ஈடுபட்டு) என்று திருவாய் மலர்ந்ததெல்லாம் ஆரோக்கிய ஜனநாயகத்தின் அடையாளமா?

இந்நிலையில் தமிழ்நாட்டின் எதிர்க்கட்சியினர் - ஆளுநரைச் சந்தித்துப் பேசியபோது சட்டமன்றத்தைக் கூட்டி பலத்தை (திறீஷீஷீக்ஷீ ஜிணிஷிஜி) ஆளுங்கட்சி - குறிப்பாக முதல்வர் நிருபித்து காட்ட வேண்டும் என்று ஆணையிடுவது ஆளுநர் அரசமைப்புச் சட்டப்படி செய்ய வேண்டிய இன்றியமையாத கடமையல்லவா?

பந்து யாரிடம் உள்ளது?

நேற்று  (30.8.2017) கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர்கள் ஆளுநரைச் சந்தித்து சட்டமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபித்துக் காட்ட தாமதிக்காது ஆணையிட வேண்டும் என்றும், நாளும் குதிரை பேர முயற்சிகள் பெருகி வரும் ஜனநாயகப் படுகொலை முயற்சிகள் நடைபெற்ற வண்ணம் உள்ளதைத் தடுக்க வேண்டும் என்றும் தங்கள் கவலையைத் தெரிவித்த போது,

"பந்து என்னிடம் இல்லை!"

"இது அவர்களின் உட்கட்சி விவகாரம், அதில் நான் தலையிட முடியாது" என்று கூறுவது மக்களாட்சி மாண்புகளைச் சிதைக்கும் பொறுப்பு ஆளுநரின் பொறுப்பற்ற பேச்சாக உள்ளதே என்று பொதுமக்கள் கேட்கமாட்டார்களா? இது ஆளுநர் பதவியின் பெருமையைக் குலைப்பதாகாதா?

சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு இருக்க வேண்டாமா?

"சீசரின் மனைவி சந்தேகத்திற்கப்பாற்பட்டவராக இருக்க வேண்டும்" என்ற பழமொழிக்கொப்ப மேதகு ஆளுநர் நடுநிலை தவறலாமா?

"பந்து" என்னிடத்தில் இல்லையென்றால் வேறு யாரிடத்தில் உள்ளது? புரியவில்லையே! டில்லி ஆளும் பா.ஜ.க. விடத்திலா? பிரதமர் மோடியிடத்திலா?

பஞ்சாப் - அரியானா சாமியார் தண்டனைக் கலவரங்களையொட்டிய பஞ்சாப் - அரியானா உயர்நீதிமன்ற  மூன்று நீதிபதிகள் அமர்வில் பிரதமர் மோடி பா.ஜ.க.வுக்கு மட்டும் பிரதமரா? என்று 'நறுக்கென்று' கேட்டுள்ளனரே அதற்கு தமிழ்நாட்டு அரசியல் நடப்புகளும் கூடுதல் சாட்சியங்கள் தானே!

அன்று என்ன செய்தார் ஆளுநர்?

ஏற்கெனவே இதே பொறுப்பு ஆளுநர் என்ன செய்தார்?  ஓ.பன்னீர்செல்வம் (ளிறிஷி) அணியினர் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சிக்கு இல்லை என்று ஆளுநரிடம் கூறிய நிலையில் திறீஷீஷீக்ஷீ ஜிமீst க்கு - சட்டமன்றத்தைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க ஆணையிட்டாரே!

அதே நிலைதானே இப்போதும்? இன்னும் கேட்டால் அப்போது, 10 எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை - இப்போதோ 19 எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை - கூடுதலாக நாங்கள் பெரும்பான்மையை இழந்து விட்டோம் என்று அமைச்சரின் ஒப்புதல் வாக்குமூலமும்!

ஏன் இந்த இரட்டை அளவுகோல்? எதற்காக இப்படி ஒரு முரண்பட்ட அணுகுமுறை?

மக்கள் கிளர்ச்சிக்கு இவர்களே தூண்டி விடும் நிலை அல்லவா?

அரசியலில் குதிரை பேர நடவடிக்கைகளுக்குத் துணை போவதாக ஆகாதா?

மக்கள் கிளர்ச்சி வெடிக்கும்!

ஜனநாயகப் படுகொலை செய்து, மைனாரிட்டி ஆட்சியாக - டில்லி பா.ஜ.க.வின் கண் ஜாடைக்கேற்ப ஆடும் ஆட்சியாக தமிழ்நாட்டில் இந்த ஆட்சி எப்படி நிலையான (ஷிஜிகிஙிலிணி)  அரசாக அமைய முடியும்?

ஆளுநர் தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் - இன்றேல் மக்கள் கிளர்ச்சியாக வெடிப்பது தவிர்க்க இயலாததாகும். தமிழ்நாட்டில் ஜனநாயகம் இப்போது மருத்துவமனையில் உள்ளதோ!


திருச்சி                                                                                  தலைவர்
31-8-2017                                                             திராவிடர் கழகம்


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner