எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வன்முறை இருமுனைக் கூர் ஆயுதம் என்பதை மறக்கக்கூடாது

பாலியல் வல்லுறவு, ஆள்கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலில் முதலிடம் பிஜேபிக்குத்தான் என்பது ஆரோக்கியமானதுதானா? பசுப் பாதுகாவலர்கள் என்ற பெயரில் காவி உடையில் காலிகள் வன்முறையில் ஈடுபடலாமா? வன்முறை இருமுனைக்கூர் உள்ள ஆயுதம் அல்லவா!  சட்டத்தைத் தனியார் கையில் எடுத்தால் நாட்டில் சட்டம் - ஒழுங்கு நிலைக்குமா? இதே நிலையை மற்ற மற்ற அமைப்பினர் பின்பற்றினால் நாட்டின் நிலை என்ன? என்று அடுக்கடுக்கான வினாக்களை தொடுத்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள். அறிக்கை வருமாறு:

பாலியல் வல்லுறவு, ஆள்கடத்தல் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான கிரிமினல் குற்ற வழக்குகளைக் கொண்ட சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்டியலில் பா.ஜ.க.வினர்தான் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்களாம்!
இரண்டாவது இடம் சிவசேனைக்குக் கிடைத்துள்ளது.

வேட்புமனு தாக்கலின் போது, சம்பந்தப்பட்ட சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களே அளித்த, உறுதிமொழிப் பத்திரங்களை ஆய்வு செய்து, ஜனநாயக சீர்திருத்த சங்கம் (ஏடிஆர்) என்ற அமைப்பு இந்த உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளது!

அதுபோலவே தேர்தல் நிதி பெற்றதிலும் முதலிடம் பா.ஜ.க.வுக்கே! சுமார் 700 கோடிரூபாய்க்கு மேலே தேர்தல் நிதியாக - பெரும் “கார்ப்பரேட் திமிங்கலங்கள்” உட்பட பலருடைய பணம் இதில் அடக்கம் என்பது உலகறிந்த செய்தியாகும்.

குற்றப்பட்டியலில் பிஜேபியினரே அதிகம்

நாடு முழுவதும் 4 ஆயிரத்து 120 சட்டமன்ற உறுப்பினர்களில் 4 ஆயிரத்து 78 உறுப்பினர்களின் தேர்தல் ஆணைய உறுதி மொழிப் பத்திரங்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 776 பேரில், 774 பேர்களின் உறுதிமொழிப் பத்திரங்களையும் ஜனநாயக சீர்த்திருத்த சங்கம் அண்மையில் ஆய்வுக்கு உட்படுத்தியது.

அப்போது 33 சதவிகித சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1581 பேர்) கிரிமினல் வழக்குகளை கொண்டிருக்கின்றனர் என்பது தெரிய வந்துள்ளது.

எனினும் ஏ.டி.ஆர். அமைப்பானது, இந்த கிரிமினல் வழக்கு உள்ளவர்களில், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் கொண்டவர்களை பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் வாரியாக தனியாக வகைப்படுத்தியது.

இதில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை இழைத்ததாக, நாடு முழுவதும் 48 சட்டமன்ற உறுப்பினர்கள், 3 நாடாளுமன்ற உறுப்பினர்கள் என மொத்தம் 51 பேர் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதும், இவர்களில் 14 பேர் பா.ஜ.க.வினர் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

பிஜேபி, சிவசேனை ஆளும்
மகாராட்டிரம் முதலிடம்

மாநில வாரியாக பார்க்கையில் முதலிடம் மகாராட்டிர மாநிலத்தில் (பா.ஜ.க.,  சிவசேனை கூட்டு அரசு) பெண்களுக்கு எதிரான குற்றமிழைத்த எம்.பி.கள், எம்.எல்.ஏ.க்கள் அதிகம் உள்ளனர்.

இங்கு 12 பேர் மீது வழக்குகள் உள்ளன. அடுத்த இடம் மேற்கு வங்கம், அதற்கடுத்து ஒடிசா என்பது நாட்டில் ஆரோக்கியமான அரசியலை பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். ஊக்குவிக்கிறதா?

அரசு சார்பில் காவல்துறை சட்டம்  - ஒழுங்கைப் பராமரிக்க இருக்கும் போது, பா.ஜக. ஆளும் பல மாநிலங்களில் ‘பசுப் பாதுகாவலர்கள்’ (சிஷீஷ் க்ஷிவீரீவீறீணீஸீtமீமீs) என்ற போர்வையில் காலிகள், காவியுடையிலோ அல்லது இல்லாமலோ, சிறுபான்மையினரையும், தாழ்த்தப்பட்ட தலித்துகளையும் கொல்லும் கோரம் தாண்டவமாடுகின்றனர். இது அரசியல் சட்டப்படி அனுமதிக்கப்படாத ஒன்று! தனியார் சேனைகளை (றிஸிமிக்ஷிகிஜிணி கிஸிவிசீ) - இப்படி இயக்கினால் அது எவ்வகையில் நியாயமாகும்?

காவி உடையில் காலிகளின் வன்முறைகள்

தமிழ்நாட்டில் பிள்ளையார் ஊர்வலம் என்ற பேரில் வடநாட்டுப்பணம் விளையாடிதானே, ஆயிரம் பிள்ளையார் என்று நட்டு வைத்து, சாராயம் குடித்து ஆடும் பக்தி - சாராயபோதையாளரின் காட்சிகள் காவல்துறைக்கே தெரியாத ஒன்றா?

பா.ஜ.க. ‘மிஸ்டுகால் கட்சி’ என்றாலும் அதில் பல குண்டர்கள் ஏற்கெனவே கிரிமினல் பட்டியலில் இருந்தவர்கள்! காவிச் சின்னத்தில் “புனிதர்களாக” வலம் வந்து திட்டமிட்டே மற்ற கட்சிகளோடு வம்பு சண்டை இழுப்பதும், காவல்துறையினர் சோளக்கொல்லை பொம்மை போல் வேடிக்கை பார்த்து நிற்பதும் தமிழ்நாட்டில் அன்றாட  அவலங்களாக உள்ளனவே!

காவல்துறை இதைத் தடுக்க உரிய வகையில் தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கையெடுக்கத் தவறினால் சட்டம் - ஒழுங்கு மிகவும் சீர்கேடு அடையும் ஆபத்து உள்ளது!

மக்களும், மற்ற கட்சியினரும் தங்களைக் காக்க அடிதடி, வன்முறையில் ஈடுபட்டாக வேண்டிய கட்டாயத்தை அவர்கள் மீது திணிப்பது போல் ஆகாதா?

அறவழியில் அமைதிப் பூங்காவான தமிழ்நாடு - இந்திய தேசமும் - இப்படி அமளிக்காடாக/ கலவர பூமியாக ஆக ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது!

வன்முறை இருமுனைக்கூர் ஆயுதம்!

கிரிமினல் பேர் வழிகளை எந்த அரசியல் கட்சியும் தங்கள் உறுப்பினராகச் சேர்க்காது, பொது ஒழுக்கத்தைக் காப்பாற்ற முன் வரவேண்டும்.

கருத்துகளை கருத்தால் வெல்ல முயல வேண்டுமே தவிர, காலித்தனம், வன்முறையை நம்பி இறங்கினால், அது இருமுனைக் கூரான ஆயுதம் என்பதையும் மறந்து விடக்கூடாது.சென்னை                                                                                  தலைவர்
1-9-2017                                                                               திராவிடர் கழகம்

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner