புதுடில்லி, செப்.8 'இந்தியாவில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்ததை விட, வருமான ஏற்றத்தாழ்வு தற்போது அதிகரித்துள்ளது' என, ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல பொருளாதார வல்லுனர்கள் தாமஸ் பிக்கட்டி, லுகாஸ் சான்செல் ஆகியோர், '1922- - 2014 இந்தியாவின் வருமான ஏற்றத்தாழ்வு' என்ற, ஆய்வறிக்கையை வெளியிட்டு உள்ளனர்.
அதன் விபரம்: இந்தியாவில் வருமான வரியை, 1922இல், ஆங்கிலேயர்கள் நடைமுறைப்படுத்தினர். நாட்டின், அப்போதைய மொத்த வருமானத்தில், 21 சதவீத வருவாயை, 1 சதவீதத்தினர் ஈட்டினர். 1980, நாட்டின் மொத்த வருமானத்தில், உயர் வருவாய் பிரிவினர், 6 சதவீதத்தை கொண்டிருந்தனர்; வருமானம் ஈட்டுதலில் ஏற்றத்தாழ்வு குறைந்தது. பின், தாராளமய பொருளாதார கொள்கை, சந்தை கொள்கைகளில் தலை கீழ் மாற்றம் காரணமாக, நாட்டின் வளர்ச்சி விகிதம் அதிகரித்தது. அதிக வருவாய் பிரிவினர், நாட்டின் மொத்த வருமானத்தில் பெரும் பகுதியை ஈட்டினர்.
இந்த அளவு, அதிகரித்தபடியே வந்தது. தற்போது, இந்தியாவின் மொத்த வருமானத்தில், 22 சதவீதத்தை, ஒரு சதவீத உயர் வருவாய் பிரிவினர் ஈட்டுகின்றனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இல்லாத அளவுக்கு, தற்போது இந்தியாவில் வருமான ஏற்றத்தாழ்வு அதிகரித் துள்ளது. பல நாடுகளில் உள்ள வருமான ஏற்றத்தாழ்வை விட, இந்தியாவில் அதிகமாக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சிறுமியை பாலியல் வன்முறை
செய்ய முயன்ற பாதிரியார் கைது
திருமலை, செப்.8 குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து சிறுமியை பாலியல் வன்முறை செய்ய முயன்ற பாதிரியாருக்கு தர்ம அடி கொடுத்து பொதுமக்கள் காவல்துறையில் ஒப்படைத்தனர். ஆந்திராவின் குர்ரகால்வாய் பத்மா நகரில் வசித்து வருபவர் பன்னீர்செல்வம்(56). இவர் அதே பகுதியில் உள்ள சர்ச்சில் பாதிரியாராக உள்ளார். அப்பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமியிடம் கடந்த சில நாட்களாக பேசி வந்துள்ளார். இதேபோல் நேற்று முன்தினமும் அந்த சிறுமியிடம் பேசி தனது வீட்டிற்கு அழைத்து சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துள்ளார். இதை குடித்த சிறுமி சிறிது நேரத்தில் மயங்கினார். இதையடுத்து சிறுமியை பாதிரியார் பன்னீர் செல்வம் பாலியல் வன்முறை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் மயக்கம் தெளிந்த சிறுமி அலறி கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் பன்னீர்செல்வத்தை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.
இதுகுறித்து காஜுல மண்டியம் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். டிஎஸ்பி நஞ்சுண்டப்பா உத்தரவின்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிந்து, பன்னீர்செல்வத்தை கைது செய்தனர். இதையடுத்து சிறுமியை மருத்துவ பரிசோதனைக்காக திருப்பதி ரூயா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.