எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தலைநகர் சென்னையில் அலை அலையாக நிகழ்ச்சிகள்

சென்னை, செப்.10 பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 139ஆவது பிறந்த நாளையொட்டி மாநகர் முழுவதும் பல்வேறு ஏற்பாடுகளை கழகத் தோழர்கள், பொறுப்பாளர்கள் செய்து வருகிறார்கள்.

சென்னை பெரியார் திடலில் தந்தை பெரியாரின் 21 அடி முழு உருவச் சிலைக்கும், பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் அமையப்பெற்றுள்ள அன்னை மணியம்மையார் சிலைக்கும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மாலை அணிவிக்கிறார்கள்.

சென்னை மாநகரில் அண்ணாசாலை சிம்சன், பட்டாளம், தியாகராயர் நகர் பேருந்து நிலையம்,    அண்ணா சாலை அண்ணா மேம்பாலம், ஆலந்தூர் ஆகிய பகுதிகளில் அமையப்பெற்றுள்ள தந்தை பெரியார் சிலைகளுக்கு தென்சென்னை, வடசென்னை, தாம்பரம் மாவட்ட  கழகப் பொறுப்பாளர்கள், இளைஞரணி, மாணவரணிப் பொறுப்பாளர்கள் மாலை அணிவிக்கிறார்கள்.

தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் நினைவிடங்களில் மரியாதை செலுத்துவதுடன், தந்தை பெரியார் விட்டுச்சென்றுள்ள பணிகளை முடிப்பதென தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தலைமையில் கழகத் தோழர்கள் பெருந்திரளாகத் திரண்டு உறுதியேற்கிறார்கள்.

உலகத் தலைவர் தந்தை பெரியார் 139ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி, சென்னை பெரியார் திடலில் பெரியார் மணியம்மை மருத்துவமனையில் இலவச சிறப்பு மருத்துவ முகாமை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொடங்கி வைக்கிறார்கள்.

காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறுகின்ற இலவச சிறப்பு மருத்துவ முகாமில்  பொதுமருத்துவம், தாய்சேய் நலம், நீரிழிவு நோய், கண், காது, மூக்கு, தொண்டை, பல் மருத்துவம், சிறுநீரகம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள், சிகிச்சைகள், சிகிச்சைக்கான ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன. பல்துறை சிறப்பு மருத்துவர்களின்  சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.

தந்தைபெரியார் 139ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி, சென்னை மண்டல மகளிர் அணி, மகளிர் பாசறை ஏற்பாட்டின் பேரில் மகளிர் பங்குபெறும் கலைநிகழ்ச்சிகள் மற்றும் மகளிர் கருத்தரங்கம் 17.9.2017 முற்பகல் 11 மணியளவில் நடைபெறுகிறது.

பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி தலைமையில், தலைமைச்செயற்குழு உறுப்பினர் க.பார்வதி, வடசென்னை மாவட்ட மகளிரணித் தலைவர் கு.தங்கமணி, வழக்குரைஞர் அணி அமைப்பாளர் ஆ.வீரமர்த்தினி, சி.வெற்றிசெல்வி, கலை இலக்கிய அணி செ.கனகா, பெரியார் களம் இறைவி,    வி.வளர்மதி, பூவை செல்வி, பசும்பொன் செந்தில்குமாரி, நாகவள்ளி, மரகதமணி, ராணி, இளையராணி, ஆனந்தி, நூர்ஜகான் ஆகியோர் முன்னிலையில் வடசென்னை மகளிரணி செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி வரவேற்கிறார். சென்னை மண்டல மாணவரணி செயலாளர் பா.மணியம்மை இணைப்புரை வழங்குகிறார்.

பெரியார் பன்னாட்டு மய்ம், ஜெர்மனி கிளை தலைவர், ஜெர்மனி கொலோன் பல்கலைக்கழக பேராசிரியர் டாக்டர் உல்ரிகே நிக்லஸ் கருத்தரங்க தொடக்க உரையாற்றுகிறார்.

நீட், மதவெறி, ஜாதி ஆணவக்கொலை, சமூக அநீதி ஆகியவற்றை நாட்டை விட்டு விரட்டுவோம் எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

கல்வியைப் பறிக்கும் நீட்டை விரட்டுவோம் எனும் தலைப்பில் காங்கிரசு கட்சி சட்டமன்ற உறுப்பினர் விஜயதாரணி, மக்களைக் கொல்லும் மதவெறியை விரட்டுவோம் எனும் தலைப்பில் இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற மேனாள் உறுப்பினர் தோழர் பாலபாரதி, ஜாதி ஆணவக் கொலைகளை விரட்டுவோம் எனும் தலைப்பில் "புதிய குரல்" நிறுவனர் தோழர் ஓவியா, சமூக அநீதியை விரட்டுவோம் எனும் தலைப்பில் வி.கே.ஆர்.பெரியார்செல்வி கருத்தரங்க உரையாற்றுகிறார்கள்.
திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரையாற்றுகிறார்.

கும்மிடிப்பூண்டி மகளிர் பாசறை செயலாளர் பொன்னேரி செல்வி நன்றியுரையாற்றுகிறார்.

தென்சென்னையில்
மாபெரும் பொதுக்கூட்டம்

தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17 அன்று மாலை தென் சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறு கின்றது. தமிழர் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசியக்குழு உறுப்பினர் தா.பாண்டியன், விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் ஆகியோர் பங்கேற்பார்கள்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner