எழுத்துரு அளவு Larger Font Smaller Font

லண்டன், செப்.10 மூத்த பத்திரிகையாளர் கவுரிலங்கேஷ் படுகொலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டன் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்திய தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் இங்கிலாந்தின் முக்கியமகளிர் அமைப்பான சவ்தால் பிளாக் சிஸ்டர்ஸ், முற்போக்கு கலை இலக்கிய அமைப்பான சமிக்ஷா உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர். இதுபோன்ற படுகொலைகள் வருங்காலங்களில் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும் எனவும், எதிர்கருத்துக்கள் கூறுவோரை படுகொலை செய்வது நாகரிக பண்பாட்டுக்கு ஏற்புடையதல்ல என்றும் ஆர்ப்பாட்டத்தில் கண்டனம் தெரிவித்தனர்.ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு தங்களது எதிர்ப்பினை பதிவு செய்யும்வகையில் இந்திய ஹைகமிஷனரிடம் அளிக்க முயன்ற மனுவை பெற்றுக்கொள்ள அவர் மறுத்தார்.

அமெரிக்கா கருத்து

பெங்களூருவில் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டது, துயரம் மிகுந்த சம்பவம் என்று அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.

தெற்காசிய விவகாரங்களுக்கான நாடாளுமன்றக் குழுக் கூட்டம், வாஷிங்டனில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான வெளியுறவுத் துறை துணை அமைச்சர் ஆலிஸ் வெல்ஸ், கவுரி லங்கேஷின் படுகொலைக்கு கண்டனம் தெரிவித்தார். அவர் மேலும் பேசியதாவது:

இந்தியாவில் வாழும் மதச் சிறுபான்மையினருக்கு அந்நாட்டு அரசு அதிகபட்ச சட்டப்பூர்வ பாதுகாப்பை வழங்குகிறது. அந்த இலக்கை அடைவதற்கு இந்தியா மேற்கொண்டுள்ள முயற்சியில், அமெரிக்கா இணைந்து செயல்படும். தேசிய அளவில் விமர்சனங்களை துணிச்சலுடன் முன்வைத்து வந்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டது, துயரம் மிகுந்த சம்பவமாகும். அனைத்து ஜனநாயக நாடுகளும் சவால்களை சந்திக்கின்றன. ஆனால், இந்திய ஜனநாயகம் துடிப்பு மிக்கதாகும். தற்போதைய சவால்களை எதிர்கொள்ளும் திறன் இந்திய அரசு நிர்வாகத்துக்கு உள்ளது. இந்திய அரசுடனான அனைத்து சந்திப்புகளிலும், சவால்களை எதிர்கொள்வதில், இந்திய அரசை ஊக்குவிப்போம் என்றார் அவர்.

ஊடக அமைப்பு

இதேபோல், பத்திரிகையாளரும், ஊடக சுதந்திர ஆதரவாளருமான கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக ‘ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ்’ என்ற ஊடக அமைப்பு கூறியுள்ளது. அவரது கொலைக்கு காரணமானவர்களை விரைந்து கண்டுபிடித்து, அவர்களுக்கு இந்திய அரசு தண்டனை வழங்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இந்திய தேசிய ஓவர்சீஸ் காங்கிரஸ்

இதனிடையே, கவுரி லங்கேஷின் படுகொலை, திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட சம்பவமாகத் தெரிகிறது என்று காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டுக் கிளையான அமெரிக்காவில் உள்ள இந்திய தேசிய ஓவர்சீஸ் காங்கிரஸ் கூறியுள்ளது. இதுதொடர்பாக, அந்தக் கிளையின் பொறுப்பாளர் ஜார்ஜ் ஆப்ரஹாம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் வலதுசாரி அரசியலின் அபாயத்தையும், மதச்சார்பற்ற கட்டமைப்புக்கு ஊறு விளைக்கும் அதன் செயல்களையும் கவுரி லங்கேஷ் துணிச்சலுடன் விமர்சித்தார். அதை எதிர்த்தரப்பினரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே, சக்திவாய்ந்த அவரது குரலை ஒடுக்கவே, திட்டமிட்டு அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது என்றார் அவர்.

யுனெஸ்கோ

இதேபோல், கவுரி லங்கேஷின் கொலைக்கு காரணமானவர்களை இந்திய அரசு விரைந்து தண்டிக்க வேண்டும் என்று யுனெஸ்கோ அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner