எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மாநிலத்தில் இருக்கின்ற அரசாங்கமே நீ கடையைக் கட்டு - அதுவரையில் எங்களுடைய மல்லுக்கட்டுத் தொடரும்
நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

சென்னை, செப்.13- ஜல்லிக்கட்டு முடிந்தது - இனி எங்களுடைய பணி டில்லிக் கட்டு - மாநிலத்தில் இருக்கின்ற அரசாங்கமே நீ கடையைக் கட்டு.   அது ஓய்கின்ற வரையில், எங்களுடைய மல்லுக்கட்டு தொடரும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

இன்று (13.9.2017)  சென்னை பாரிமுனையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற நீட் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரை யாற்றினார்.

அவரது உரை வருமாறு:

மக்கள் மன்றத்தின்முன் எழுப்புகிறோம்!

மிகச் சிறந்த முறையில், எனக்குமுன் கண்டன ஆர்ப்பாட்ட முழக்கங்களை, இது வெறும் ஆர்ப்பாட்டம் அல்ல; போராட்டம் என்று காட்டக்கூடிய அளவில், மிகத் தெளிவான ஒரு சிறப்பான அருமையான விளக்கங்களைத் தரக்கூடிய முழக்கங்களையெல்லாம் இங்கே நம்முடைய தோழர்கள், அதுவும் சட்டமன்ற உறுப்பினர்களாக இருக்கக் கூடியவர்கள், சட்டமன்றத்திற்குள் அந்த முழக்கங்களை இப்பொழுது எழுப்ப வாய்ப்பு இல்லாவிட்டாலும்கூட, மக்கள் மன்றத்தின்முன் எழுப்புகிறோம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, மிக சிறப்பான ஏற்பாடுகளை செய்து, வெற்றி கரமாக இந்தப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கக்கூடிய ஆற்றல்மிகு தி.மு.க. மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான எங்கள் அன்பு சகோதரர் செயல்வீரர் சேகர்பாபு அவர்களே,

எனக்கு முன் உரையாற்றிய தோழர் முதுபெரும் பொதுவுடைமை இயக்கத் தோழர், புரட்சியாளர் தா.பா. அவர்களே,

எனது அருமை சகோதரர், வகுப்புத் தோழர், பல்கலைக் கழக நண்பர், காங்கிரசு பேரியக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர் குமரிஅனந்தன் அவர்களே,

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய எழுச்சித் தமிழர் என்னரும் சகோதரர் தொல்.திருமாவளவன் அவர்களே,

இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உரையாற்றிய அருமைத் தோழர் செல்வசிங் அவர்களே,

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அமைப்பின் சார்பில் உரையாற்றிய சட்டமன்ற உறுப்பினர் அருமைத் தோழர் அபுபக்கர் அவர்களே,
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை இந்தப் போராட்டத்திற்கு இருக்கிறது என்பதை சட்டத் தெளிவோடு  விளக்கி உரையாற்றிய மாநிலங்களவை உறுப்பினர் சுயமரி யாதை வீரர் அன்புச்சகோதரர் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி. அவர்களே,

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் அன்புக்குரிய பேராசிரியர் ஜவாஹிருல்லா அவர்களே,

தெரிந்தே செய்பவர்களை
மன்னிக்கக் கூடாது!

‘‘எதிரிகளே அவர்கள் தெரியாமல் செய்கிறார்கள் அவர்களை மன்னியுங்கள், மன்னியுங்கள்’’ என்று சொல்லியே பழக்கப்பட்டவர்கள், இப்போது ‘‘தெரிந்தே செய்பவர்களை மன்னிக்காதீர்கள், மன்னிக்காதீர்கள், மன்னிக்கக் கூடாது’’ என்று சொல்லக்கூடிய எங்கள் அருமைப் பேராயர் எஸ்றா சற்குணம் அவர்களே,

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களே,

திராவிட முன்னேற்றக் கழக, காங்கிரசு, கம்யூனிஸ்ட் மற்றும் அனைத்துத் தோழமை இயக்கங்களைச் சார்ந்த தோழர்களே, செய்தியாளர்களே,  என்னுடைய அன்பான வணக்கத்தினை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்களுக்கு ஓய்வில்லை, ஒழிச்சலில்லை,
வேறு வேலையில்லை

மீண்டும் மீண்டும் போராட்டமா என்று சிலர் கேட்பார்கள். ஆம்! எப்படி எங்கள் செல்வம், இதோ படமாகி விட்டதோடு நமக்கெல்லாம் மட்டுமல்ல, மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பாடமாகி இருக்கக்கூடிய எங்கள் அன்புச் செல்வம் அனிதா அவர்களை எப்படி சவப்பெட்டிக்குள்ளே அடைத்தீர்களோ, அதே சவப்பெட்டிக்குள் நீட்டும், நவோதயாவும் போகிற வரையில், எங்களுக்கு ஓய்வில்லை, ஒழிச்சலில்லை, வேறு வேலையில்லை என்கிற அந்த உணர் வோடு, உங்கள் முன் எத்தனை முறை வேண்டுமானாலும் போராட்டங்களுக்கு அழைத்தாலும், அழைக்காவிட்டாலும் மக்கள் ஆயத்தமாக்கிக் கொண்டிருக்கிறார்கள் - எல்லாத் துறைகளிலும், வாழ்க்கையே போராட்டம்; தமிழ்நாட்டில் போராட்டமே வாழ்க்கை. இப்படிப்பட்ட சூழல் இன்றைக்கு வந்திருக்கிறதே, இந்த செய்திகளை ஏன் திரும்பச் திரும்ப சொல்கிறோம்; இங்கே அருமைச் சகோதரர் டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் சொன்னார்கள்,

கோயபல்சின் குருநாதர்கள் இங்கே எப்படிப்பட்ட பிரச்சாரத்தை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று எடுத்துச் சொல்லும்பொழுது, அவர்கள் சட்டத்தை வளைத்து எப்படி தவறான கருத்துகளைச் சொல்லுகிறார்கள் என்பதை விளக்கினார்.

பொய்ப் பிரச்சாரத்தையே தங்களுடைய மூச்சாக, பேச்சாக அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்

இதற்கடுத்து நாங்கள் கண்டனக் கூட்டம் போட்டால், இங்கே சொந்தக் காலில் நிற்க முடியாமல், வெறும் மிஸ்டு காலையே நம்பிக்கொண்டிருக்கின்ற ஒரு கட்சி, தங்களுடைய ஆதிக்கம், தங்களால் நாற்காலிகளைப் பிடிக்க முடியவில்லை என்றால், ஏற்கெனவே பிடித்த நாற்காலிகளை தாங்கள் பிடித்துவிட்டோம் அந்த நாற்காலிகளின் மூலமாக, நல்ல கொத்தடிமைகளை அடையாளம் கண்டுகொண்டோம் என்பதற்காக, அவர்களை வைத்தே வேலை வாங்கலாம் என்கிற முறையில் இறங்கியிருக்கிறவர்கள், நீங்கள் போராட்டம் நடத்தினால், நாங்கள் அதற்கடுத்து போராட்டம் ஆடுவோம் என்று சொல்லி, கூட்டங்களைப் போடுகிறார்கள். மக்கள் கூடாத கூட்டங்கள் என்பது ஒருபுறம் இருக்கட்டும். ஆனால், அதில் அவர்கள் தவறான செய்திகளை முன்வைக்கிறார்கள். பொய்ப் பிரச்சாரத்தையே தங்களுடைய மூச்சாக, பேச்சாக அமைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாடே கொதிநிலையில் இருக்கின்றபோது...

அதிலே சில செய்திகளை மட்டும் சுருக்கமாக, ஏனென்றால், உங்களை வெயிலில் அமர வைத்துவிட்டு, நாங்கள் அதிக நேரம் பேசுவது முறையல்ல. ஆனால், தமிழ்நாடே கொதிநிலையில் இருக்கின்றபோது, இந்த வெயில் உங்களை என்ன செய்யும்? நம்மை என்ன செய்யும்? அதுதான் மிக முக்கியம்.

அந்த வகையில், இந்த நீட் தேர்வினால் தமிழக மக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை; கிராம மக்கள் யாரும் பாதிக்கப் படவில்லை, எல்லோரும் பயனடைந்திருக்கிறார்கள், எல்லோரும் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள் என்றெல்லாம் கட்டுப்பாடாக, கோபல்சைத் தோற்கடிக்கக்கூடிய அளவிற்கு, பேசிக்கொண்டிருக்கின்றனர் - அந்த பா.ஜ.க.வினுடைய தலைவர்கள், அவர்களுக்குப் புதிதாக விலை போயிருக்கின்ற சில டாக்டர்கள் இவர்கள் எல்லோருக்கும் சேர்த்து சொல்லிக் கொள்கிறோம்.

பல நேரங்களில், மற்ற டாக்டர்கள் தவறாக நினைக்க மாட்டார்கள் என்று நினைக்கிறோம், போஸ்ட்மார்ட்டத்தில்கூட தவறான அறிக்கையை, வேறு லாபங்களுக்காக எழுதிக் கொடுக்கின்றவர்களும் உண்டு; எல்லோரும் அப்படி கிடையாது.

நீட் தேர்வு மாநில உரிமைகளைப் பறித்து நடந்துகொண்டிருக்கிறது

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை இன்றைக்கு உருவாகியிருக்கின்ற இந்தக் காலகட்டத்தில், இந்த நீட் தேர்வு என்பது மக்களுடைய எதிர்ப்புக்கு மாறாக, அலட்சியப்படுத்தப்பட்டு நடத்தப்பட்டு இருக்கிறது. இன்னுங்கேட்டால், நீதிமன்றங் களுடைய குளறுபடிகளுடைய துணையோடு நடத்தப்பட்டு இருக்கிறது. இன்னும் ஒருபடி மேலே போய் சொல்ல வேண்டுமானால், எந்த உறுதிமொழியை, பஞ்சாயத்துத் தலைவர்முதல் பிரதமர் வரை எடுத்துக்கொண்டிருக் கிறார்களோ, அந்த உறுதிமொழிக்கு மாறாக இந்திய அரசியல் சட்டத்தினுடைய விதிகளுக்கு மாறாக, புறம்பாக, எதிராக மிகத் தெளிவாக இந்த நீட் தேர்வு மாநில உரிமைகளைப் பறித்து நடந்துகொண்டிருக்கிறது.

இன்றைக்கு எத்தனை உரிமைப் பறிப்புகள்

மூன்று பட்டியல்களைப்பற்றி சொன்னார்கள்; இப்பொழுது நம்முடைய தொலைநோக்காக, நம்முடைய வேண்டுகோள் இதுபோன்ற ஆர்ப்பாட்டங்களில், நவோதயாவை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களில் கல்வித் திட்டத்தில், மாநிலத்தில் இருக்கின்ற உரிமைகள், பண்பாட்டு அடிப்படையில், நாகரிக அடிப்படையில் காப்பாற்றப்படவேண்டும் என்று, இந்திய அரசியல் சட்டத்தி னுடைய அடிப்படை உரிமை 29 ஆவது பிரிவு வலியுறுத்து கிறதோ, அந்த உரிமையைக் காப்பாற்றுகின்ற வகையில் சொல்லவேண்டுமானால், இன்றைக்கு எத்தனை உரிமைப் பறிப்புகள் என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.

நாங்கள் நீட் தேர்வை நடத்தினால், தமிழகத்தில் எந்தவிதப் பாதிப்பும் இல்லை என்று நீங்கள் சொல்கிறீர்களே,  பொதுப் பட்டியல் என்கிற சொல்லைக்கூட நாம் இனிமேல் பயன்படுத்தக்கூடாது. நம்முடைய தலைவர்களை நான் அன்போடு கேட்டுக்கொள்கிறேன், நீங்கள் கூட்டங்களில் பேசும்போதுகூட,

மத்திய அரசினுடைய பட்டியல், மாநில அரசினுடைய பட்டியல் - மாநில அரசின் இசைவைப் பெறவேண்டிய பட்டியல் அதுதான் கன்கரண்ட் லிஸ்ட் என்பது, என்று அருள்கூர்ந்து நீங்கள் அந்த சொல்லாக்கத்தைப் பயன்படுத்துங்கள். பொதுப் பட்டியல் என்றால், இரண்டு பேருக்கும் உரிமை இருக்கிறது என்கிற ஒரு தவறான கருத்து அங்கே பதிவாகிறது.

‘கன்கரண்ட் லிஸ்ட்’ என்று சொல்வதினுடைய அடிப்படை,  மத்திய அரசு ஒரு சட்டத்தைக் கொண்டுவருவதற்கு முன் மாநில அரசின் ஒப்புதலைப் பெறவேண்டும்.

அதுதான் அரசியல் சட்டக் கர்த்தாக்களுடைய உள்நோக்கம்.

நமக்குள்ள உரிமைகளை அவர்கள் பறித்திருக்கிறார்கள். பாதிப்பில்லை என்று சொல்கிறார்களே, அது உண்மையா?

இதோ ஒரு புள்ளி விவரம்

சுருக்கமாக இதோ ஒரு புள்ளி விவரத்தை மட்டும் உங்கள் முன் வைக்க விரும்புகிறேன். தமிழகத்தில் 2016-2017 ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ். மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாநில பாடத் திட்ட மாணவர்கள் எவ்வளவு பேர் தெரியுமா? 3544. அருள்கூர்ந்து தாய்மார்களே, சகோதரிகளே, நண்பர்களே, ஊடகவியலாளர் களே இதனைப் பதிவு செய்யுங்கள்!

சி.பி.எஸ்.இ. என்ற மத்திய கல்வித் திட்டத்தில் சேர்ந்து, அவர்கள் தேர்வு எழுதி, எம்.பி.பி.எஸ். மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவர்கள் வெறும் 64. கடந்தாண்டில்  நீட் தேர்வை ஏன் அவர்கள் வற்புறுத்தினார்கள் என்று சொன்னால், 2017-2018 ஆம் ஆண்டு நம்முடைய எதிர்ப்புகளையெல்லாம் மீறி, அனிதாக்களை சவக்குழிக்குள் அனுப்பியிருக்கிறார்களே, அந்தத் தேர்வு நிலையில்,

மாநிலப் பாடத் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்டு இருக்கக்கூடிய மாணவர்கள் இவ்வாண்டு எவ்வளவு தெரியுமா? 2314

1230 இடங்கள் குறைந்துள்ளன. பாதிப்பு இல்லையா, இது? கூட்டல், கழித்தல்கூட தெரியாதவர்கள் எல்லாம் அமைச்சர்களாக இருக்கிறீர்களே!

இன்னுங்கேட்டால், எங்கள் குமரிஅனந்தன் சொல்லிக் கொடுத்த பெண்ணும், இப்படி தவறாகக் கூட்டுகிறதே, அதுதான் மிக முக்கியம். அவர் தமிழ்தான் சொல்லிக் கொடுத்திருப்பார் என்று நினைக்கிறேன், கொஞ்சம் கணக்கும் சொல்லிக் கொடுத்திருக்கவேண்டும்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில், நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும். சி.பி.எஸ்.இ. மாணவர்கள் இந்த ஆண்டு எவ்வளவு பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் தெரியுமா? சென்ற ஆண்டு 64 பேர்; இந்த ஆண்டு 1220 பேர்.

எத்தனை மடங்கு என்பதை அருள்கூர்ந்து நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.

இதில், 2314 பேர் என்றவுடன், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மாநிலப் பாடத் திட்டத்தில் படித்தவர்களில் - 1230 இடம் போய்விட்டது என்றாலும், ஒரு தகவல் உங்களுக்குத் தெரியவேண்டும்  - என்னவென்று சொன்னால், இதில்

1310 மாணவர்கள் மட்டுமே இவ்வாண்டு பிளஸ் டூ தேர்வு எழுதி, நீட் தேர்வு எழுதி, மருத்துவக் கல்லூரிக்குத் தேர்வானவர்கள். மீதி இவ்வாண்டு தேர்வு செய்யப்பட்டவர்களில் மற்ற 1,004 பேர் யார் என்றால், முந்தைய ஆண்டுகளில் தேர்வு எழுதி, எழுதி, தோல்வி அடைந்து, மறுபடியும் லட்சக்கணக்கான ரூபாயை கொண்டு போய் கொடுத்து, பயிற்சி மய்யத்தில் சேர்ந்து, மூன்றாண்டுகளுக்கு முன்பு முயன்றவர்கள், இரண்டாண்டுகளுக்கு முன்பு முயன்றவர்களுக்கு, இந்த ஆண்டு முயன்றவர்கள் சேர்ந்த இந்தத் தொகை 1004.

இதுதான் இந்த சாதனை! இது பாதிப்பில்லையா?

நீட் தேர்வு தகுதித் தேர்வா?

கார்ப்பரேட் முதலாளிகள் பயிற்சி வகுப்பு நடத்துகிறார்கள். இங்கே சொன்னாரே, சகோதரர் திருமாவளவன் அவர்கள். இந்தத் தேர்வு தகுதித் தேர்வா? நினைத்துப் பார்க்கவேண்டாமா?

ஒரே ஒரு கருத்தைச் சொல்லுகிறேன்.

காமராசர் ஆட்சிக்கு வருகிறார். மருத்துவக் கல்லூரியில், இன்டர்வியூ மார்க் என்று இருந்தது. காமராசர் அவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு நீண்ட காலமாக, பழைய காங்கிரசு அரசாங்கத்தில்கூட இருந்தது.

குலக்கல்வியைப் புகுத்திய ஆச்சாரியார் இடையில் ஆட்சிக்கு வந்தார். ஏற்கெனவே 150 மதிப்பெண் இண்டர்வியூவிற்கு. லட்சுமணசாமி முதலியார் போன்றவர்கள் கமிட்டி தலைவர்கள். குலக்கல்வியைக் கொண்டு வந்த ஆச்சாரியார், மருத்துவக் கல்லூரியிலும் கை வைக்கவேண்டும் என்று நினைத்தார். ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் வருகிறார்கள் என்று நினைத்து, அதற்காக என்ன செய்தார் தெரியுமா? 150 மதிப்பெண்ணை 50 மதிப்பெண்ணாகக் குறைத்தார்.

காமராசர் ஆட்சிக்கு வந்தவுடன், எப்படி ஆச்சாரியார் காலத்தில் புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வந்தாரோ, அதை ஒழித்ததோடு, அவர் மூடிய 6 ஆயிரம் பள்ளிக்கூடங்களையும் கல்வி வள்ளல் காமராசர் திறந்தார். திறந்த அதே காலகட்டத்தில், உடனடியாக அவருடைய கவனம் எங்கே திரும்பியது என்றால், மருத்துவக் கல்லூரி பக்கம் திரும்பியது. மருத்துவக் கல்லூரியில், ஆச்சாரியார் ஏற்கெனவே இருந்த 150 மதிப்பெண்ணை 50 மதிப்பெண்ணாகக் குறைத்தார் அல்லவா, அதை மீண்டும் 150 மதிப்பெண்ணாக உயர்த்திய பெருமை காமராசருக்கு உண்டு. செய்தியாளர்கள் காமராசரிடம் கேட்கிறார்கள், ஏற்கெனவே இருந்த முதலமைச்சர் ஆச்சாரியார் 150-அய் 50 ஆகக் குறைத்தாரே,  நீங்கள் இப்பொழுது வந்து மறுபடியும் 150 ஆக ஆக்கியிருக்கிறீர்களே, அதற்கு என்ன காரணம் சொல்ல முடியுமா? என்று கேட்டார்கள். அதற்குக் காமராசர் அவர்கள் பெரிய விளக்கமெல்லாம் சொல்லாமல், ஒரே ஒரு விளக்கத்தைத்தான் சொன்னார்.

அது என்ன தெரியுமா?

ஆட்சியில் முன்னர் இருந்தவர்கள் 150 மதிப்பெண்ணாக இருந்ததை 50 மதிப்பெண்ணாகக் எந்தக் காரணத்துக்காகக் குறைத்தார்களோ, அதே காரணத்திற்காகத்தான், நான் 50 மதிப்பெண்ணை 150 மதிப்பெண்ணாக ஆக்கியிருக்கிறேன் என்றார். தகுதி, திறமைக்குப் பிறந்தவர்களே, இதனை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

ஏன் அவர்கள் துடியாய்த் துடிக்கிறார்கள்? ஏன் நீட் வேண்டும், நீட் வேண்டும் என்று வேட்டி அவிழ்ந்தவன் வீதியில் துடிக்கின்றவன்போல, அலைந்து கொண்டிருக்கிறார்கள்? அதற்கு என்ன காரணம்? இந்தப் புள்ளிவிவரம் அந்த மர்மத்தின் முடிச்சியை அவிழ்க்கும், அதுதான் மிக முக்கியம். சென்ற ஆண்டு இந்த முன்னேறிய உயர்ஜாதிக்காரர்கள் பெற்ற இடம் 108.
ஏன் அனிதாக்களுக்கு இடமில்லை?

அதாவது சதவிகித கணக்கில் 2.99 சதவிகிதம். இந்த ஆண்டு - நீட் வந்த பிறகு, அவர்கள் பெற்ற இடம் எவ்வளவு தெரியுமா? 353; 10 சதவிகிதம்.

இப்போது யார் பாதிக்கப்பட்டு இருப்பது? நம்முடைய பிள்ளைகள். ஏன் அனிதாக்களுக்கு இடமில்லை, இதுதான் அந்த ரகசியம் - அதனைப் புரிந்துகொள்ளுங்கள். எனவே, பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் இவர்கள் அத்தனை பேரும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இதோ அந்தப் புள்ளி விவரத்தையும் உங்களுக்குச் சொல்கிறேன்.

பிற்படுத்தப்பட்டவர்கள் கடந்த ஆண்டு 1781

இந்த ஆண்டு 1501

மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் கடந்த ஆண்டு 859

இந்த ஆண்டு 620

தாழ்த்தப்பட்டவர்கள் கடந்த ஆண்டு 572

இந்த ஆண்டு 557

அதில் வாய்ப்பு பெற்றவர்களும் கூட பயிற்சி வகுப்புகளில், கோச்சிங்கில் பெரும் செலவு செய்து பயிற்சி பெற்றவர்கள் என்பதை மறக்கக்கூடாது.

ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்

எனவேதான், நண்பர்களே, உங்களுக்குச் சொல்கிறோம். இந்த நீட்டை எதிர்த்து நாம் போராடுகிறோம்.

மண்டல் கமிஷனா? 10 ஆண்டுகள் போராடித்தான் பெற்றோம்! டில்லிக்காரன் அவ்வளவு சுலபத்தில் கீழிறங்க மாட்டான், அது எங்களுக்கு நன்றாகத் தெரியும். ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்று இதனை சொல்லிக் கொண்டிருக்கும்பொழுதே, இன்னொரு தந்திரம்.

நீதிமன்றத்தின்மூலம் ஒரு வழக்கைப் போட்டு, அதில் அவர்கள் சொன்னார்களே, கருப்பில்கூட காவி ஏறுகிறது -சுத்தக் கருப்பில் காவி ஏறாது - கொஞ்சம் கெட்டுப்போன கருப்பு எங்கேயாவது இருந்தால், அது அய்யப்பன் கோவிலுக்குப் போடுகிற கருப்பு மாதிரி - அதில் வேண்டுமானால் காவி ஏறலாம் - அந்த வாய்ப்புகளை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்களே, அவர்களுக்குச் சொல்கிறோம்.

அரசியல், கொள்கை. ஒரு அரசின் கொள்கை.  அதிலே நீதிமன்றங்கள் தலையிடுவதற்கு இடமில்லை. தலையிடக் கூடாது என்பது உச்சநீதிமன்றத்தினுடைய தீர்ப்பு.

நவோதயா என்பது சூழ்ச்சியின் அடுத்த கட்டம்

எனவே, இங்கே இருக்கின்ற உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறி செயல்பட முடியாது. அப்படி இருக்கிறபோது, நவோதயா பள்ளிக்கூடம் - 30 ஆண்டுகளாக முதலமைச்சர்களாக பல பேர் பல கட்சியில் இருந்த நேரத்தில், எம்.ஜி.ஆர். இருந்தார், அதற்குப் பிறகு பலர் இருந்தார்கள். அவர்கள் ஏற்கவில் லயே!  இப்போது கொண்டுவரப்பட்டு இருக்கின்ற நவோதயா என்பது சூழ்ச்சியின் அடுத்தக் கட்டத்திற்குப் போகிறார்கள்.

இந்த நவோதயாவைக் கொண்டு வருவதன்மூலமாக, மத்தியப் பட்டியலுக்கே முழுக் கல்வி - நடுவில் இருக்கிற பட்டியலுக்குக்கூட கிடையாது என்பதை பிர கடனப்படுத்துகிறார்கள் மறைமுகமாக என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

அதைவிட இன்னொன்றை நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும் குளோபல் என்ட்ரன்ஸ் எக்சாமினேசன். உலகத்திற்கே இந்த வியாபாரத்தை நாங்கள் திறந்து விடுகிறோம் என்கிறார்கள்.

22 மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்ற ஒரே மாநிலம் தமிழ்நாடுதான்; அதனை செய்த பெருமை நம்முடைய கலைஞர் அவர்களையே சாரும். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியையே சாரும்.

அதில் சூப்பர் ஸ்பெஷாலிட்டியை உருவாக்கியுள்ள இடங்கள் நம்முடைய மாநிலத்தில்தான். நம்முடைய வரிப் பணத்தில் கட்டிய மருத்துவக் கல்லூரிகளில் நோகாமல் உள்ளே வரப் போகிறார்கள். இனி மருத்துவக் கல்லூரிகளின் பக்கம் சென்றால், அங்கே இந்தி மொழிதான் கேட்கும்; வேறு வேறு மொழிகள் கேட்கும். நம்முடைய பிள்ளைகள் எல்லாம் அனிதாக்களாக மாறவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

எங்களுடைய மல்லுக்கட்டு தொடரும்

அப்படிப்பட்டவர்களுக்குச் சொல்கிறோம், இதனை ஒழிக்கின்ற வரையில் எங்களுக்கு ஓய்வு கிடையாது. ஜல்லிக்கட்டுக்கு அடுத்தபடியாக, இந்த நவோதயாவாக இருந்தாலும், அதேபோல, இந்த நீட்டாக இருந்தாலும்,

ஜல்லிக்கட்டு முடிந்தது - இனி எங்களுடைய பணி டில்லிக் கட்டு - மாநிலத்தில் இருக்கின்ற அரசாங்கமே நீ கடையைக் கட்டு. அதுதான் அடுத்த நிலை. அது முடிகின்ற வரையில், எங்களுடைய மல்லுக்கட்டு தொடரும் என்று முடிக்கிறேன்.

வாழ்க பெரியார்! ஒழிக நீட் தேர்வு!

நாங்கள் எங்கள் அனிதாக்களைப் புதைக்கவில்லை, விதைத்திருக்கிறோம், விதைத்திருக்கிறோம், விதைத்திருக்கிறோம்! நன்றி, வணக்கம்!

- இவ்வாறு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உரையாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner