எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சீர்காழியில் அமையவுள்ள அனல்மின் நிலையத்தை ஒடிசாவுக்கு மாற்றுவதா?

செப்.18 ஆம் தேதி நெய்வேலியில்

திராவிடர் கழகத்தின் கண்டன ஆர்ப்பாட்டம்

ஒத்தக் கருத்துள்ளவர்கள் பங்கேற்கலாம்

தமிழர் தலைவர்  ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை

 நீட் தேர்வால் ஒடுக்கப்பட்டோர் - பாதிக்கப்பட்டோர் புள்ளி விவரம்!

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் சார்பில் சீர்காழி யில் அமையவுள்ள அனல்மின் நிலையத்தை

ஒடிசாவிற்கு மாற்ற முடிவு செய்துள்ளதைக் கண்டித்து வருகிற செப்டம்பர் 18 ஆம் தேதி திராவிடர் கழகத்தின் சார்பில் நெய்வேலியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டிற்கு மற்றொரு பேரிடி போன்ற வளர்ச் சித் திட்ட இழப்பு ஏற்பட்டுள்ளது. இது அதிர்ச்சிக்குரிய செய்தியாகும்.

சீர்காழியில் 4000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் அனல்மின் நிலையம்

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் தமிழ்நாட்டில் அமைந்துள்ள மத்திய அரசின் கீழ் உள்ள ஒரு பொதுத் துறை நிறுவனம். ‘நவரத்தினங்களில் ஒன்று’ என்று புகழப்படும் லாபம் ஈட்டித் தரும் நிறுவனம்; அதன் சார்பில் சீர்காழியில் 4000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் அனல்மின் நிலையம் ஒன்று ஏற்படுத்த திட்டமிடப்பட்டு இருந்தது.

14,482 கோடி ரூபாய் மதிப்பிலான பெருந்திட்டம் இது! சீர்காழியில் இத்திட்டத்தை நிறுவுவதற்காக, துவக்க ஆய்வாக இதற்கு 50 கோடி ரூபாய் செலவு நிதியும் ஒதுக்கப்பட்டு செலவழிக்கப்பட்டு உள்ளது.

ஒடிசாவிற்கு மாற்ற முடிவாம்!

இதில் உற்பத்தியாகும் மின்சாரத்தை தமிழக அரசுக்கு விற்பது தமிழ்நாடு மின் பகிர்வு கழகத்திற்கு (Tanged co) ஒப்பந்தம் போடப்பட்டது!

ஆனால், நெய்வேலி நிறுவனத்தின் இயக்குநர்கள் கூட்டத்தில், இத்திட்டத்தை ஒடிசாவிற்கு மாற்றுவது என்று முடிவு செய்துள்ளார்களாம்!

மறுபடியும் தமிழ்நாட்டிற்கு ஒரு பெருந்திட்ட இழப்பு - அதனால் ஏற்படும் வேலை வாய்ப்பு இழப்பு - மற்றைய பொருளாதார வளர்ச்சி இழப்பு - வர்ணிக்க இயலாதவை.

தஞ்சை மாவட்டம், சீர்காழிக்குப் பக்கத்தில் உள்ள கிராமங்களான வேட்டங்குடி, ராதா நல்லூர் ஆகியவைகளில் ஏற்படும் துணைத் தொழிற்சாலை களால் வேலை வாய்ப்பும், பொருளாதார வளர்ச்சியும் அப்பகுதிக்கு ஏற்படவிருந்த திட்டமும் இப்போது இல்லை - ‘அரோகரா!’

சீர்காழி, செய்யூர் (காஞ்சிபுரம் மாவட்டம்) இரண்டு திட்டங்களில் சீர்காழித் திட்டம் ஒடிசாவிற்கு  நகர்த்தப்படுகிறது.

செய்யூர் திட்டம் கிணற்றில் போட்ட கல்லாகவே கிடக்கிறது; ஒரு தகவலும் இல்லை!

நிலக்கரியைப் பயன்படுத்தும் கடற்கரை அருகே உள்ள பகுதிகளில் மூன்று யூனிட்டுகளைத் துவக்கத் திட்டமிடப்பட்டது.

திருமுல்லைவாசல் என்ற கிராமப் பகுதி இதற்கென தேர்ந்தெடுக்கப்பட்டது.

சீர்காழியைத் தேர்வு செய்யப்படுவதற்குமுன்

ஆய்வு செய்யப்படவில்லையா?

இப்போது நிலக்கரியை இறக்குமதி செய்து, இந்த அனல் மின்நிலையம் இயங்கவேண்டியுள்ளது; நிலக் கரிச் செலவு சீர்காழிக்கு வந்தால் அதிகம் - ஒடிசாவில் உள்ள ‘‘தலாபிரா’’ (Talabira) என்ற ஊரில் அமைத்தால் செலவு குறைவு என்று காரணம் காட்டப்படுகிறது.

இந்தக் கருத்து சீர்காழியைத் தேர்வு செய்வதற்கு முன்னால் தெரியாதா அல்லது ஆய்வு செய்யப்படவில்லையா?

தமிழ்நாட்டில் உள்ள ஒரு மைனாரிட்டி அ.தி.மு.க. அதன் கட்சி கோஷ்டிச் சண்டையிலும், பதவிச் சண்டையிலும், தலைக்குமேல் தொங்கும் கொடுவாள் என்ற பயம் காரணமாக நமது  உரிமைகளை,  டில்லி  மத்திய  அரசிடம்   அழுத்தந்திருத்தமாக வாதாடவோ, அதைத் தாண்டி போராடவோ இயலாத ஒரு பரிதாப நிலை!

சீர்காழியிலே துவக்கிட முயற்சி செய்யவேண்டும்

எனவே, இதனைத் தமிழ்நாட்டு மக்களும் அத் துணைக் கட்சிகளும், அமைப்புகளும்தான் குரல் கொடுத்து, சீர்காழியிலே துவக்கிட முழு முயற்சி செய்யவேண்டும்!

தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் - குறிப்பாக சுமார் 50 பேர்கள் உள்ள ஆளும் அ.தி.மு.க. அணிகளின் எம்.பி.,க்கள் - ‘துரவுபதி’ துயில் உரிந்த போது வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த, துச்சாதனன் கதையில் கூறுவதுபோல், கண் திறந்தும் கைபிசைந்து கொண்டு இருக்கலாமா?

தமிழக வளர்ச்சி பறிபோவதைத் தடுக்க முன் வரவேண்டும்

உடனடியாக பிரதமரை, சம்பந்தப்பட்ட கனரகத் தொழில் அமைச்சரை நேரில் சந்தித்து வற்புறுத்தி, தமிழக வளர்ச்சி பறிபோவதைத் தடுக்க முன் வர வேண்டும்!

இதை வலியுறுத்தி தமிழ்நாடு வஞ்சிக்கப்படுவதைத் தடுக்க நெய்வேலியில் வருகிற செப்டம்பர் 18 ஆம் தேதி காலை 10 மணி அளவில் திராவிடர் கழகத்தின் சார்பில் அறவழியில் ஒரு  கண்டன ஆர்ப்பாட்டம், திராவிடர் கழகத் தின் செயலவைத் தலைவர் மானமிகு சு.அறிவுக்கரசு, கழகப் பொதுச்செயலாளர் மானமிகு துரை.சந்திரசேகரன் ஆகியோரின் தலைமையிலும் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் முன்னிலையிலும் கழக அணியினர் அத்துணைப் பேரும் கலந்து நடத்துவர்.

ஒத்தக் கருத்துள்ளவர்களும் கலந்து

கொள்ளலாம் - சீர்காழியில் இத்திட்டம் அமைந்திடப் போராடுவோம்!

 

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.

சென்னை

14.9.2017

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner