எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அண்ணாவையும் காவிக்கு அடகு வைக்கலாமா?

கல்வியை காவி மயமாக்கும் முயற்சி பலிக்காது - பலிக்கக் கூடாது!

தஞ்சையில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

தஞ்சை, செப்.16 கல்வியை காவி மயமாக்கவேண்டும், அந்தக் காவி மயத்தை வைத்துக்கொண்டு தாங்கள் ஆட்சி யைப் பிடிக்கவேண்டும் என்று திட்டம் தீட்டுகிறார்கள் - அந்தக் கனவு பலிக்காது என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

அண்ணாவின் பிறந்த நாளான நேற்று (15.9.2017) தஞ்சையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

தமிழகத்தில் அரசு ஊழியர்களின் போராட்டம்பற்றி...

செய்தியாளர்: தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தினால் தமிழகம் முழுவதும் நிலைகுலைந்து போயிருக்கிறதே இதுபற்றி...?

தமிழர் தலைவர்: தமிழ்நாட்டில் கடந்த பல மாதங்களாகவே கட்சிக்குள்ளே இருக்கிற அணிகள் சண்டைகள்தான் பெரிதாக இருக்கின்றதே தவிர, ஆட்சி நிர்வாகம் நடப்பதாக இல்லை. இப்பொழுது தொழிலாளர்கள், ஆசிரியர்கள் மற்ற அரசு ஊழியர்கள் எப்பொழுது வேலை நிறுத்தத்தை அறிவித்தார்களோ, அப்போதே,  அமைச்சர்களாக இருக்கக்கூடியவர்கள், அவர்களை அழைத்து, அவர்களுடைய நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலிக்கிறோம் என்று சொல்லி, வேலை நிறுத்தத்தை அவர்கள் தவிர்த்திருக்கவேண்டும். மாறாக, ஒவ்வொரு நாளும் அந்தப் போராட்டத்தினை அதிகப்படுத்துவதுபோல அவர்களின் நடவடிக்கைகள் இருப்பதால், நேற்றுவரையில், போராட்டத்தில் ஈடுபடாத தலைமைச் செயலக ஊழியர்களும் அந்தப் போராட்டத்தில் இன்றைக்கு ஈடுபடுகிறார்கள். (பிறகு தற்காலிக ஒத்தி வைப்பு செய்தனர்).

எனவேதான், தமிழ்நாட்டில் ஏற்கெனவே அரசு செயல்படாத நிலை - இப்பொழுது அரசாங்க இயந்திரமும் செயல்படாத ஒரு நிலை ஏற்பட்டிருக்கிறது. அதிலும், அண்ணா அவர்களின் 109 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில், அண்ணாவை அவர்கள் வெறும் படமாகப் பார்க்கிறார்களே தவிர, பாடமாகப் பார்க்கவில்லை.

அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, எப்படிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும்கூட, அவர் களிடம் தன்னந்தனியராக நேரிடையாகச் சென்று, பேச்சு வார்த்தை நடத்தி, அவர்களை ஒப்புக்கொள்ளும்படி செய்தார்கள். உதாரணமாக, மருத்துவக் கல்லூரி மாண வர்கள் எல்லாம் வெகுவேகமாக இருந்த நேரத்தில், தன்னந் தனியராக அண்ணா அவர்கள் சென்று, அவர்களிடத்தில் நேரிடையாகப் பேசி, அவர்களைத் திருப்தி செய்து இருக்கிறார்கள்.

அதுபோன்ற ஒரு அணுகுமுறையை இந்த அரசு செய்யவேண்டும். ஆனால், அப்படி செய்வதற்கு அவர் களுக்கு மனமும் இல்லை, நேரமும் இல்லை. ஏனென்றால், அவர்களுக்கு வேட்டி இருக்கிறதா? அல்லது துண்டு இருக்கிறதா? என்பதைப்பற்றி கவலைப்படாமல், துண்டைப் பற்றியே (பதவி) கவலைப்படுகிறார்கள்; வேட்டியே (கொள்கை) இல்லை என்பதை மறந்துவிடுகிறார்கள்.

எனவேதான், அண்ணா அவர்களின் பிறந்த நாளில், அண்ணா அவர்கள் எந்தக் கொள்கைக்காக இந்த ஆட்சியை அமைத்தார்களோ, அந்த நிலையை அவர் கள் உருவாக்கவேண்டும். அண்ணா சிலைக்கு மாலை போடுவது - அண்ணாவின் படத்திற்கு மாலை போடுவது முக்கியமல்ல; அண்ணா கொள்கைகளைப் பாதுகாப்பதும், பரப்புவதும், அதற்கு ஆபத்து ஏற்படாமல், நவோதயா போன்ற திட்டங்களுக்கெல்லாம் தலையாட்டாமல், மிகத் தெளிவாக இருக்கவேண்டியது இன்றைய அரசி னுடைய கடமையாகும். இல்லையானால், மக்கள் கிளர்ச்சி என்பது மேலும் விரிவாகுமே தவிர, அது குறைய வாய்ப்பில்லை. அதற்கு இடம்தராத அளவிற்கு அரசின் அணுகுமுறைகளும், ஆட்சி முறைகளும் இருக்கவேண்டும். இன்றைக்காவது கொஞ்சம் நிதானமாக சிந்தித்தாவது செயல்படட்டும்.

செய்தியாளர்: எச்.ராஜா அவர்கள் சாரண இயக்கத் தலைவர் பதவிக்குப் போட்டி போடுவது பற்றி...?

தமிழர் தலைவர்: நண்டைச் சுட்டு நரியைக் காவலுக்கு வைத்ததுபோல என்று ஒரு பழமொழி உண்டு. அதற்கேற்ப, இளைஞர்களை எப்படியாவது ஆர்.எஸ்.எஸ். மயமாக்கவேண்டும் என்கிற திட்டத்திற்கு அவர்கள் உச்சகட்ட முயற்சி செய்கிறார்கள். இதுவரையில், சாரண - சாரணியர் இயக்கத்திற்கு, கல்வித் துறையில் இருந்த அறிஞர்கள், குறிப்பாக கல்வி அமைச்சர், தலைவர் போன்ற பதவியில் இருப்பார். அதில் போட்டி இருக்காது. ஆனால், கல்வியை காவி மயமாக்கவேண்டும் - அந்தக் காவியை வைத்துக்கொண்டு  தாங்கள் ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்கிற திட்டத்தில், இது அவர்களுடைய மிக முக்கியமான திட்டமாக இருக்கிறது. அநேகமாக அந்தக் கனவு பலிக்காது என்று நினைக்கிறோம் - பலிக்க விடமாட்டார்கள் வாக்காளர்களாக இருக்கக்கூடிய சாரணியர் இயக்கத்தவர்கள்.

- இவ்வாறு செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner