எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மத்திய பி.ஜே.பி. அரசை எதிர்த்து விரைவில் அறப்போராட்டம்

உச்சநீதிமன்றம் ஆணையிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தவறிய மத்திய பி.ஜே.பி. அரசின் போக்கிற்கு உச்சநீதி மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கரு நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் ஆதாயம் காணவே மத்திய பி.ஜே.பி. அரசு இவ்வாறு நடந்துகொள்கிறது என்று சுட்டிக்காட்டி, விரைவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அறப்போராட்டம் இம்மாத இறுதிக்குள் நடத்திட முன்வரவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியாகி பின்னர் சில ஆண்டுகள் கழித்தே அது மத்திய அரசால் கெசட் செய்யப்பட்டது.

(கெசட் செய்யப்பட்டு செய்தி வெளியிட்டால்தான் அது சட்ட வலிமை பெறும்).

நேற்று (19.9.2017) உச்சநீதிமன்றத்தில் காவிரி நதிநீர்ப் பங்கீடு சம்பந்தமான வழக்கு விசாரணையின்போது, உச்சநீதிமன்ற நீதிபதிகள், மத்தியில் உள்ள மோடி அரசின் ஒரு சார்பு நிலையை அம்பலப்படுத்துவதுபோல், ஒரு சட்டப்பூர்வமான கேள்வியைக் கேட்டு திக்குமுக்காடச் செய்துள்ளனர் மத்திய அரசு வழக்குரைஞரை!

‘காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு 2013 ஆம் ஆண்டு மே மாதம் அரசிதழில் வெளியானது; அதில் காவிரி நதிநீர் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மத்திய அரசுக்கு
உச்சநீதிமன்றத்தின் கேள்வி

அதன்பின், இறுதித் தீர்ப்பை அமுல்படுத்த மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இதற்கான திட்டத்தை ஏன் உருவாக்கவில்லை? இது உங்கள் கடமை!

மத்திய அரசு தன் கடமையைச் சுருக்கி, அதற்கான அதிகாரம் இல்லை என்று கூறுவதை ஏற்க முடியாது. ஒரு முடிவை எடுத்து அறிவித்த பின், அதைச் செயல்படுத்த தயக்கம் காட்டக்கூடாது; அதனைச் செயல்படுத்தி சரியான அணுகுமுறையைப் பின்பற்றவேண்டும்‘ என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

மத்தியில் உள்ள மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. அரசு இப்படி இதில் - காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததற்கு ஒரே காரணம், கருநாடக அரசிற்கு சாதகமாக நடந்துகொள்ளவே என்பது உலகறிந்த ரகசிய செய்தியாகும்!

அடுத்த ஆண்டு - 2018 இல் கருநாடகத்தில் சட்ட மன்றத் தேர்தல் வரவிருக்கிறது; அதில் தற்போது காங் கிரசிடம் உள்ள ஆட்சியை பா.ஜ.க. கைப்பற்றிட, இப்படி கருநாடகாவுக்குச் சாதகமான போக்கைக் கடைப்பிடித்தால், தங்களுக்கு அரசியல் ஆதாயம் கிட்டும்; என்ன செய்தாலும் தமிழ்நாடு காவி மண்ணாகாது; அங்கே பா.ஜ.க. ஆட்சி அமைக்க முடியாது; கணக்குத் திறக்கவே ஒற்றைக் காலில் நிற்கவேண்டியுள்ளது.

அரசியல் உள்நோக்கம்!

எனவேதான், கருநாடகத்தில் ஏற்கெனவே காலூன் றிய பழைய அனுபவம் இருப்பதால், அதையே குறி வைக்க, தமிழ்நாட்டின் விவசாயத்துக்குத் துரோகம் செய்வதுபற்றி கவலைப்படவேண்டாம் என்ற முடிவுக்கு வந்து, நாடாளுமன்றத்தில் விவாதிக்கவேண்டும் என்று குறுக்குசால் ஓட்டும் வித்தைகளை நடத்துகின்றனர்!

தமிழ்நாட்டில் இந்த கட்சி, பா.ஜ.க. - காவிரி விவசாயிகளைப் பிச்சைக்காரர்களாக்கி, நடுத்தெருவில் நிற்க வைத்த பா.ஜ.க.வினர் தமிழகத்திற்குள் வருவதோ, கணக்குத் திறக்க ‘மிஸ்டு கால்’மூலம் முயற்சிப்பதோ எவ்வகையில் நியாயம்?

மத்திய அரசு என்பது இப்படி அரசியல் உள்நோக்கத் தோடு, ஒருதலைப் பட்சமாக நடந்துகொள்வது அரசியல் சட்ட விரோத நடவடிக்கை அல்லவா?

விரைவில்
அறப்போராட்டம்

தமிழ்நாட்டில் உள்ள அத்துணைக் கட்சிகளும், பா.ஜ.க. தவிர,  விவசாய அமைப்புகளும் ஒரே அணியில் திரண்டு, ‘‘மீண்டும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசே தாமதிக்காதே!’’

‘நீட்’ நுழைவுத் தேர்வுக்கு உச்சநீதிமன்றத் தீர்ப்பை உடனே அமுல்படுத்துகிறோம் என்கிற மத்திய அரசு, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே தாமதிக்காமல் நியமிக்கவேண்டும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை உடனே அமுல்படுத்து! அமுல்படுத்து!!’’ என்று வற் புறுத்தி, ஒரு மாபெரும் அறப்போராட்டத்தை இம்மாத இறுதிக்குள் நடத்திட முன்வரவேண்டும்.

அனைவரும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க முன்வரவேண்டும்.


சென்னை                                                                            தலைவர்
20.9.2017                                                                        திராவிடர் கழகம்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner