எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பூனைக்குட்டி வெளியில் வந்துவிட்டது!

தமிழக பி.ஜே.பி. பொறுப்பாளர் முரளிதரராவ் பேட்டியைக் கவனியுங்கள் -

அ.தி.மு.க. ஆட்சியைத் தங்களுக்கு வசதிப்பட்ட நேரத்தில் கவிழ்ப்பார்களாம்!

‘‘ஜனநாயகத்தைக் காப்போம் - தமிழ்நாட்டை மீட்போம்!’’ என்ற முழக்கத்தோடு தமிழ்நாட்டின் ஜனநாயக சக்திகள் ஒன்றிணையட்டும்!

தமிழர் தலைவர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

தமிழ்நாட்டு அரசியல் மீண்டும் சினிமா நடிகர்கள் கைகளில் போக வேண்டுமா?

 

தமிழக பி.ஜே.பி.யின் பொறுப்பாளரான முரளி தரராவ் ஒரு பேட்டியில், ‘அ.தி.மு.க. ஆட்சியைத் தங்களுக்கு வசதிப்பட்ட நேரத்தில் கவிழ்ப்போம்‘ என்று கூறியதன் பொருள் என்ன? மத்திய பி.ஜே.பி.யின் கைப்பொம்மையாக தமிழக அ.இ. அ.தி.மு.க. ஆட்சி ஆகிவிட்டது என்பதை இதன்மூலம் அறிந்து தமிழ்நாட்டில் உள்ள ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து ‘‘ஜனநாயகத்தைக் காப்போம் - தமிழ்நாட்டை மீட்போம்!’’ என்ற முழக்கத்தோடு களமிறங்கவேண்டும்  என்று  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:

மோடி பிரதமரான பின்பும்கூட அவர் தொடர்ந்து பெற்ற தேர்தல் வெற்றிகளில்கூட, 2014 இல் அவரது கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்கு சதவிகிதம் குறைந்துகொண்டே வந்துள்ளது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை!

2014 இல் வேலை வாய்ப்புக்கும், மாற்றத்திற்கும் ஏங்கிய 18 வயது இளைஞர்கள், அப்போது மோடியின் தேன் தடவிய தேர்தல் வாக்குறுதிகளை நம்பினர்; வாக்களித்து இன்று ஏமாந்து கைபிசைந்து, கண் பிதுங்கி இருந்த வேலை வாய்ப்பினையும்கூட அய்.டி. (I.T.) ) போன்ற துறைகளில் இழந்து வேதனைத் தீயில் வெந்து கருகுகின்றனர்!

யஷ்வந்த் சின்கா போன்றவர்கள் எதிர்ப்பு

நாடு வளர்ச்சியை நோக்கிச் செல்லாமல் தளர்ச்சியாகவும், நாளும் கீழிறக்கத்தை அடைந்து வருகிறது என்பதை, அக்கட்சியைச் சேர்ந்த வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது, மத்திய நிதியமைச்சராக அவரது அமைச்சரவையில் இருந்த யஷ்வந்த் சின்கா (ஓய்வு பெற்ற அய்.எஃப்.எஸ். அதிகாரி அவர்) போன்றவர்கள் 3 ஆண்டு பொருளாதார வீழ்ச்சியைச் சுட்டிக்காட்டி உள்ளனர்.

1. வேலை வாய்ப்பு இல்லை

2. ஏற்றுமதி குறைவு

3. தனியார் முதலீடு குறைவு

4. G.D.P. வீழ்ச்சி

போன்றவைதான் மோடி ஆட்சியின் ‘சாதனை’ என்று சுட்டிக்காட்டியுள்ளார்!

வெளிநாடுகளின் பார்வையில்...!

ஏற்கெனவே அருண்ஷோரி, அமர்த்தியா சென் போன்றவர் களும், மேனாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் போன்றவர்களும், பிரபல லண்டன் பொருளாதார வார ஏடான ‘தி எகானமிஸ்ட்’, ‘ஜப்பான் டைம்ஸ்’, மற்ற அமெரிக்க நாளேடுகளும்கூட சுட்டிக்காட்டியுள்ளன!

கருநாடகத்தின்மீது காதல் ஏன்?

தென்னாட்டில் பா.ஜ.க. ஆளும் மாநிலம் எதுவுமே தற்போது இல்லை என்பதால், (ஆந்திரா, தெலங்கானா, கேரளா, கருநாடகம், தமிழ்நாடு) எப்படியாவது கருநாடகத்திலாவது வரும் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க. ஆட்சி ஏற்பட ‘‘சாம, பேத, தான, தண்ட’’ முயற்சிகள் அனைத்தையும் கையாளுவதோடு, தமிழ்நாட்டின் காவிரி நதிநீர் ஆணைய நியமனம், உரிய நீர்ப் பங்கீடு போன்றவற்றிலும் மத்தியில் உள்ள மோடி அரசு கருநாடகத்திற்கே சட்ட விரோத முறையில் உதவிடும் பகிரங்க அரசியல் அடாவடித்தனத்தில் ஈடுபட்டு வருகிறது!

முரளிதரராவ் கூறுவதைக்

கவனியுங்கள்!

தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை வளர்க்கும் பொறுப்பினை ஏற்றுள்ள அக்கட்சியின் தேசிய செயலாளர்களில் ஒருவரான முரளிதரராவ் என்பவர் நேற்று (29.9.2017) ‘தி இந்து’ ஆங்கில ஏட்டிற்கு அளித்துள்ள பேட்டியில் கூறிய பதில்களில் சில கோடிட் டுக் காட்டப்பட்டால்தான், பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ்., தமிழ்நாட்டில் கால் பதிக்க எப்படிப்பட்ட வியூகத்தினை வகுத்துச் செயல்பட்டு வருகின்றன என்பது எவருக்கும் விளக்கும்!

உள்ளாட்சித் தேர்தலில் மட்டும்

தனித்துப் போட்டியாம்!

வரும் உள்ளாட்சித் தேர்தலில் மட்டும் தனித்தே நின்று (பா.ஜ.க.) போட்டியிடுவார்களாம்!

ஏனெனில் அதன் செல்வாக்கை தமிழ் மண்ணில் பரவ லாக்கிட பா.ஜ.க. விரும்புகிறதாம்!

மத்திய அரசு பலம், பண பலம், பத்திரிகை பலத்தை நம்பி (மக்கள் பலத்தை அல்ல) இறங்கிடத் திட்டமிட்டுள்ளனர் போலும்!

அப்படியானால், வரும் நாடாளுமன்ற - சட்டமன்றத் தேர்தலில், நீங்கள் கூட்டணி வைத்துக் கொள்வதில் அரசியல் சிக்கல் ஏற்படாதா? என்ற கேள்விக்குப் பதில் அளிக்கையில் முரளிதரராவ் என்பவர் கூறுகிறார்:

தி.மு.க. பலன் அடையுமாம்!

‘‘அதெல்லாம் ஏற்படாது; சட்டமன்றத் தேர்தல் அண்மையில் வராது; 5 ஆண்டுகள் பதவிக் காலத்தை தற்போதைய அ.தி.மு.க. அரசு தொடரவே நாங்கள் துணை நிற்போம்; காரணம், இதனை ஏதாவது செய்து (கலைத்தால் ஜனநாயகப்படி மெஜாரிட்டி இழந்தாலும், ஊழல், லஞ்சம், வருமான வரி வேட்டை கண்டு பிடிப்பு எல்லாம் தாண்டிய நிலையில், இவைகளை நாங்கள் பொருட்படுத்தப் போவதில்லை என்ற அர்த்தம் பொதிந்த நிலையில்) ‘அ.தி.மு.க. ஆட்சிக் கவிழ்ந்தால், அதன் பயன் தி.மு.க.வுக்கே சாதகமாக ஆகிவிடும்‘ என்பதால், அதற்கு இடந்தரமாட்டோம்!’’ என்று கூறியுள்ளார்.

இதன்மூலம் பூனைக்குட்டி வெளிவந்துவிட்டது பார்த்தீர்களா?

அ.தி.மு.க. ஆட்சியை எப்பொழுது கவிழ்ப்பார்களாம்?

எங்களுக்கு எப்போது வசதியோ, வாய்ப்போ அப்போது அ.தி.மு.க. ஆட்சியைக் கவிழ்ப்போம்! தேர்தலில் கூட்டு வைத்துக் கொள்வோம் என்கிறார். தங்கள் ஆட்சியே மறைமுகமாக ஏதாவது ஒரு முகமூடி அணிந்த (அண்ணா தி.மு.க. என்ற முகமூடி அணிந்த) பா.ஜ.க.வின் பொம்மலாட்ட ஆட்சி தற்போது தமிழ்நாட்டில் நடைபெறுகிறது!

‘‘போடு தோப்புக் கரணம்‘’ என்று பா.ஜ.க. அரசு சொல்வதற்குள், ‘‘எண்ணிக் கொள்ளுங்கள் எத்தனை’’ என்று காதைப் பிடித்து தோப்புக் கரணம் போடும் வசதியானதொரு ஆட்சி முன்பு எக்காலத்திலும் பா.ஜ.க.வுக்கு - ஆர்.எஸ்.எசுக்கு தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் எங்குமே கிடைக்கவில்லையே!

‘‘ஜனநாயகம் காப்போம் -

தமிழ்நாட்டை மீட்போம்!’’

எனவே, இதன்மூலம் தமிழ்நாட்டுப் பிரதான எதிர்க்கட்சி யாகிய தி.மு.க., அதன் தோழமைக் கட்சியினர், ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் பொறுப்புள்ளவர்கள், அனைவரும் இணைந்து, வெறும் நீதிமன்றங்களையோ, ஆளுநர், குடியரசுத் தலைவர் களையோ நம்பிக் கொண்டிராமல், மக்களைத் திரட்டி, ‘‘ஜன நாயகம் காப்போம்; தமிழ்நாட்டை மீட்போம்!’’ என்ற ஒரு மாபெரும் மக்கள் இயக்கத்தினை, அனைவரும் இணைந்து ஓரணியில், ஓர் குரலில் பட்டாங்கமாய் இறங்கி நடத்தினாலொழிய  விடியலுக்கு வேறு வழியே இல்லை!

எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒருமுனைப்பட்டுத் (றிஷீறீணீக்ஷீவீsமீ) திரண்டு, மக்களாட்சியின் மாண்பினைக் காத்து, தமிழ் மண்ணில் காவிச் சாயம் கரைந்தோடி கடலில் கலக்க ஆவன செய்ய முனைப்புடன் ஒன்றுபடட்டும்!

 

கி.வீரமணி
தலைவர்,     திராவிடர் கழகம்.

சென்னை
30.9.2017  

Comments  

 
#1 MANITHAN 2017-10-02 20:45
குரங்கு கையில் கிடைத்த பூமாலை போல் ஆகிவிட்டது தமிழகமும், இந்தியாவும்.
மக்களின் விழிப்புணர்ச்சி யை மறுமலர்ச்சிக்கு வழி.
இக்கருத்துக்கு உங்கள் கருத்து .?
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner