எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

‘‘ஜனநாயகத்தைக் காப்போம் - தமிழ்நாட்டை மீட்போம்!’’ என்ற முழக்கத்தோடு தமிழ்நாட்டின் ஜனநாயக சக்திகள் ஒன்றிணையட்டும்!

எடப்பாடி திரு. பழனிச்சாமி அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசு பதவி விலக வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று அறிவிக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்திருப்பது கண்டிக்கத்தக்கது.

மக்களின் கருத்துரிமை, போராட்டம் நடத்தும் உரிமை என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று. இன்றைய தமிழ்நாடு அரசின் இந்தப் போக்கு இதற்கு உகந்ததாக இருப்பதாகத் தெரியவில்லை.

உரிய காலத்தில் காவல்துறையினரிடம் அனுமதி கேட்டு விண்ணப்பித்தாலும், காவல்துறை என்ன செய்கிறது என்றால் உரிய நேரத்தில் அனுமதி கொடுக்காமல், கடைசி வரை இழுத்தடிப்பதும், அனுமதி மறுப்பு என்பதும் அலுவலக நடைமுறைக்கு ஏற்புடையது அல்ல - இது ஒரு, தான் தோன்றித்தனமான தர்பார் ஆகும்.

இந்தப் போக்கினால் சமூக அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் பெரும் இடர்ப்பாடுகளுக்கு ஆளாகின்றன. இது குறித்து காவல்துறைக்குப் புகார் அளித்திருந்தும், நீதிமன்றங்கள் பல நேரங்களில் வழிகாட்டும் ஆணைகளைப் பிறப்பித்திருந்தும்கூட, அவற்றை எல்லாம் கிஞ்சிற்றும் பொருட்படுத்தாமல் காவல்துறை என்றால் எல்லா அதிகார மும் படைத்தது - எப்படியும் நடந்து கொள்ளலாம் என்பது ஒரு ஜனநாயக நாட்டிற்கு பொருந்தக்கூடியது தானா?

பல நாட்களுக்கு முன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்த ஆர்ப்பாட்டத்திற்காக விண்ணப்பித்திருந்தாலும் கடைசி நேரத்தில் அனுமதி மறுக்கப்பட்டது வன்மையான கண்டனத்துக்குரியது.

இந்த அனுபவம் திராவிடர் கழகத்திற்கும் மற்ற கட்சி களுக்கும்கூட பற்பல நேரங்களில் ஏற்பட்ட கொடுமை உண்டு.

இந்த ஆட்சி பதவி விலக வேண்டும் என்பதற்கான ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு அனுமதி மறுப்பதன் மூலம் இந்தப் போராட்டத்திற்கான நியாயத்தின் நோக்கத்தை வலுப்படுத்தியிருக்கிறது என்றுதான் கருத வேண்டும்.

இந்த ஜனநாயக விரோத போக்கை தமிழக அரசு கைவிட வேண்டும். இல்லையெனில் இதற்காகவேகூட அனைத்துக் கட்சிகளும் கைகோத்துப் போராட வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறோம்.

 

கி. வீரமணி
தலைவர்,      திராவிடர் கழகம்

சென்னை
3-10-2017

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner