எழுத்துரு அளவு Larger Font Smaller Font

'புதிய பார்வை' ஆசிரியர் நடராஜன் அவர்களின் மருத்துவ சிகிச்சையைக்கூட

மனிதாபிமானமற்ற முறையில் விமர்சிப்பது பண்பாடுதானா?

தந்தை பெரியார், காமராசரின் அணுகுமுறையைப் பின்பற்றட்டும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள பண்பாட்டுத்தள அறிக்கை

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்துக்கு அனுமதி மறுப்பா?  தமிழர் தலைவர் கண்டனம்!

'புதிய பார்வை' ஆசிரியர் எம். நடராசன் அவர்களுக்கு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையைக்கூட அரசியலாக்கிப் பேசுவது மனிதாபிமானமற்றது - கண்டிக்கத்தக்கது; -- பொது வாழ்வில் மனிதாபிமானமும், பண்பாடும் பின்பற்றப்பட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் அண்மைக் காலத்தில் அரசியல் மிக மிக மிக (எத்தனை 'மிக' வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்) தரம் தாழ்ந்து, 'மனிதநேயம், பண்பாடு, நயத்தக்க நாகரிகம்' - இவை எல்லாவற்றையும் குழி தோண்டிப் புதைக்கும் அவமானகரமான நிலைக்குக் கீழிறங்கியுள்ளது!

"புதிய பார்வை" ஆசிரியரும், சீரிய தமிழ் இன உணர்வாளரும் பகுத்தறிவாளருமான நண்பர் எம். நடராசன் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாகி, அவருக்கு மாற்றுக் கல்லீரல், சீறுநீரகம் பொருத்த வேண்டி, தனியார் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், மாற்று உறுப்புகள் பொருத்தப்பட்டு இன்னமும் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவமனைக் கண்காணிப்பில் இருந்து தொற்று நோய்கள் தாக்கா வண்ணம் அவர் கவனமாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தகவல்கள் கூறுகின்றன!

தந்தை பெரியார், காமராசர்

காட்டிய பண்பாடு!

இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாட்டு தலைவராக உள்ள ஒருவரும், வேறு சில ஊடகங்களிலும் தினசரிகளிலும் - மனிதாபிமானம் அற்று, அவருக்கு மாற்று உறுப்புகள் எப்படிக் கிடைத்தன என்று தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது மனிதாபிமானமா? பண்பாடா?

நோயாளி எத்தகைய கொடும் கொள்கை எதிரியாக இருந்தபோதும், மனிதநேயம் பொங்க, ராஜாஜி அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது அவரைப் பார்த்து கண் கலங்கினாரே தந்தை பெரியார் - இத்தனைக்கும் ஒருவருக்கொருவர் 'அன்பார்ந்த எதிரிகள்' என்று வர்ணித்துக் கொண்டவர்கள்!

அறிஞர் அண்ணா பொது மருத்துவமனையில் இருந்தபோது,  கலைஞரையும், மற்ற மூத்த அமைச்சர்களையும், "ஏன் இவரை வெளிநாட்டிற்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லாமல் இன்னமும்   தாமதிக்கிறீர்கள்?" என்று கடிந்து கொண்டார் பெருந் தலைவர் காமராசர்!

மருத்துவ உதவியிலும்

மனிதாபிமானமற்ற பார்வையா?

இப்படிப்பட்ட பாரம்பரிய மண்ணில் ஒரு நோயாளி உயிருக்கு மன்றாடிக் கொண்டிருக்கும் வேளையில், அவரது துணைவியார் திருமதி சசிகலா சிறையிலிருந்து 'பரோலில்" வருவதைத் தாமதப்படுத்துவதோ அல்லது வந்த பின் அதுபற்றிய விமர்சன பரபரப்பு செய்திகளை வெளியிடுவதோ நியாயந் தானா?

தமிழக அதிமுக அமைச்சர்கள் சிலர் - இப்படி மனிதாபிமானமற்று (முன்பு நெடுஞ்சாண் கிடையாக அவர் காலில் விழுந்து, அவர் பெயரைக் கூட உச்சரிக்கும் தைரியமற்ற இந்த வீரர்கள்)  இன்று தரக்குறைவான - கேள்விகளை  எழுப்புவது, சம்பந்தமில்லாமல் பேசுவது தமிழ் மண்ணுக்கு ஏற்புடையதா? வடக்கே  உள்ள பல கட்சித் தலைவர்கள்கூட பண்பு தவறாமல் நடக்கிறார்களே - இங்கே அரசியல் இவ்வளவு தரம் குறைந்துப் போகலாமா?

இந்தப் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

தனிப்பட்ட முறையில் எவர்மீதும் நமக்கு விருப்பு வெறுப்பு இல்லை.

ஏ, தாழ்ந்த தமிழகமே!

பொது நிலையில் நின்று யோசிக்கும் போது, இப்படி நோயாளிகளிடம்கூட  மனிதாபிமானம் காட்டாத மந்திரி பதவி, கட்சித் தலைவர் பதவி அரசியல்மீது என்றைக்கு மண் மூடும் என்பதுதான் நம் நெஞ்சை உறுத்தும் கேள்வி!

ஏ, தாழ்ந்த தமிழகமே!

 

கி.வீரமணி
தலைவர்,         திராவிடர் கழகம்


சென்னை
10-10-2017

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner