எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை - கேரளாவை முந்திக்கொள்ள வாய்ப்பிருந்தும் தமிழ்நாடு தவறிவிட்டதே!

உச்சநீதிமன்றத் தீர்ப்பையொட்டி தமிழ்நாடு அரசு அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை ஆணையைச் செயல்படுத்த முன்வரவேண்டும்

இல்லையேல் நவம்பரில் மாபெரும் மாநாடும் - சிறை நிரப்பும் மிகப்பெரிய போராட்டமும் நடத்தப்படும்!

தமிழர் தலைவர்  ஆசிரியர் விடுத்துள்ள மனித உரிமை குறித்த அறிக்கை

முதல் தலித் அர்ச்சகர்  யேடு கிருஷ்ணனை வாயார, மனமார, கையார வாழ்த்துகிறோம்

தந்தை பெரியார் இறுதியாக அறிவித்த போராட்டம் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைபற்றியதாகும். அதற்கான சட்டங்களும், தீர்ப்புகளும் சாதகமாக இருக்கும் சூழ்நிலையில், தமிழ்நாடு அரசு கேரளாவைப் பின்பற்றி அனைத்து ஜாதியிலிருந்தும் அர்ச்சகர்களை நியமனம் செய்யத் தயங்கக்கூடாது. நியமனம் செய்யப் படாவிட்டால், வரும் நவம்பரில் திராவிடர் கழகத்தின் சார்பில் மாபெரும் மாநாடும், போராட்டமும் நடத்தப்படும் என்று   திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஜாதி - தீண்டாமையை ஒழிப்பதைத் தன் பிறவி இலட்சியமாய்க் கொண்டு தந்தை பெரியார் ஓர் மாபெரும் இயக்கமான சுயமரியாதை இயக்கம் என்ற சமூகப் புரட்சி இயக்கத்தை 1925 ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கினார்.

ஆனால், இந்த லட்சியம் - பிறவி பேத ஒழிப்பு - சிறு குழந்தை பிராயத்திலிருந்தே அவருக்குள் முளைத்து, கிளைத்தது. காங்கிரசில் தனது ஒப்பற்ற தலைவராகக் கொண்ட காந்தியாரிடமே இக்கொள்கை இலட்சியத்தில், அதனை அடையும் சத்தியாகிரக வழிமுறைகளில்கூட (வைக்கமும், சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் அதற்கு சரியான எடுத்துக்காட்டுகளாகும்) மாறுபட்ட நிலையை எடுத்ததுண்டு.

முதிர்ந்த வயதிலும் தந்தை பெரியார் மும்முரமாக ஈடுபட்ட போராட்டம்

தந்தை பெரியார் அனைத்து ஜாதியினரும் - ஆதி திராவிடர் உள்பட அர்ச்சகராகி, கோவில் கருவறைக்குள் ‘கர்ப்பகிரகத்தில்’ நுழையும் உரிமையும், பூசை செய்யும் உரிமையும் பெற்றாக வேண்டும். அதுதான் எளிதில் பெற முடியாத ஒன்றாக, வர்ணாஸ்ரம தர்மம் என்ற இந்து மத ஏற்பாடு பலமான பாதுகாப்பினைச் செய்துள்ளது என்று தெரிவித்து, தனது 95 ஆம் ஆண்டு முதிர்ந்த வயதிலும் மும்முரமாக போராட்டக் களத்தில் நின்றார்!

‘கடவுளால்  உண்டாக்கப்பட்ட பிரதேசம்‘ என்று ஒரு காலத்தில் மற்றவர்களால் வருணிக்கப்பட்ட கேரளாவை, விவேகானந்தர் ‘‘பைத்தியக்காரர்களின் பரிசோதனைக் கூடம்போல் உள்ள நாடு’’ என்று அதிவேகமாகக் கண்டித்தார். காரணம், மூட நம்பிக்கைகளும், ஜாதி இழிவு, பேதங்களும் அங்கே பல் நூற்றாண்டாக தலை விரித்தாடியது. சமஸ்தான ராஜ்ஜியங்களாக அப்போது இருந்த திருவனந்தபுரம், கொச்சி போன்றவைகளில் அசல் இந்து அரசர்கள் ஆண்ட ‘ஹிந்து ராஜ்ஜியங்களாகவே’ அரசுகள் இயங்கி, ஜாதி - தீண்டாமை - நெருங்காமை - பாராமை - வீதிகளில் நடக்காமை - இவைகளைப் போன்ற மனித உரிமைப் பறிப்புகள் மலிந்து, மாற்ற முடியாத மூடத்தனத்தின் முடை நாற்றம் வீசிய நிலைதான்!

கேரளா அன்றும் - இன்றும்!

ஆனால், அதே நாடு கேரள மாநிலமாக ஆன நிலையில், இன்று எவ்வளவு முன்னேற்றம். படிப்பில், வேலை வாய்ப்பில், உழைப்பில் வளர்ச்சி அபரிமிதம். 100-க்கு 100 எழுத்தறிவு பெற்ற பகுதியாக மிளிர்கிறது (பிரிட்டிஷ், கிறித்தவ பாதிரிகள், இசுலாமியர்களின் மத மாற்றங்களும் கல்வி பரவியதற்குக் காரணம்).

நாராயண குரு, டாக்டர் பல்பு, சகோதரர் அய்யப்பன், டி.கே.மாதவன், ஜார்ஜ் ஜோசப், குரூர் நீலகண்டன் நம்பூதிரி, அய்யன் காளி போன்ற பலரது, அயராத அறப் போர்கள் - சத்தியாகிரகங்கள் ஏராளம்!

சம உண்ணல்கள், ‘மித்திரபோஜன ஏற்பாடு’ செய்த இவ்வாண்டு நூற்றாண்டு விழாவை சகோதரர் அய்யப் பனின் தொண்டால் கொண்டாடியதை நினைவு கூறலாம்.

தந்தை பெரியார் நடத்திய

வைக்கம் போராட்டம்

தந்தை பெரியாரின் வைக்கம் போராட்டம் ஈழவர்கள் மகாதேவர் கோவிலைச் சுற்றிய தெருக்களில் நடமாட உரிமையற்று, ஊரைச் சுற்றிச் செல்வதும், அதேநேரத்தில் நாயும், பன்றியும், கழுதையும் அத்தெருக்களில் சுதந்திர மாகத் திரியும் உரிமையும் பெற்ற கொடுமையை எதிர்த்து நடத்திய போராட்டங்கள் - சத்தியாகிரகம் என்ற ‘அமைதி’ அறவழி மறியல் - வெற்றி என்பது சாதாரண மானவையல்ல!

காந்தியார் போன்றவர்கள் தொடக்கத்தில் இதை எதிர்த்ததையும், மீறி தந்தை பெரியார் தலைமையில் நடந்த போராட்டம் இருமுறை சிறையேகி, ஓராண்டு தொடர் ‘‘சத்தியாகிரகம்‘’ நடந்த பின்னரே, திருவிதாங்கூர் ராணி - தெருக்களை ‘‘கீழ்ஜாதியினர்’’ நடப்பதற்குத் திறந்துவிட உத்தரவிட்டார்.

1922 திருப்பூர்

காங்கிரஸ் மாநாட்டிலேயே...

அப்போதும் கோவில் நுழைவு உரிமை ‘‘கீழ்ஜாதி யினருக்கு’’ - குறிப்பாக தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கிட்டவில்லை! சுசீந்திரம் (கன்னியாகுமரிக்குப் போகும் வழியில் உள்ள ஊர்) தாணு, மால், அயன் - மும்மூர்த்திகளைக் கொண்ட கோவிலில் முதல் மறியல் சத்தியாகிரகம் தொடங்கி பிறகு சுயமரியாதை இயக்கத் தவரால், ஈரோடு, திருவண்ணாமலை போன்ற பல ஊர்களில் நடந்து, வழக்குகள் போடப்பட்டு, பிறகுதான் மதுரையில் இராஜகோபாலாச்சாரியார் 1938 இல் தாழ்த்தப்பட்டவர் உள்ளே சென்று தரிசிக்கும் நிலைக்கு உத்தரவிட்டார். இதையே 1922 இல் திருப்பூரில் தந்தை பெரியாரும், திரு.வி.க.வும் தமிழ்நாடு காங்கிரசு காரியக் கமிட்டியில் தீர்மானம் கொண்டு போனபோது - மதுரை வைத்தியநாதய்யர் கடுமையாக எதிர்த்தார். (ஆதாரம்: திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள்).

சி.பி.எம். ஆட்சியின் அமைதிப் புரட்சி!

இக்கட்டங்களை எல்லாம் தாண்டி, அதே கேரளாவில் ஆதிதிராவிடரும், அர்ச்சகராகலாம் என்ற அரசு ஆணை முன்பு (ஜி.ஓ. - கவர்ண்ட்மெண்ட் ஆர்டர்) நிறைவேற்றப்பட்டது. அது மிக வேகமாகச் செயல் படுத்தப்பட்டு, கேரளாவில் ஆதிதிராவிடரில் உள்ள பல பிரிவினரும் ‘‘புலையர்’’ உள்பட அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்ட ‘‘அமைதிப் புரட்சி’’ ஜாதி தீண்டாமை ஒழிப்பு அம்சங்கள் - பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசும், அதன்கீழ் இயங்கும் தேவசம் போர்டும் செயல்படுத்துவது பாராட்டத்தகுந்தது!

மேலும் மேலும் கேரளாவில் நியமனங்கள்

நேற்று (12.10.2017) வந்துள்ள ஒரு செய்தியில்,‘‘கொச்சி, குருவாயூர் தேவஸ்தான கோவில்களிலும் பார்ப்பன ரல்லாத 60 பேர் அர்ச்சகர்கள் ஆகின்றனர்’’ என்பதை கேரள தேவஸ்தான தேர்வாணையத்தின் தலைவர் ராஜகோபால் நாயர் இதன் தொடர்பாக ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், கொச்சி - தேவஸ்தான கோவில்களில் 150 அர்ச்சகர் பணியிடங்கள், குருவாயூர் தேவஸ்தான கோவில்களில் 30 அர்ச்சகர் பணியிடங்கள் என, மொத்தம் 180 பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், இங்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் 50 இடங்கள் பிற்படுத்தப்பட்டோருக்கும், 10 இடங்கள் தாழ்த்தப்பட் டோருக்கும் விரைவில் ஒதுக்கப்பட உள்ளதாகத் தெரி வித்துள்ளார்.

இரத்தம் சிந்தாத இந்த அமைதிப் புரட்சிக்கான சரித்திர சாதனைக்காக, கேரள கம்யூனிஸ்ட் அரசினை வெகுவாகப் பாராட்டுகிறோம்.

தமிழ்நாட்டின் நிலைமை

முயல் - ஆமை கதையே!

இதை முந்திக் கொண்டிருக்க வேண்டிய தமிழ்நாடு அரசு - ‘முயல் - ஆமை கதை போல’ இருப்பது வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரியது.

தமிழ்நாட்டில் உள்ள அ.தி.மு.க. அரசு ஏற்கெனவே முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் சட்டமன்றத்திலேயே கொடுத்த வாக்குறுதியை உடன டியாக நிறைவேற்றிட முன்வரவேண்டும்! 1970 ஆம் ஆண்டிலேயே தி.மு.க. ஆட்சியில் கலைஞர் இதற்கான சட்டத்தைக் கொண்டு வந்தார் என்பதும் முக்கியமான தாகும்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பு சாதகமாகவே வந்து, தமிழ்நாடு அரசின் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் செல்லும் என்று கூறி, நியமனம் செய்யலாம் என்று ‘‘பச்சைக்கொடி’’ காட்டிவிட்டது!

நவம்பரில் மாபெரும் மாநாடு - போராட்டம்!

இன்னமும் ஏன் தயக்கம்? இதற்காகவே திராவிடர் கழகம் வருகின்ற நவம்பரில் ஒரு மாபெரும் மாநாட் டினை, அனைத்து இயக்கங்கள், அமைப்புகளை அழைத்து நடத்தி, மிகப்பெரிய அறப்போராட்டத்தினை - சிறை நிரப்பும் போராட்டம் தேவையா என்பதுபற்றி யோசித்து முடிவு எடுக்கவிருக்கிறது.

அதற்கு முன்பாகவே தமிழக அரசு, கேரள அரசு போல செயல்படவேண்டியது அவசரம் - அவசியம்!

 

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்.

 


தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner