எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அனைத்துலக உணவு நாளில் பட்டினிச் சாவு;

ஆதார் திட்டத்தினால் ஏற்பட்ட அவலம்!

பட்டினிச் சாவில்  நூறாவது இடத்தில் இந்தியா!

ராஞ்சி, அக்.17 உலக அளவில் பட்டினிச் சாவில் நூறாவது இடத்தில் இந்தியா உள்ளது.

ஆதார் அட்டை இல்லாததால் குடும்ப அட்டைக்கு வழங்கப்படும் பொருட்ள்கள் மறுக்கப்பட்டநிலையில் உணவின்றி பட்டி னியால் ஒரு குடும்பமே பாதிக்கப்பட்டது, இதில் 11 வயது சிறுமி உயிரிழந்தார்.

ஜார்க்கண்ட், சத்தீஷ்கர், ம.பி. உள்ளிட்ட பல மாநிலங்களில் கிராமப்புற மற்றும் சிறு நகர்ப்புற ஏழைகளின் வாழ்வு மிகவும் மோசமாக உள்ளது. கடந்த மூன்று ஆண்டு களாக விவசாயத் தொழில் மிகவும் முடங்கி விட்டதால் விவசாயக் கூலிகள் நகரங்களுக்கு வேலைக்குச் செல்ல ஆரம்பித்தனர். இந்த நிலையில் பண மதிப்பிழப்பு, நகரங்களில் ஏழைகளின் வேலைக்கு வேட்டு வைத்தது, வட இந்தியாவில் 83 விழுக்காடு கிராமங்கள் கடுமையான வறுமையின் பிடியில் சிக்கி யுள்ளன. இந்த நிலையில் இக்குடும்பங் களுக்கு குடும்ப அட்டை உணவுப் பொருள்கள் மட்டுமே பசியைப் போக்கும் ஒரு வழியாக இருந்தது. ஆனால், இதற்கும் ஆதார் அட்டை பெரும் தடையாக இருக் கிறது. இதனால் பல குடும்பங்கள் காட்டுத் தாவரங்களையும், வனத்தில் கிடைக்கும் கிழங்குகளையும் சாப்பிடும் நிலைக்குச் சென்றுவிட்டன.

பாஜக ஆளும் ஜார்க்கண்ட் மாநிலம், சிம்டெகா மாவட்டத்தைச் சேர்ந்த பல குடும்பங்கள் காட்டுக் கிழங்குகள்கூட கிடைக்காத நிலையில், பட்டினியால் வாடி வருகின்றன. இப்படி பட்டினியால் வாடும் குடும்பத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒரு வர் பட்டினியின் காரணமாக உயிரிழந்துள் ளார்.

மதிய உணவுதான்

ஒருவேளை பட்டினியைத் தீர்க்கிறது

சிம்டோகாவில் உள்ள கரிம்தி என்ற கிராமத்தில் பல குடும்பங்கள் பட்டினியால் வாடுகின்றன. பெரியவர்கள் காட்டுக்குச் சென்று ஏதாவது கிடைத்தால், அதைச் சாப்பிட்டு விடுவார்கள். ஆனால், குழந்தை கள் காட்டுக் கிழங்குகளை உண்டால், அவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுவ தால் அதைச் சாப்பிடாமல் இருக்கின்றனர். குழந்தைகளுக்குப் பள்ளிகளில் வழங்கப் படும் மதிய உணவு ஒன்று தான் அவர் களுக்கு ஒருவேளைப் பசியைத் தீர்க்கும். இந்த நிலையில் துர்கா பூஜை, தீபாவளி என்று தொடர்ந்து பள்ளிகள்ளுக்கு விடு முறை விடப்பட்டன. இதனால் சந்தோஷி குமாரி என்ற சிறுமி பட்டினியால் மிகவும் அவதிப்பட்டுள்ளார்.

வீட்டில் கொடுத்த காட்டுக் கிழங்குகளை சாப்பிடப் பிடிக்காமல், தொடர்ந்து பட்டி னியாகவே இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அவர் மரணமடைந்தார்.

துர்கா பூஜை விடுமுறை காரணமாக பள்ளியில் மதிய உணவும் கிடைக்காமல் சந்தோஷி குமாரி என்ற அந்தச் சிறுமி பசியால் 8 நாள்களாக அவதிப்பட்டுள்ளார். கரிமதி என்ற அந்தக் கிராமத்தில் மிகவும் ஏழ்மையான அந்தச் சிறுமியின் குடும்பத் துக்குச் சொந்தமாக நிலம் எதுவும் கிடை யாது. வேலை இல்லாததால் நிலையான வருமானம் இன்றி கஷ்டப்படும் நிலையில் அவர்கள் இருந்துள்ளனர்.

இது தொடர்பாக மனித உரிமை ஆர்வலர் தீரஜ்குமார் என்பவர் கூறும்போது:

இந்தக் குடும்பத்திற்குக் கடந்த ஆறு மாதங்களாகவே குடும்ப அட்டை உணவுப் பொருள்கள் மறுக்கப்பட்டு வந்தன. அப் பகுதியைச் சேர்ந்த நியாயவிலைக் கடைக் காரர் ஆதார் அட்டையுடன் குடும்ப அட்டை இணைக்கப்பட்டு இருந்தால் மட்டுமே உணவுப்பொருள் கொடுக்கப்படும் என்று கூறிவிட்டார்.

பொது விநியோக திட்டத்தின்கீழ் வழங்கப்படும் உணவுப் பொருள்களைப் பெற ஆதார் அவசியம் என்ற அரசின் உத்தரவால் நியாயவிலைக் கடைக்காரர்கள் உணவுப்பொருள் கொடுக்க மறுத்துவிட்டனர். ராஜஸ்தான், ஜார்க்கண்ட் உள்ளிட்ட  மாநிலங்களில் ஆதார் இணைக்கப்படாத குடும்ப அட்டைகளுக்கு உணவுப் பொருள் வழங்க மறுக்கப்படுகிறது,

அரசு மானியங்களைப் பெற ஆதாரை கட்டாயமாக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியுள்ளது. ஆனால், இதைப் பொருட்படுத்தாமல் ஜார்க்கண்ட் அரசு ஆதார் இணைப்பை கட்டாயப்படுத்தி வருகிறது.

உச்சநீதிமன்றமும், ஆதார் அட்டையும்

உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் பொருட்படுத்தாத அரசுகள் தொடர்ந்து ஆதார் அட்டையை இணை என்று கூறிவருகின்றன. ஜார்க்கண்ட் மாநிலத்தின்  லேட்கர் மாவட்டத்தில் செப்டம்பர் 30 ஆம் தேதி மாவட்ட உணவு வழங்கல் துறை அலுவலர் ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் குடும்ப அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால், பொது விநியோக திட்டப் பட்டியலில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தார்.

இந்த உத்தரவின் காரணமாக தகுதியுள்ள மக்கள் அதிகம் பேர் பொது விநியோகத் திட்ட பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். உணவின்றி தவித்த பல குடும்பங்களில், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த சந்தோஷிகுமாரி மரணமடைந்தார். குடும்ப அட்டை நீக்கப்பட்டிருப்பதை ஜால்டேகா வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி செய்துள்ளார். கரிமதி கிராமத்தில் சந்தோஷி குமாரி குடும்பம் உள்பட 10 குடும்ப அட்டை இந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

குடும்ப அட்டை நீக்கம் தொடர்பாக கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் நடத்திய குறைதீர் கூட்டத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதோடு செப்டம்பர் ஒன்றாம் தேதி மாவட்ட உணவு வழங்கல் துறை அலுவலருக்கும் புகார் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. புதிய குடும்ப அட்டை கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் புதிய குடும்ப அட்டை வழங்கப்படவில்லை. மின்சாரம், இணையதளம் எந்த வசதியும் இல்லாத தொலைதூரக் கிராம மக்களையும் நகரத்திற்குச் சென்று இணையதளத்தில் உங்கள் பெயர்களைச் சேருங்கள் என்று கட்டாயப்படுத்தி வருகின்றனர்.

சாப்பிடவே உணவில்லாத ஏழைகள் எப்படி நகரங்களுக்குச் சென்று இணையதள முகவர்களிடம் பணம் கொடுத்து தங்கள் பெயர்களை ஆதார் எண்ணுடன் குடும்ப அட்டையை இணைப்பார்கள் என்று சமூக ஆர்வலர் தீரஜ்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பரிதாபம்

ஜார்க்கண்ட் மாநிலம் முழுவதும் பரவலாக இதேபோன்ற நிலை நீடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இணைய தளப் பிரச்சினை காரணமாக ஆதார் எண் வைத்திருப்பவர்களை குடும்ப அட்டையுடன் இணைக்க முடியாத நிலையும் நீடிக்கிறது. இதனால், உண்மையான பயனாளிகள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் 2.3 கோடி மக்கள் பொது விநியோக திட்டத்தில் உள்ளனர். ஆனால் அரசு இணையதளத்தில் 1.7 கோடி மக்கள் என்று மட்டுமே உள்ளது. ஆதார் எண்ணை இணைத்தவர்களின் பட்டியலை மட்டும் வெளியிட்டுள்ளனர். குறைந்தபட்சம் 25 சதவீத மக்கள் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

100 ஆம் இடத்தில் இந்தியா

உலகளவில் பட்டினியால் வாடும் மக்கள் அதிக அளவு வாழும் நாடுகளில் இந்தியா 100- ஆவது இடத்தில் இருப்பதாக அனைத்துலக உணவுக் கொள்கை ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது என்ற அதிர்ச்சிகரமான செய்தி அக்டோபர் 14 -ஆம் தேதி வெளியானது. கடந்த ஆண்டு இந்தியா 96- ஆம் இடத்தில் இருந்தது, சீனா 29 ஆவது இடத்திலும், நேபாளம் 72, மியான்மா 77, இலங்கை 84, வங்கதேசம் 88 ஆவது இடத்திலும் உள்ளன. வடகொரியா (93), ஈரான் (78) ஆகிய நாடுகளை விட இந்தியா மிகவும் பரிதாப நிலையில் உள்ளது, இந்த நிலையில் அனைத்துலக உணவு தினம்(அக்டோபர் 16)கடைப்பிடிக்கப்பட்ட நாளன்றே பட்டினியால் பல குடும்பங்கள் தவிப்பதும், ஒரு சிறுமி மரணமடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner