எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அதிகாரக் குவியல்கள் மத்திய அரசிடம் ஏராளம்; இந்நிலையில்

வேளாண் துறையையும் மத்தியப் பட்டியலுக்குக் கொண்டு போவதா?

மாநில அரசுகள் கண்டிக்கவேண்டும் அண்ணா பெயரில் உள்ள அ.இ.அ.தி.மு.க. அரசும் உடனடியாகக் கண்டித்து எழுதட்டும்!

தமிழர் தலைவர்  ஆசிரியர் விடுத்துள்ள மாநில உரிமைக்கான அறிக்கை

ஏற்கெனவே மத்திய அரசின் அதிகாரப் பட்டியல் அளவுக்கு அதிகமாக இருக்கும் பொழுது, வேளாண் துறையையும் மத்தியப் பட்டியலுக்குக் கொண்டு போகச் செய்யும் திட்டத்தை மாநில அரசுகள் தடுக்கவேண்டும்; குறிப்பாக மாநில உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வந்துள்ள அண்ணாவின் பெயரைக் கட்சியில் வைத்திருக்கும் அண்ணா தி.மு.க. அரசு இதனைக் கண் டித்து மத்திய அரசுக்கு உடனடியாக எழுத வேண்டும் என்று   திராவிடர் கழகத் தலை வர், ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:

திட்டக் கமிஷனைக் கலைத்த மோடி அரசு, அதற்குப் பதிலாக ‘நிதி ஆயோக்‘ என்ற ஒரு அமைப்பினை உரு வாக்கியது; அதன் உறுப்பினர்களில் ஒருவர், (அவர்கள் எல்லாம் உள்ளத்தில் காவியேற்றிக் கொண்ட ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. ஆதரவாளர்களும்) தற்போது மாநிலப் பட்டியலில் உள்ள ‘வேளாண்மை’ அதிகாரத் தையும் அப்படியே மத்திய அரசின் ஏகபோக அதிகார மான மத்தியப் பட்டியலுக்கே மாற்றவேண்டும் என்று கூறியுள்ளது - முழுக்க முழுக்க பிரதமர் மோடி அரசின் ஆழம்பார்க்கும் (Feeler விட்டுப் பார்க்கும்) ஒரு வித்தையாகும்.

இந்த நச்சு அதிகார ஆசை - எண்ணத்தை முளையிலேயே கிள்ளி எறிய பா.ஜ.க. அல்லாத மாநில அரசுகள் முன்வரவேண்டும். பொதுவாக பரவலான அதிகாரங் களே உண்மையான மக்கள் ஆட்சியின் சரியான அடையாளங்கள் ஆகும்!

அரசியல் சட்டத்தில் மூன்று பட்டியல்கள்

அரசியல் சட்ட கர்த்தாக்கள் வகுத்த மூன்று பட்டியல்களில்-

1. மத்தியப் பட்டியல் - 97 அதிகாரங்களைக் கொண்ட நீண்ட ‘‘கொழுத்த’’ அதிகாரக் குவியல் பட்டியல்

2. மாநிலப் பட்டியல் - 66 அதிகாரங்களைக் கொண்ட ‘‘இளைத்த'' பட்டியல்

3. மாநிலங்களின் இசைவு பெற்றே மத்திய அரசு சட்டம் இயற்றவேண்டிய (கன்கரண்ட் லிஸ்ட்) பட்டியல் - 47 அதிகாரங்களைக் கொண்டது.

இப்பட்டியல்கள் உருவாகும்போதே அரசியல் சட்ட வரைவுக் குழுத் தலைவர் டாக்டர் அம்பேத்கர் அவர் கள், ஒரு எச்சரிக்கை விடுத்தார். ‘‘மாநிலப் பட்டியலைச் சுருக்கி, மத்தியப் பட்டியலுக்கு அதிகாரங்களைக் குவிப்பதில் ஒரு பெரும் ஆபத்து உள்ளது. அதிகமான சுமை - கனம் மத்திய அரசின் அரசு இயந்திரத்தில் ஏற்றப்பட்டால், அந்த சுமை தாங்கும் இயந்திரம் முறியும் அபாயம் ஏற்படும்‘’ என்று எச்சரித்தார்.

வேளாண் துறை

மத்தியப் பட்டியலிலா?

திருக்குறள் தந்த பேரறிஞர் திருவள்ளுவர் இந்த தத்துவ உண்மையை ஒரு அருமையான ‘குறளில்’ கூறினார்.

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்

சால மிகுத்துப் பெயின் (குறள் 475)

‘மயில் இறகு போன்றவை லகுவானவைதானே என்று கருதி அளவுக்கு அதிகமாக ஏற்றினால், அந்த வண்டியின் அச்சு முறிந்து வீழும்' என்பதே அக்குறளின் கருத்து.

வேளாண்மை - தற்போது மாநிலப் பட்டியலில் 14 ஆம் பொருளாக உள்ள மாநில அதிகாரம் - அதனை மத்தியப் பட்டியலுக்கு மாற்ற ஒரு திட்டத்தினை ஏன் இப்போது அறிவிக்கிறார்கள்? வேளாண்மை என்ற பொருளின்கீழ் அரசியல் சட்ட மாநிலப் பட்டியலில் 14 ஆவது அம்சமாக,

‘‘‘Agriculture, including agricultural, education and research protection against pests, and prevention of plant diseases’’ என்று உள்ளது.

வேளாண் துறைக் கல்லூரியில் சேர்வதற்கு ‘நீட்’டைக் கொண்டு வரத் திட்டமா?

வேளாண்மைக் கல்லூரிகளை, வேளாண்மைப் பல்கலைக் கழகங்களை, ஆய்வுக்கூடங்களை, ஆராய்ச்சிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, அங்கும் ‘நீட்’ தேர்வு நடத்துவதற்கும், இதில் ஒரு சூழ்ச்சி மிகுந்த திட்டம் புதைந்துள்ளது என்பதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

அரசியல் சட்டம் வகுத்த அம்பேத்கர் கூற்றுப் படியும், பல்வேறு மாநில அதிகாரங்கள்பற்றிய பங்கீடுசம்பந்தமான ஆய்வுக் குழுக்கள் டாக்டர் ராஜமன்னார் குழு, சர்க்காரியா குழு போன்ற வைகளின் பரிந்துரைகளின்படி தற்போது மத்தியப் பட்டியலிலும், ‘பொதுப் பட்டியல்’ என்று தவறாக அழைக்கப்படும் மாநிலங்கள் இசைவு பெறவேண்டிய பட்டியலில் உள்ளவைகளை, மாநிலப் பட்டியலுக்கே கொண்டு வருவதுதான் இன்றைய தேவையாகும்!

ஆனால், மத்திய (டில்லி) அரசின் போக்கோ, (Reverse Gear) பின்னோக்கிச் செல்லும் பிற்போக் காக உள்ளது!

அதிகச் ‘சுமையை’ தூக்க முடியாமல் தூக்கிடும் நிலையில் உள்ளவர்கள், சுமையை ஏன் தேவையற்று சுமந்து, ‘‘நொந்து நூலாகப்’’ போகவேண்டும்!

ஒற்றை ஆட்சியையே கொண்டு வந்து, தற் போதுள்ள அரைகுறை கூட்டாட்சி முறையையும் அறவே பறிக்கவே, இந்த ஆபத்தான யோசனைத் திட்டத்தைக் கூறுகிறார்கள்.

அறிஞர் அண்ணா

அன்று எழுப்பிய வினா!

அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக தி.மு.க. ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன், மத்தியில் குவிந்துள்ள அதிகாரங்களைப் பரவலாக்கவேண்டும் என்று பேசும்போது, இந்த வேளாண்மைத் துறையை உதாரணத்திற்குக் கூறி, மாநிலத்தில் வேளாண் அமைச்சர் உள்ளபோது, மத்தியில் ஏன் தனியே ஒரு வேளாண் அமைச்சர் என்றே கேட்டார்!

நிதி ஆயோக்கின் இதே உறுப்பினர் தனியார்த் துறை இட ஒதுக்கீட்டை எதிர்த்துள்ளார். அதனை திராவிடர் கழக பொதுக்குழு கண்டித்துத் தீர்மானமே போட்டுள்ளது. இவர்கள் யார் கொள்கை முடிவுகளை எடுப்பதற்கு?

அ.தி.மு.க. அரசு என்ன செய்யவேண்டும்?

அண்ணாவைக் காற்றில் பறக்கும் கொடியாக மட்டுமே பறக்கவிடும் இன்றைய அ.தி.மு.க. தமிழக அமைச்சர்கள், இதனை உடனடியாக எதிர்த்து மத்திய அரசுக்கு எழுதவேண்டாமா?

அந்தோ, தாழ்ந்த தமிழகமே! உன் நிலை இப்டியா இருப்பது?


கி. வீரமணி
தலைவர்,    திராவிடர் கழகம்.

சென்னை
23.10.2017

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner