எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நேற்று (23.10.2017) தமிழ்நாடு முதலமைச்சரும், மற்ற அமைச்சர்களும் கலந்துகொண்ட எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா என்ற அரசு விழாவில் - வழமைபோல் அழைத்து வரப்பட்ட கூட்டத்தில், திடீரென்று ஒரு பெண் தீக்குளித்து, காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்ட தன் கணவர் வீடு திரும்பவில்லை; காவல்துறையினரிடம் கேட்டால், சரியான பதில் இல்லை என்பதால், கவன ஈர்ப்புக்காக அதை (தீக்குளிப்பை) ஒரு உத்தியாகவே கையாண்டிருக்கின்றார்.

அதுபோல, நெல்லை மாவட்டத்தில் கந்துவட்டிக் கொடுமை தாங்காமல் - நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்து, மனைவி, 2 மகள்களுடன் தீக்குளித்துள்ளார் இசக்கி முத்து என்பவர். நான்கு பேரும் உடல் கருகிய நிலையில், உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், மனைவியும், இரண்டு மகள்களும் பரிதாபமாக உயிரிழந்தனர்; இசக்கி முத்துவுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

தென்காசி அருகே உள்ள காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி இசக்கிமுத்து (வயது 28). இவருக்கு சுப்புலட்சுமி என்ற 25 வயது மனைவி, மதிசாருண்யா (வயது 5), அக்சயா பரணிகா (ஒன்றரை வயது) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.

இசக்கிமுத்துவின் மனைவி ஒரு பெண்ணிடம் ஒரு லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கிய பிறகு, மாதந்தோறும் கந்துவட்டிக் கட்டிக் கொண்டு வந்துள்ளார். வட்டி குட்டி போட்டுத் தரவேண்டிய தொகை 2 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் கொடுத்த பிறகும், நெருக்குதல் தீரவில்லை!

8 மாதங்களாக  இந்தக் கொடுமை!! மாவட்ட ஆட்சியரிடம் 6 முறை மனு கொடுத்துள்ளனர்;  எஸ்.பி. அலுவலகம் அங்கிருந்து அச்சன்புதூர் காவல் நிலையம் என்று மனு பயணம் செய்ததுதான் மிச்சம் - எந்தக் குப்பைக் கூடையிலோ கிடக்கும்போல!

இந்த விரக்தி, வற்புறுத்தல் கொடுமை, அவமானம் - இவை காரணமாக அக்குடும்பமே தீக்குளித்து மூன்று உயிர்கள் போய், ஒரு உயிர் ஊசலாடும் நிலை!

*இதைவிட நம் நாட்டு ஆட்சித் திறனுக்கு - வேறு என்ன ஆதாரம் தேவை?*

இதுபற்றி சரியாக ஆராய்ந்து, விசாரித்து கந்துவட்டிக் கொடுமை, கட்டப் பஞ்சாயத்து ராஜ்ஜியம் - இவைகளுக்கு முடிவு கட்ட அனைவரும் முன்வரவேண்டும் என்பதும், நோய்நாடி நோய் முதல் நாடுவதுபோல - வறுமை கிராமப் புற மக்களை எப்படி 70 ஆண்டு ‘‘சுயராஜ்ஜியத்தில்’’ கொடி கட்டி, கொடுமையோடு கோலோச்சுகிறது என்பதையும் புரிந்து, தக்க நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடுவது மத்திய - மாநில அரசுகளின் தலையாய கடமையாகும்.

இதுபற்றி பா.ஜ.க.வில் ‘‘பாரத் ஸ்கவுட் தேர்தல் புகழ்’’ காரைக்குடி எச்சிடம் ஒரு தனியார் தொலைக்காட்சி பேட்டிக் கேட்டுப் பெற்றுள்ளது.

‘‘இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் தான் தீக்குளிப்பு சம்பவங்கள் அதிகம் நடக்கிறது.

தீக்குளிப்பு சம்பவங்களை அடியோடு ஒழிக்க வேண்டும் என்றால் திராவிட கொள்கையை அழிக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் ஆன்மீகம் மீது நம்பிக்கை குறைந்து வருவதை காட்டுகிறது. பகுத்தறிவால் தமிழக மக்களின் அறிவை மழுங்கடித்து விட்டார்கள். ஆன்மீகமும், நம்பிக்கையும் இருந்தால் தான் துணிவு வரும். ஈ.வெ.ரா. ஆட்கள் பகுத்தறிவால் தமிழகத்தை குட்டிச் சுவராக்கிவிட்டனர். இந்த தீக்குளிப்பு சம்பவமும் ஒரு எடுத்துக்காட்டு. நாத்திகத்தை அடியோடு விரட்டியடிக்க வேண்டும்‘’

என்று இந்த மூளையில் காவி ஏறிய காரணத்தால் ‘தத்து பித்தென்று’ உளறல்!

பாரத் ஸ்கவுட்ஸ் தேர்தலில் தோற்றதை - நோபல் பரிசை  ஒரே ஒரு மார்க்கில் ‘மிஸ்’ பண்ணிய உலக மகா அறிவாளியாக தன்னை நினைத்துக்கொண்டு, தேர்தலில் ஜாமீன் தொகை இழப்பை பிறவிப் பயனாகக் கொண்ட இந்த பிரகஸ்பதியின் உளறலைக் கேட்டு வாயால் எவரும் சிரிக்க முடியாது!

*வடமாநிலங்களில் உன் அர்த்தமுள்ள ஹிந்து மதத்தில்தானே ‘சதி’ என்ற கணவனோடு உயிரோடு மனைவியை வலுக்கட்டாயமாகத் தீயில் தள்ளி கொளுத்தி, பிறகு ‘சதிமாதா’ என்று கோவில் கட்டி, அதை வசூலாக்கி வருமானம் தேடும் அவமானம் - தேசிய அவமானம் அல்லவா! நெருப்பில் தள்ளுவது மதமா? பகுத்தறிவா?*

தென்னாட்டில் - குறிப்பாக தமிழ்நாட்டில் இப்படி நடக்காததற்கு அந்தப் பெரியார்தானே காரணம்.

உங்கள் ஜாதியில் உள்ள ‘‘மாஜி மொட்டைப் பாப்பாத்திகள்’’ இன்று உயிரோடு இருப்பதற்கே இந்த நாத்திகப் பிரச்சாரம் தானே மூலகாரணம்!

இந்த வடிகட்டிய ‘‘அறிவு வாளிக்கு’’ இது எங்கே புரியப்போகிறது?

அதைவிட நீங்கள் கோவில் கட்டிட துடியாய்த் துடிக்கும் இராமன் செய்த வேலை என்ன?

சீதையைத் தீக்குளிக்கச் சொன்னவன் எந்த நாஸ்திகன்? அட அறிவுக்கொழுந்தே, உன் கடவுள் அவதாரமான இராமன்தானே!

சீதையின் கற்புமீது சந்தேகம் கொண்டு தீக்குளிக்கச் சொன்ன இராமாயணத்தில் தீக்குளிப்பு - எந்த நாஸ்திகத்தால்?

அதுமட்டுமா?

சிதம்பரம் நடராஜனைத் தரிசிக்க விரும்பிய ஆதிதிராவிட நந்தனை ‘தீயில் குளித்துவிட்டு வா’ என்று சொன்ன பார்ப்பனர்கள் - தில்லைவாழ் தீட்சிதர்களும், அவர்கள் வணங்கும் கடவுளும்தானே!

நந்தனைத் தீக்குளிக்கச் செய்த கதை - எந்த நாஸ்திகனால் எழுதப்பட்டது?

உனக்கு இராமாயணமும் தெரியவில்லை; நந்தன் கதையும் புரியவில்லை - புராணமோ, இதிகாசமோ ஒரு புடலங்காயும் தெரியாமல் உளறிக் கொட்டாதே என்று நாங்கள் கூறமாட்டோம் என்பார்கள் தி.க. நாத்திகர்கள்.

காரணம், தமிழ்நாட்டில் பா.ஜ.க.வை வளராத கட்சியாகப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பினை மோடியும், அமித்ஷாவும் மூன்று பேர்களிடம் ஒப்படைத்திருப்பது அவர்களுக்குத் தெரியும்.

1. இந்த ‘எச்சி’ மன்னர்

2. தமிழ்வசை

3. பொன்னார்!

- பலே, பலே! இப்படியே தொடர்ந்து பேசி காவியையும், ஆவியாக்கி மேலே போக ‘ஆன்மீகம்‘ என்ற புரூடாவை அடுக்கிக் கொண்டே அபத்தப் பதில்களை அள்ளிவிடுங்கள்!

ஓம் மிஸ்டுகால் வளர்க, அதுதான் சாஸ்வதம்!

என்றும் வராது சொந்தக்கால்!!

 

- ‘‘ஊசிமிளகாய்’’

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner