எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கைக்குத் தமிழக அரசின் நிதி உதவி முடிவு வரவேற்கத்தக்கது

கலைஞர் முயற்சியால் செம்மொழி அங்கீகாரம் பெற்ற

செம்மொழி நிறுவனத்தை மத்திய பல்கலைக் கழகத்தில் சேர்ப்பதைத் தடுத்திடுக!

கீழடி தொல்லியல் ஆய்வு உடனடியாக செயல்படட்டும் -

வரலாறு கங்கையிலிருந்தல்ல - காவிரியிலிருந்து தொடங்கப்படவேண்டும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

வேளாண் துறையையும் மத்தியப் பட்டியலுக்குக் கொண்டு போவதா?  மாநில அரசுகள் கண்டிக்கவேண்டும்

ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கைக்கு பத்து கோடி ரூபாய் நிதி ஒடுக்கீடு செய்ய முன்வந்துள்ள தமிழக அரசின் முடிவுக்கு வரவேற்புக் கூறி, அதேநேரத்தில் கலைஞர் அவர்களின் முயற்சியினால் ‘செம்மொழி’ அங்கீகாரம் கிடைக்கப் பெற்ற செம்மொழி நிறுவனத்தை  திருவாரூர் மத்தியப் பல்கலைக் கழகத்தின் ஒரு அங்கமாக மாற்றும் மத்திய பி.ஜே.பி. அரசின் போக்குத் தடுத்து நிறுத்தப்படவேண்டும் என்று   திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

முதலமைச்சர் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள் தலைமையிலான அ.தி.மு.க. அரசு அமெ ரிக்காவின் பிரபல ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் ‘‘தமிழ் இருக்கை’’ அமைக்க நிதி உதவி செய்வதாக அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் சிறந்த தமிழின உணர்வு, மொழி உணர்வுமிக்க சீரிய தொண்டறச் செம்மல்களான பிரபல இதயநோய் மருத்துவர் டாக்டர்வி.ஜானகிராமன், பிரபல புற்றுநோய் மருத்துவரான டாக்டர் எஸ்.திருஞானசம்பந்தம் ஆகியோர் இதனை உருவாக்கி, அவர்களே பெருந்தொகைகளை தமது வருவாயிலிருந்து கொடுத்ததோடு, மற்றவர்களுக்கும், தமிழக அரசுக்கும் வேண்டுகோள் விடுத்தனர்!

ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கைக்கு தமிழக அரசு நிதி உதவி

தமிழக முதல்வராக செல்வி ஜெயலலிதா அவர்கள் உயிருடன் இருந்தபோது நாமும் தமிழக அரசே தமிழ் இருக்கைக்காக அதன் கெடுவுக்குள் செயல்வடிவம் பெற தனது முழு நிதி உதவி, ஒத்துழைப்பைத் தர வேண்டும் என்று அறிக்கை, கடிதம் வாயிலாகத் தெரிவித்திருந்த நிலையில், அவர் நோய்வாய்ப்பட்டார்!

அவரது மறைவுக்குப்பின்னர் தற்போது உள்ள அ.தி.மு.க. அரசும், முதல்வரும், தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சர் மா.பாண்டியராசன் அவர்களும் முயற்சி எடுத்து, அவ்விருக்கைக்குத் தேவையான 10 கோடி ரூபாயை அளிக்க முன்வந்தது மிகவும் வரவேற்றுப் பாராட்டப்படவேண்டிய முடிவாகும்! செம்மொழி தமிழின் சீரிளமை உலகளாவிய பயனை ஏற்படுத்துவதற்கு இது ஒரு சிறந்த வழிமுறையாகும்.

செம்மொழிக்குக் கலைஞர் செய்த உதவி

அதுபோலவே, முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர் கள் முதலமைச்சராக இருந்தபோதும், மத்திய அரசை வற்புறுத்தி, தமிழுக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றுத் தந்ததோடு, மைசூரில் இருந்த செம்மொழி நிறுவனத்தை சென்னைக்கு வரவழைத்து, மேலும் சிறப்புடன் நடத்தி, அவரது சொந்த பணம் பல கோடி ரூபாய் செலவில் விருதுகள் தருவதற்கு வகை செய்தார். மத்திய ஆட்சி மாறிய நிலையில், அவ்வமைப்பை வெகு சாதாரணமாக்கி, திருவாரூர் மத்தியப் பல்கலைக் கழகத்தின் ஓர் அங்கமாக மாற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதை தமிழக அரசு முழு மூச்சுடன் தடுத்து நிறுத்திட முன்வரவேண்டும்.

இதில் அரசியல் கண்ணோட்டம் பாராது தமிழ் - எம்மொழி செம்மொழி என்ற உணர்வுக் கண் ணோட்டம் மட்டுமே இருக்கவேண்டும்.

கீழடி ஆய்வினையும் உடனே தொடருக!

அதுபோலவே, கீழடி ஆய்வினை தமிழக அரசே மேற்கொள்ளும் என்று அமைச்சர் மா.பாண்டியராசன், தமிழக அரசு சார்பில் கூறியதும் வரவேற்கத்தக்கதுதான்!

ஆனால், அடுத்த கட்ட தொடர் நடவடிக்கைக்கு - அதற்குரிய ஆய்வாளர்களை அழைத்து ஒரு அரிய ஆலோசனைக் கூட்டம் நடத்தி, முனைப்புடன் அதனைச் செய்திடவேண்டும். திராவிடர்களின் சிந்து வெளி நாகரிகம் எத்தகைய பழைமையான உலக வரலாற்றுக்கும் முன்னோடிச் சாதனை என்பதை உணர்த்தும் மிகப்பெரிய ஆய்வாக  அது அமையும்.

வரலாறு காவிரியிலிருந்து தொடரட்டும்!

இந்திய வரலாறு கங்கைக்கரையிலிருந்து எழுதப் படும் எனும் நிலைமை மாறி, காவிரிக்கரையிலிருந்தே - தெற்கே இருந்து தொடங்கப்படவேண்டும் என்று மனோன்மணியம் பேராசிரியர் சுந்தரம் (பிள்ளை) அவர்களும், அறிஞர் அண்ணா அவர்களும் கூறியதை மனதில் கொண்டு இவ்வாட்சி செயல்பட்டு, கீழடி ஆய்வைத் தொடருவது ஒரு புதிய செயல்வடிவம் தருவதாக ஆகும்.

‘உதவாதினி தாமதம்‘ உடன் செயல்படுக!

செய்ததற்குப் பாராட்டு - மற்றதில் மாறுபட்ட கருத்து இருப்பினும்கூட!

 

கி வீரமணி
தலைவர்,         திராவிடர் கழகம்.

சென்னை
28.10.2017

செய்ததற்குப் பாராட்டு - மற்றதில் மாறுபட்ட கருத்து இருப்பினும்கூட!

 

 

 

 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner