எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மத விஷயங்களில், பூசை முறைகளில் தலையிடலாம் என்று

உஜ்ஜயினி சிவன் கோவில் வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு!

தீர்ப்பின் அடிப்படையில், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் நியமனத்தை

தமிழ்நாடு அரசு உடனடியாக செயல்படுத்தவேண்டும்

தவறினால் தொடர் போராட்டம் தவிர்க்கப்பட முடியாதது!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள மனித உரிமை அறிக்கை

வரலாறு கங்கையிலிருந்தல்ல - காவிரியிலிருந்து தொடங்கப்படவேண்டும்!  -கி . வீரமணி

உஜ்ஜயினி கோவில் பூஜை தொடர் பான வழக்கில் உச்சநீதிமன்றம், பூஜை முறையில் அரசு தலையிடலாம் என்ற தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து ஜாதி யினருக்கும் அர்ச்சகர்  உரிமை வழங்கும் சட்டத்தைத் தமிழ்நாடு அரசு செயல்படுத்த வேண்டும். தவறினால், நவம்பர் 26 ஆம் தேதி சென்னை பெரியார் திடலில் நடக்க விருக்கும் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான மாபெரும் மாநாட் டில் தொடர் போராட்டம் அறிவிக்கப்படும்  என்று   திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:

29.10.2017 அன்று ‘தினமலரில்’ வெளிவந்துள்ள  (சென்னைப் பதிப்பு) செய்தி என்ன கூறுகிறது? (தனி செய்தி காண்க).

கோவிலுக்குள் நடத்தப்படும் பூஜையில் மாற்றங்கள் ஏற்படுத்தினால், அது ‘‘மத விஷயங்களில் தலையீடு’’ என்று சொல்ல முடியாது.

அனைத்து ஜாதியினருக்கும் உரிமைக்கான சட்டங்கள்

மதச் சுதந்திர உரிமைகளை அடிப்படை உரிமையாக, இந்திய அரசியல் சட்டத்தின் 25, 26 ஆவது பிரிவுகள் பாதுகாக்கின்றன; எனவே, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சீர்திருத்த சட்டம் - தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியில் 1970 ஆம் ஆண்டில் கொண்டு வந்த சமூக சீர்திருத்தச் சட்டம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி, சிறீபெரும்புதூர் ஜீயரும், மற்ற அர்ச்சகர் அமைப்புகளும், காஞ்சி சங்கராச்சாரியாரும் உச்சநீதிமன்றத்தில் 1972 இல் போட்ட (‘‘சேஷம்மாள் வழக்கு’’) வழக்கில், தி.மு.க. ஆட் சியின் சட்டம் செல்லும், ஆனால், பூசை செய்பவர்கள் அந்தந்த ஆகம விதிகளின்படிதான் பூசை செய்ய வேண்டும் என்பதால், ஆகமம் படிக்காத நாத்திகர் களையோ, மற்ற மதத்தவர்களையோகூட தி.மு.க. ஆட்சி அர்ச்சகர்களாக நியமித்து விடுவார்களோ என்ற அச்சம் உள்ளது என்ற வாதிகளின் பயம் தேவையற்றது. அப்படி இருந்தால், மீண்டும் இங்கே வந்து சட்டப் பரிகாரம் தேடலாம் என்று கூறினர். இது அச்சட்டத்தை முடக்கியதாகவே கருதப்பட்டு விட்டது.

எனவே, மீண்டும் தி.மு.க. ஆட்சியில் முதல்வராகக் கலைஞர் அவர்கள் பொறுப்பேற்று, 2006 இல் அதற் கென்று தனி ஆணையத்தை (கமிஷன்) ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டீஸ் திரு.ஏ.கே.ராஜன் அவர்கள் தலைமையில், அர்ச்சகர்கள், மதத் தலைவர் களைக் கொண்ட குழுவின் பரிந்துரையின்படி (ஏற் கெனவே முந்தைய அ.தி.மு.க அரசுகளில் ஜஸ்டீஸ் திரு.மகராஜன், ஜஸ்டீஸ் திரு.கிருஷ்ணசாமி ரெட்டியார் குழுவின் பல்வேறு விளக்கங்களை பரிந்துரைகளாக அளித்ததையும் தாண்டி) தனித்தனி ஆகமப் பள்ளிகளை, 69 சதவிகித சட்ட அடிப்படையில் நியமித்து, அர்ச்சகர் களாக அனைத்து ஜாதியிலிருந்தும் தேர்வு செய்து பயிற்சி அளித்தது தமிழக அரசு; 207 பேர்கள் அத்தகுதியைப் பெற்ற நிலையில், மீண்டும் மீனாட்சி அம்மன் கோவில் அர்ச்சகர்களும் மற்றும் சில பார்ப்பன அமைப்புகளும் இதனை எதிர்த்துத் தடையாணை வாங்கி, 9 ஆண்டுகள் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடத் திய பிறகு, 2016 இல் வந்த தீர்ப்பு, தமிழக (தி.மு.க.) அரசின் அர்ச்சகர் நியமனச் சட்டம் செல்லும், அனைத்து ஜாதியிலிருந்தும் அர்ச்சகர்களை நியமனம் செய்வதற்கு எத்தடையும் இல்லை; அப்படி அதனால் பாதிக்கப்பட்ட வர்கள் என்று யாராவது கருதினால், அவர்கள் தனித்தனியே சட்டப் பரிகாரம் தேடிக் கொள்ளலாம் என்று இரு நீதிபதிகள் அமர்வு தீர்ப்பு கொடுத்தும், அதைப் பார்ப்பனர்களும், சில ஊடகங்களும் திட்ட மிட்டே குழப்பி, இன்னும் செயல்பட விடாமல், தமிழக அரசினை மிரட்டித் தடுத்து வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு செயல்படுத்தாதது வேதனையளிக்கிறது

தமிழ்நாட்டில் உள்ள அரசு ஏற்கெனவே தமிழக சட்டமன்றத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய இரு முதல்வர்களும் கொடுத்த வாக்குறுதியை செயல் படுத்தாமல் இருப்பது வேதனையானதே!

அண்டை மாநிலமான கேரளாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியில், தாழ்த்தப்பட்டவர்களை அர்ச்சகர்களாக நியமித்து, பெரும் புகழ்பெற்று மனித உரிமையில் சரித்திரம் படைத்துவிட்டனர்! தமிழ்நாட்டில் ‘தூங்கிய முயல் கதை’ நடக்கிறது.

மேலே காட்டிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு தேவைப் பட்டால் பூசை செய்யும் முறையையே கூட மாற்றி அமைக்கலாம் என்ற புதிய வெளிச்சத்தை - வழிமுறை யைக் கூறிவிட்டது.

மத விஷயங்களில்

தாராளமாகத் தலையிடலாம்

இது மத விஷயங்களில், கோவில் நிர்வாகத்தில், , ‘‘to manage its own affairs in matters of religion’’
என்ற உரிமைக்கு முரணானது - மாற்றவே முடியாது; மாற்றக் கூடாது என்று கூற முடியாது என்பதை உஜ்ஜயினி லிங்க வழிபாடு பூஜை முறை மாற்றம் - தெளிவாக நிலைநாட்டி விட்டது!

இந்த 25, 26 மத விஷயங்கள்பற்றிய சட்டப் பிரிவுகள் கூட  ‘‘Subject to (a) Public order (b) morality (c) health (d) other provisions of this Part’’ என்ற நிபந்தனை களோடுதான் உள்ளன.

ஒரே ஒரு வேறுபாடு; 26 ஆவது பிரிவில் முதல் மூன்று மட்டுமே உள்ளது என்பதே!

தமிழ்நாட்டு ஊடகங்கள் குழப்பவேண்டாம்!

எனவே, இனிமேலும் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களோ, ஊடகங்களோ தமிழ்நாட்டு அரசை மிரட்டவோ, குழப்பவோ முன்வரக்கூடாது.

மனித உரிமைகளில் தலையாயது மட்டுமல்ல, 17 ஆம் விதியான தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது; அதனை எந்த ரூபத்தில் அனுசரித்தாலும் அது குற்றமே!  என்ற பிரிவின்படி தீண்டாமை ஒழிப்புக்கு இது மிகமிக இன்றியமையாத நடவடிக்கையாகும்!

எனவே, இனிமேலும் ஆகமப் பூச்சாண்டிகளையோ அல்லது தலையீடு  மிரட்டல்களையோ காட்டாமல் உடனடியாக கேரளாவைப் போல் அர்ச்சகர் நியமனம் நடத்தப்படவேண்டும்.

தமிழக அரசும், இந்து அறநிலையத் துறையும் உட னடியாக இதன்மீது நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

நவம்பர் 26 மாநாடும் - தொடர் போராட்டமும்!

இன்றேல், நவம்பர் 26 ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கும் அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆக்கும் முயற்சிக்கான மாபெரும் மாநாட்டில் அறப்போராட்ட அறிவிப்புகள் தவிர்க்க இயலாததாகி விடும். அறிவிக்கப்படும் போராட்டம் தொடர் போராட்ட மாகவும் மாறிடும்!

தந்தை பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை நீக்கும்வரை ஓயமாட்டோம்! ஓயமாட்டோம்!!

இந்த உறுதி அறிவிப்பு நாள்தான் நவம்பர் 26 ஆம் தேதி - ஜாதி ஒழிப்புக்காக அரசியல் சட்டத் தாளைக் கொளுத்தி 3000 பேர் சிறையில் ஆறு மாதம்முதல் மூன்று ஆண்டுகள் வரை தண்டனை பெற்றனர். 18 பேர் சிறையின் உள்ளும், வெளியும் உயிர்த் தியாகம் செய்த போராட்டத்தின் 60 ஆம் ஆண்டு நிறைவு நாள்!

எனவே, அந்நாளில் நடைபெறும் அம்மாநாடு வெறும் பேச்சுக்கான மாநாடாக இருக்காது!

 

கி. வீரமணி
தலைவர்,  திராவிடர் கழகம்.


சென்னை
30.10.2017

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner