எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வரலாற்றைப் புரட்டி எழுதுவது என்பது பி.ஜே.பி. - சங் பரிவாரின் வாடிக்கையே!

காந்தியார் படுகொலை வழக்கை

மறு ஆய்வு செய்ய நீதிமன்றத்தில் கோருவதா?

எதிர்ப்புகளும் - கண்டனங்களும் வெடிக்கட்டும்! வெடிக்கட்டும்!!

தமிழர் தலைவர்  ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் நியமனத்தை  தமிழ்நாடு அரசு உடனடியாக செயல்படுத்தவேண்டும்

காந்தியார் படுகொலை நடந்து, அதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டு கிட்டத்தட்ட 70 ஆண்டுகள் ஓடிய நிலையில், காந்தி யாரை சுட்டுக்கொன்றது நாதுராம் கோட்சே  அல்ல என்று உச்சநீதிமன்றத்தில் வழக் குத் தொடுத்திருப்பது - வழக்கமாக சங் பரிவார்கள் வரலாற்றைப் புரட்டும் நடவடிக் கையே! இந்த வழக்கைத் தொடக்க நிலையிலேயே உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திட வேண்டாமா?  என்று   திராவிடர் கழகத் தலைவர், ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

வரலாற்றைக் காவிமயமாக்குவதுடன், பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவாரங்களின் முயற்சி வரலாறு களையும் புரட்டிப் போட்டு, கற்பனைகளையெல்லாம் புகுத்தி, தங்களின் இந்துத்துவப் பிரச்சாரத்திற்கு வலிமை சேர்க்க எண்ணுகின்றனர்.

ஏற்கெனவே பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றைத் தலைகீழாக்கிடவும், பழைய புரா ணங்களை வரலாறுகளாகவும், அறிவியல் முன்னோட்ட மாகவும் புதுப்புதுப் புனைவுகளை உருவாக்குகிறார்கள்.

மொகஞ்சதாரோ, அரப்பா நாகரிகத்திலும் திரிபு வேலை!

1. மொகஞ்சதாரோ, அரப்பாவின் மிகப்பெரிய சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்பதை, தலைகீழாக்கிட, காளை மாட்டுச் சின்னத்தை, குதிரைச் சின்னமாக மாற்றிட பிரபல அமெரிக்கப் பேராசிரியர்கள் சிலரையும் உடந்தையாக்கியது அம்பலப்படுத்தப்பட்டது. (இது வாஜ்பேயி பிரதமராக இருந்த நிலையில், அவரது அமைச்சரவையில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த முரளிமனோகர் ஜோஷி என்ற பார்ப்பனரின் கைங்கர்யம்).

புரட்டு கண்டுபிடிக்கப்பட்டு, ‘‘Front Line’’ (Hindu group magazine) ஏட்டில் தக்க ஆதாரங்களுடன் வெளியானது. ‘உப்புக்கண்டம் பறிகொடுத்த பழைய பாப்பாத்தி நிலை’க்குத் தள்ளப்பட்டார்கள்!

2. பாபர் மசூதி இடிப்புக்குப்பின் தாஜ்மகால் சிவன் கோவில் நிலம் என்றும், இது இந்துக்களுக்கு அவமான சின்னம் என்றும் கூறி, வரலாற்றில் காவிச் சாயம் ஏற்றுகின்றனர்! ஏமாற்றுகின்றனர்!!

அந்த வரிசையில் ஒரு புதிய முயற்சியை - வெகு நேர்த்தியாக - புதிய உத்தியைக் கையாண்டு செய்யத் தொடங்கியுள்ளது ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார் அமைப்புக் குழு.

நீதிமன்றங்களைப்

பயன்படுத்திக் கொள்ளும் போக்கு!

உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்குபோல் சில வழக்குகளைத் தாக்கல் செய்து, அதன்மூலம் சில ஆணைகளையோ, தீர்ப்புகளையோ பெற்று, ஏதோ பா.ஜ.க. ஆட்சி (மோடி ஆட்சி) இப்படி செய்யவில்லை; உச்சநீதிமன்ற ஆணைப்படிதான் செய்கிறோம் என்று நீதித் துறையை ஒரு வாய்ப்பாகவோ, சாக்காகவோ பயன்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளன!

அதன் பின்னணியும், தைரியமும் என்னவென்றே மக்களுக்கு விளங்கவில்லை. உச்சநீதிமன்ற நீதிபதி களுக்கு இதை கவனத்தில் கொள்ளவேண்டிய மகத்தான பொறுப்பும், கடமையும் உண்டு.

முன்பு உச்சநீதிமன்ற நீதிபதி ஜே.எஸ்.வர்மா ஏதோ ஒரு தீர்ப்பில் ‘‘இந்துத்துவா ஒரு வாழ்க்கை நெறி’’ என்று கூறிவிட்டார் என்று எடுத்துக்காட்டி குதியாட்டம் போட்டு வருகிறதே ஆர்.எஸ்.எஸ். பரிவாரங்கள்.

தலைமை நீதிபதியாகி ஓய்வு பெற்ற அதே நீதிபதி, ‘‘நான் சொன்னது வேறு பொருளில். ஆனால், இவர்கள் பயன்படுத்துவது வேறு கோணத்தில்’’ என்று மறுப்புச் சொன்னார் - அவர் மறைவதற்கு சில ஆண்டுகள் முன்பு!

காந்தியாரைக் கொன்றது

கோட்சேயின் குண்டு இல்லையாம்!

இப்போது திடீரென்று ஆய்வு அமைப்பு என்று சொல்லிக் கொள்ளும் ஆர்.எஸ்.எஸ். முகமூடி போன்ற ஓர் அமைப்பான ‘அபிநவ பாரத்’, ‘‘காந்தி கொலை வழக்கை மறுவிசாரணை செய்யவேண்டும்; கோட்சே சுட்டது 3 குண்டுகள்; ஆனால், 4 ஆவது குண்டில்தான் காந்தி இறப்பு ஏற்பட்டது’’ என்று ‘புதிய குண்டு’(!) ஒன்றை  அவிழ்த்து விட்டுள்ளது! வழக்கு விசாரணைக்கே உகந்ததல்ல என்று (Prima Facie) தள்ளுபடி ஆகி யிருக்கவேண்டும். ஆனால், இதுபற்றி எடுத்துக் கொள்வதா? இல்லையா? என்று இன்னும் முடிவாக வில்லை என்று கூறுகின்றது உச்சநீதிமன்றம்.

தள்ளுபடி செய்திருக்கவேண்டும்!

இதன் பின்னணியில் உள்ள மனுதாரரின் நோக்கத் தினை புரிந்துகொண்ட காரணத்தினால், காந்தி கொலை வழக்கை திசை திருப்பப் பார்க்கும் இம்முயற்சியைப் புரிந்துகொண்டு, உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டமாக அதனை மறுத்து, மீண்டும் விசாரிப்பது கூடவே கூடாது என்று காந்தியின் கொள்ளுப்பேரனான துஷார் காந்தி  கூறியுள்ளார்.

காந்தியார் கொலை வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த பஞ்சாப் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ஜி.டி.கோஸ்லே அவர்கள், 1963 இல் ஒரு நூலை Murder of the Mahatma -  ‘‘மகாத்மாவின் கொலை’’ என்று எழுதி, அது 1977 ஆம் ஆண்டு வரையிலேயே மூன்று பதிப்புகள் விற்பனையாகி இருந்தது!

அதில் அவர் கூறியுள்ள பல துல்லியமான செய்தி களில்,

‘‘உயர்நீதிமன்றத்தில் 1949 ஆம் ஆண்டு மே 2 ஆம் நாள் மேல்முறையீட்டின் மீதான விசாரணை தொடங் கியது. தனக்காக வழக்குரைஞர் வாதாடுவதை நாதுராம் கோட்சே ஏற்றுக்கொள்ளவில்லை. தனக்காக, தானே வாதாடுவதற்கு அனுமதிக்குமாறு நாதுராம் கோட்சே கேட்டுக்கொண்ட கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது.

‘‘May it please your honour’’ என்ற தலைப்பில், கோட்சே எழுத்துப்பூர்வமாக நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலம் தனிப் புத்தகமாக அவரது தம்பி கோபால் கோட்சேயினால்கூட வெளிவந்துள்ளது.

நீதிமன்றத்தில் கோட்சேயின் ஒப்புதல் வாக்குமூலம்!

அதில் அவரே தனது ஒப்புதல் வாக்குமூலமாக கூறிய கருத்துகளுள் சில இதோ:

1. முஸ்லிம்களுக்கு இணக்கமாக காந்தியார் பேசிய தையும், ஜின்னாவின் கோரிக்கைகளுக்கு காந்தியார் இணங்கிப் போவதையும் கோட்சே கடுமையாக எதிர்த்தார்.

2. Godse had made a study of Bhagavad Gita and
knew most of its verses by heart. He liked to quote
them to justify acts of violence in pursuing a righteous
cause.
(The Murder of Mahatma, page 274)

‘‘கோட்சே பகவத் கீதையைப் படித்திருந்தார்; அதன் பெரும்பாலான சுலோகங்களை மனப்பாடமாக அறிந் திருந்தார். நல்ல குறிக்கோளை அடைவதற்காகச் செய் யப்படுகின்ற வன்முறைச் செயல்களை நியாயப்படுத் துவதற்காக அவற்றை மேற்கோளாகக் காட்டுவதில் அவர் விருப்பம் கொண்டார்.

பல மணிநேரம் அவரே நீதிமன்றத்தில் பேசினார் - வாதாடினார்’’ என்று அந்நூலில் கூறப்பட்டுள்ளது.

இதற்குப் பிறகு - இப்போது திடீரென்று இப்படி ஒரு புது திடீர் திசைத் திருப்பல் முயற்சியின் உள்நோக்கம் புரிகிறதா?

‘‘மே நாதுராம் கோட்சே போல்தே!’’

காங்கிரசு ஆட்சியின்போதே - கோட்சேயை சிலா கித்து மும்பையில் ‘‘மே நாதுராம் கோட்சே போல்தே!’’ நாடகம் - (நாம் கண்டனங்களை அப்போதே எழுப்பியுள் ளோம்) ஆர்.எஸ்.எஸ்.காரர்களால் நடத்தப்பட்டது.

சித்பவன் பிரிவினைச் சேர்ந்த, மராத்திப் பார்ப் பனரான நாதுராம் விநாயக் கோட்சேவுக்கு இப்போது கோவில் கட்டப் போகிறோம் என்று உ.பி.யின் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினரே  முயன்ற செய்தி சில மாதங்களுக்குமுன் வெளிவந்ததும், இதே பின்னணி யில்தானே!

எனவே, முற்போக்காளர்கள் அனைவரும் முன்வந்து இதுபோன்ற வரலாற்றைப் புரட்டிப் போடும் திசை திருப்பல் முயற்சிகளுக்குத் தங்களது வன்மையான கண்டனங்களை நாடு தழுவிய அளவில் எழுப்பிட முன்வரவேண்டும்.

உண்மைகள் போர்க் காலங்களின்போது களபலி யாகும் என்று சொல்வார்கள்; இப்போது நடக்கும் ‘‘தேவ - அசுர’’ யுத்தத்தில் உண்மைகளை தலைகீழாகச் செய்யும் முயற்சிகள் தொடர்கின்றன. இவை தடுத்து நிறுத்திடப்பட வேண்டும். கண்டனங்கள் பெருகட்டும்! பெருகட்டும்!!

 

கி. வீரமணி
தலைவர்,  திராவிடர் கழகம்.

 

சென்னை 
31.10.2017

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner