எழுத்துரு அளவு Larger Font Smaller Font

படிப்பறிவில்லா மக்களுக்கும் எழுத்தறிவித்த "தினத்தந்தி!"

தந்தை பெரியாரால் பாராட்டப்பட்ட சாதனைத் தமிழர் சி.பா. ஆதித்தனார்

பவள விழா காணும் "தினத்தந்தி" நூற்றாண்டையும் தாண்டி சிறக்கட்டும்!

விடுதலை ஆசிரியர், திராவிடர் கழகத் தலைவர் பாராட்டு - வாழ்த்து!

வரலாறு கங்கையிலிருந்தல்ல - காவிரியிலிருந்து தொடங்கப்படவேண்டும்!  -கி . வீரமணி

75ஆம் ஆண்டு பவள விழாவில் அடி எடுத்து வைக்கும் நாளேடான "தினத்தந்தி" - "விடுதலை"யின் பக்கத்து வீட்டுக்கார உறவுக்குரியது; ஒரு தமிழனால் சிறப்பாக ஒரு நாளேட்டை நடத்திக் காட்ட முடியும் என்று சாதித்துக் காட்டிய சாதனையாளர் சி.பா. ஆதித்தனார் என்று தந்தை பெரியார் அவர்களால் பாராட்டப்பட்ட பவள விழா காணும் தினத்தந்திக்கு பாராட்டையும், வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார் 'விடுதலை' ஆசிரியர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள். அறிக்கை வருமாறு:

ஒரு தமிழ் நாளேடு, பத்திரிக்கை உலகில் பல மவுனப் புரட்சிகளை உருவாக்கியது.

1. அதிகப் படிப்பறிவில்லாத ஏழை, எளிய, மக்களும்கூட எழுத்துக் கூட்டியாவது திக்கித் திணறி, அதன் கொட்டை எழுத்துத் தலைப்புகளைப் பார்த்து, மெல்ல மெல்ல ஆனால் தொடர்ச்சியாக அந்த நாளேட்டை நாளும் படித்து பல்வேறு நாட்டு நடப்புகளை அறியும்படிச் செய்தது.

2. தமிழ் நாளேடு, அதிகமான எண்ணிக்கையில் வாங்கிப் படிக்கும் வண்ணம் பல அரிய சாதனையைச் செய்தது.

அதிகாரி முதல் தொழிலாளி வரை... படிக்கும் ஏடு!

3. இவை எல்லாவற்றிற்கும் மேலாக தமிழர்களால் இப்படிப்பட்ட நாளேடுகளை திறம்பட நடத்தி வெற்றி பெற வைக்க முடியாது என்று இருந்த சமூக அநீதியை மாற்றி, - பல்வேறு உத்திகளைக் கையாண்டு - காலையில் எழுந்தவுடன் "கண் தேடுதே, மனம் நாடுதே" என்று உயர் நிலையில் உள்ள அரசு அதிகாரத்தவர் தொடங்கி, எளிய வாழ்வின் 'உழைப்புத் தேனீ'க்களான என்னரும் சகோதரராம் துப்புரவுத் தொழிலாளி வரை படித்து விவாதிக்கும் அளவுக்கு தேநீர்க் கடைகளில், முடி திருத்தகங்களில் "படையெடுத்து" அந்த சாம்ராஜ்யத்தை வெற்றி கண்ட நாளேடு!

பவள விழா காணும் "தினத்தந்தி"

இவ்வளவு சாதனைகளுக்கும் உரியது - நாளேட்டு உலகில் பெருமிதத்தோடு பீடு நடைபோடும் ஏடுதான், நமது சகோதர ஏடு என்பதை விட நமது 'பக்கத்து வீட்டு சகோதர ஏடு' என்று நாம் பெருமையுடனும், பாசத்துடனும் வாழ்த்தும் அந்நாளேடு, பவள விழா  (6.11.2017) காணும் "தினத்தந்தி" நாளேடு ஆகும்.

தந்தை பெரியார் பாராட்டு

நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் "தினத்தந்தி"யை, இவ்வளவு தூரம் வெற்றிகரமாக நடத்திய பெரு முயற்சியைக் கண்ட தமிழ்க் குல ஏட்டுலகச் சாதனைத் தகைமையாளர் சி.பா. ஆதித்தனாரின் இந்த சாதனைக்காக எப்படிப் பாராட்டினார் தெரியுமா? "பத்திரிக்கைத் துறையில் செயற்கரிய செய்த பெரியார்" என்றே குறிப்பிட்டதைவிட, "தினத்தந்தி"க்கு அதன் 75ஆம் பவள விழா ஆண்டில் வேறு என்ன வாழ்த்து, "விருது"  தேவை?

காரணம் தந்தை பெரியார் கூறுகிறார்: "பத்திரிக்கை உலகம் பெரிதும் பார்ப்பனர்களிடமே ஏகபோகமாக இருந்ததை, தமிழர் ஒருவர் மாற்றி சாதனை புரிந்தார் என்றால் அப்பெருமையும், புகழும் ஆதித்தனாரையே சாரும்" என்றார்.

மேலும் தந்தை பெரியார் சொன்னார்: "அதன் கொள்கை, பிரசுரம் இவைகளுக்கும் நமக்கும் எவ்வளவோ கருத்து மாறுபாடு, இருப்பினும் தமிழர் ஒருவரால் தமிழின உணர்வோடு நடத்தி வெற்றியைப் பெற்ற ஏடு என்பதே நமக்குப் போதும்!" என்றாரே!

ஆதித்தனார் மறைவிற்குப் பிறகும்....

அது நூற்றாண்டுகளையும் கடந்து வெற்றிகரமாக நடக்கும் என்பதில் துளியும் அய்யமில்லை.

ஆதித்தனார் சாதனையை அவரது ஆற்றல்மிகு மைந்தர் டாக்டர் சிவந்தி ஆதித்தன் அவர்கள் பெருக்கினார்.

அவருக்குப் பின் இப்போது அவரது  மகனார்

திரு. பாலசுப்ரமணிய ஆதித்தன், அவரது வழித்தோன்றல் திரு. சிவந்தி ஆதித்தன் (2) அப்பணியைத் தொய்வின்றி மேலும் வலிவும், பொலிவும் தருகின்ற வகைகளில் தொடர்கின்றனர்.

அஸ்திவாரமும் அடிக்கட்டுமானமும் முக்கியம்தான்.

ஆனால்  அதற்கு மேல் பல அடுக்குகளை அடுக்கி உருவாக்கிப் பராமரித்து, பாருலகம் முழுவதும் அதனைப் பரப்பும் அதன் விழுதுகளின் பணி, வேரையும் காப்பாற்றி ஊரையும் காப்பாற்றும் உயர் தனித் தொண்டு என்றே கூற வேண்டும்.

வாழ்க தினத்தந்தி!

'விடுதலை'க்கும் 'தினத்தந்தி'க்கும் உள்ள உறவு பக்கத்து வீட்டு உறவு என்பதைவிட, தமிழின உணர்வு உறவும் பலமானது;  எது எங்களைப் பிரிக்கிறது என்பது முக்கியமல்ல; எது எங்களை இணைக்கிறது என்பதே முக்கியம்!

முதன் முதலில் சிங்கப்பூரிலிருந்து தமிழகம் வந்து பத்திரிக்கை தொடங்க, முதல் வாழ்த்தை சாதனையாளர்

சி.பா. ஆதித்தனார் தந்தை பெரியாரிடம் தான் திருக்கழுக்குன்றம் மாநாட்டிற்கு நேரில் சென்று பெற்றார் என்பது மறக்க முடியாத வரலாறு.

'தினத்தந்தி' குடும்பத்தினர்க்கு - ஆசிரியர் மற்றும் பெருக்கும் விற்பனையாளர் உட்பட நமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்.

வாழ்க "தினத்தந்தி"

வளர்க அதன் சாதனைகள்!

 

ஆசிரியர், 'விடுதலை'

தலைவர், திராவிடர் கழகம்

சென்னை 
2-11-2017

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner