எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இமாசலப்பிரதேசத்தில் மோடி மேஜிக் எடுபடாது

காங். தலைவர் சச்சின் பைலட்

சிம்லா, நவ.4 இமாசலப்பிரதேசம் மாநிலத்தின் சட்டசபை தேர்தல் வரும் 9-ஆம் தேதி நடைபெறுகிறது. பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

பா.ஜ.க. சார்பில் பிரதமர் மோடி, தேசிய தலைவர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களும், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இமாசலப்பிரதேசம் மாநில காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இமாசலப்பிரதேசம் மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் மோடி மேஜிக் எடுபடாது. மோடியை முன்னிறுத்தி பா.ஜ..க. தேர்தலை சந்திக்கிறது. அவரது உத்தரவால் தான் முன்னாள் முதல் அமைச்சர் பிரேம்குமார் துமால் முதல் அமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். ஏற்கெனவே கடந்த 2012இல் முதல் அமைச்சர் வேட்பாளரான பிரேம்குமார் துமால் தலைமையில் பா.ஜ.க. தோல்வி அடைந்துள்ளது.

மோடி தலைமையிலான மத்திய அரசு மக்களை கடுமையாக வஞ்சித்து வருகிறது. பணம் மதிப்பிழப்பு மற்றும் ஜி.எஸ்.டி. வரியால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். பா.ஜ.க. தனது அரசியல் எதிரிகளை பழிவாங்க சி.பி.அய்., அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களை பயன்படுத்தி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நாட்களை குறைக்க திட்டம் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

புதுடில்லி, நவ.4 இந்த மாத இறுதியில் தொடங்க இருக்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் நாட்களை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு திரிணாமுல் காங்கிரசு, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் வழக்கமாக நவம்பர் மத்தியில் தொடங்கும். டிசம்பர் 3 ஆவது வாரம் வரை சுமார் ஒரு மாத காலம் நடைபெறும். இந்நிலையில் குஜராத் சட்டமன்ற தேர்தல் டிசம்பர் 9 மற்றும் 14 தேதிகளில் 2 கட்டமாக நடைபெறுகிறது. எம்பிக்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு வசதியாக இந்த கூட்டத் தொடரின் நாட்களை குறைக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

எனவே நவம்பர் இறுதியில் குளிர்கால கூட்டத் தொடரை தொடங்கி ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் மட்டும் தொடரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டிருப்பதாக மக்களவை செயலக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மத்திய அரசின் திட்டத்துக்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது குறித்து திரிணாமுல் காங்கிரசு கட்சி எம்பி டெரக் ஓ பிரைன் கூறுகையில், குளிர் கால கூட்டத்தொடர் தேதியை இன்னமும் ஏன் மத்திய அரசு அறிவிக்கவில்லை. கூட்டத் தொடர் நாட்களை குறைப்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா கூறுகையில், ஒரு ஆண்டில் 100 நாட்கள்கூட நாடாளுமன்றம் கூடுவதில்லை. குளிர்கால கூட்டத் தொடர் நடைபெறும் நாட்களை குறைப்பது சரியாக இருக்காது என்றார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner