எழுத்துரு அளவு Larger Font Smaller Font

'நீட்' தேர்வு: மத்திய அரசுக்கு மாநில அரசு

அழுத்தம் கொடுக்காததற்குக் காரணம் - மடியில் கனமே!

புதுச்சேரியில் தமிழர் தலைவர் பேட்டி

புதுச்சேரி, நவ.6 'நீட்' தொடர்பாக தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் குறித்து மாநில அரசு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காதது ஏன் என்பது குறித்து புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் பேட்டியளித்தார்.

புதுவைக்கு நேற்று (5.11.2017) நீட் எதிர்ப்பு விளக்கக் கருத்தரங்கத்தில் பங்கேற்க சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:

செய்தியாளர்: நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்து கருத்தரங்கம், போராட்டங்கள் எல்லாம் நடத்தினீர்கள்; இதுவரையில் தமிழக அரசு எந்தவிதமான நடவடிக் கையையும் எடுக்கவில்லை. எந்த மாதிரியான அழுத்தத்தை மத்திய அரசுக்குக் கொடுக்கவேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: தமிழக அரசு எல்லாவற்றையும் மேலே இருக்கிறவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறது. தமிழக அரசு இரட்டை நிலைப்பாட்டை எடுக்கிறார்கள். ஒரு பக்கம் நீட்டை நாங்கள் எதிர்க்கிறோம் என்று சொல்கிறார்கள். கடந்த ஆண்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய இரண்டு மசோதாக்கள் என்னாயிற்று? என்று மத்திய அரசிடம் கேட்பதற்குக்கூட இவர்கள் தயாராக இல்லை. நாளை தமிழகத்திற்குப் பிரதமர் வருகிறார்; அவரிடம் எத்தனையோ விஷயங்களை சொல்லலாம். ஆனால், அவர்கள் சொல்வதற்குத் தயாராக இல்லை. காரணம் என்னவென்றால், அவர் களுடைய கட்சிப் பிரச்சினையையே பெரிதாக நினைக்கிறார்களே தவிர, மக்கள் பிரச்சினைகளை அவர்கள் உதாசீனப்படுத்துகிறார்கள்.

எனவேதான், மீண்டும் மீண்டும் ஒத்த கருத்துள்ள அனைவரையும் ஒன்றிணைத்து இந்தப் பணியை நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம். ஏற்கெனவே செய்ததுபோன்று. வீதிமன்றப் போராட்டம் மட்டுமல்ல; நீதிமன்றத் சட்டப் போராட்டம் - நீதித் துறையில் உள்ளவர்களுக்கு இதைப்பற்றி வலிமையாக சொல்லக்கூடிய அந்த வாய்ப்பைப் பெற்றிருக்கிறோம்.

செய்தியாளர்: தமிழக அரசு இந்தப் பிரச்சினையில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்காததற்கு என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

தமிழர் தலைவர்: மடியில் கனம், வழியில் பயம்!

செய்தியாளர்: கந்து வட்டி தொடர்பாக கார்ட்டூன் வரைந்த பாலா கைது செய்யப்பட்டு இருக்கிறாரே?

தமிழர் தலைவர்: எல்லாவற்றிலும் மத்திய அரசைப் பின்பற்றுகிறவர்கள் இதிலும் பின்பற்றுகிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

பாலாமீது போடப்பட்டுள்ள வழக்கை விலக்கிக் கொண்டு அவரை விடுதலை செய்ய வேண்டும்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner