எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

அறந்தாங்கியில் செய்தியாளர்களுக்குத் தமிழர் தலைவர் அளித்த பேட்டி

அறந்தாங்கி, நவ.10 வருமான வரித்துறை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறதா என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில்  பெரியார் பிறந்தநாள் விழா கூட்டத்தில் (9.11.2017) கலந்து கொள்ள வருகை தந்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார்.

பேட்டியின் விவரம் வருமாறு:

செய்தியாளர்: ஜெயா தொலைக்காட்சி, சசிகலா உறவினர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகிறார்களே அதுபற்றி...?

தமிழர் தலைவர்: வருமான வரித்துறை அண்மைக்காலத்தில் இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய எதிர்க்கட்சித் தலைவர்கள், அரசியல் தலைவர்கள் இவர்களை நோக்கி செலுத்தப்படுகிறது என்பது எல்லோருக்கும் தெளிவாகத் தெரியும்.

திடீரென்று இப்பொழுது ஏன் சென்னை உள்பட பல இடங்களில் வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெறுகிறது என்கிற கேள்வி எழுகிறது. ஏற்கெனவே இதுபோல் நடந்தது - ஆர்.கே.நகர் தேர்தல் உள்பட பல்வேறு காலகட்டங்களிலும் நடந்தது.

மத்திய அரசு

கவனத்தில் கொள்ளவேண்டும்

ஏற்கெனவே கரூரில் ஆம்புலன்ஸ் மூலமாகப்  பணம் கொண்டு செல்லப்பட்டதும், அதேபோன்று மற்ற மற்ற இடங்களிலும் நடந்தது. இவைகளுக்கெல்லாம் என்ன முடிவு என்பது இதுவரை தெரியவில்லை.

யாரையாவது சங்கடப்படுத்த வேண்டும், அல்லது பரபரப்பு செய்தி வேண்டும், அதன் மூலம் சில காரியங்கள் செய்யவேண்டும் என்பதற்கு வருமான வரித்துறை ஆயுதமாகப் பயன்படுகிறதோ  என்கிற பரவலான ஒரு பேச்சு இருப்பதை மத்திய அரசு, கவனத்தில் கொள்ளவேண்டும். சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்கவேண்டும் என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி இருக்கிறது. அதுபோல, இப்பொழுது ஏன் இது நடைபெறுகிறது என்பது மிகவும் முக்கியம்.

இன்னுங்கேட்டால், ஆழமாக யோசித்துப் பார்த்தால், எம்.ஜி.ஆர். அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தைவிட்டு வெளியேறி அ.தி.மு.க.வை தொடங்கியதன் காரணம் - அடிப்படை வருமான வரித்துறை என்பது பழைய வரலாறு.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர் களிடம் கூறினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner