எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கருநாடகத்தில் நிறைவேற்றப்பட்ட மூடநம்பிக்கை ஒழிப்பு மசோதா

முற்போக்குச் சின்னமான ஒரு சமூக சீர்திருத்தச் சட்டமாகும்!

ஒவ்வொரு மாநிலத்திலும், மத்தியிலும்கூட இது இயற்றப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும்

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

முதல் தலித் அர்ச்சகர்  யேடு கிருஷ்ணனை வாயார, மனமார, கையார வாழ்த்துகிறோம்

கருநாடகத்தில் நிறைவேற்றப்பட்ட மூடநம்பிக்கை ஒழிப்பு மசோதா முற்போக்குச் சின்னமான ஒரு சமூக சீர்திருத்தச் சட்டமாகும். அதே போன்று ஒவ்வொரு மாநிலத்திலும் மட்டுமல்ல, மத்தியிலும் கூட கட்டாயம் இயற்றப்பட்டு செயல்படுத்தப்படவும் வேண்டுமல்லவா? என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

கருநாடகத்தில் உள்ள மாண்புமிகு சித்தராமய்யா அவர்களது தலைமையில் நடைபெறும் காங்கிரஸ் ஆட்சியில், ஒரு சிறப்பான சமூகப் புரட்சி - அமைதிப்புரட்சியாக நடைபெற்றுள்ளது.

மூடநம்பிக்கைகளுக்கு எதிரானவைகளை தடுத்து ஒழிக்கும் வகையில், மூடநம்பிக்கை ஒழிப்பு மசோதா ஒன்று, சில ஆண்டுகளாக கிடப்பில் இருந்தது - எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பின்மையால்; தற்போது பா.ஜ.க.வினர் உட்பட பல கட்சியினரின் ஆதரவோடு நேற்றுமுன்தினம் கருநாடகச் சட்டமன்றத்தில் நிறைவேறி சட்டமாகியுள்ளது.

சமூக சீர்திருத்தச் சட்டம்

இது ஒரு எடுத்துக்காட்டான முற்போக்குச் சின்னமான ஒரு சமூக சீர்திருத்தச் சட்டமாகும்.

பல்வேறு சாமியார்கள், பக்தி - மூடநம்பிக்கை வியாபாரம் செய்து படித்த பாமரர்கள் உட்பட அனைவரையும் 'முட்டாளாக்கி', சுரண்டிக் கொழுக்கும் அன்றாட அவலத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க இச்சட்டம் நிச்சயம் கை கொடுக்கும் என்பது உறுதி.

இதில் ஜோதிடம், வாஸ்து மோசடி இவைகளையும் இணைக்க வேண்டும் என்று பாட்டீல் போன்ற உறுப்பினர்கள் வைத்த கோரிக்கை ஏற்கப்படவில்லை என்பது வருத்தத்திற்குரியது.

அது மட்டுமல்ல, ஆண்களுக்கும், பெண்களுக்கும் உடலில் 'முத்திரை'  இடும் மத்வா பார்ப்பனர்களுக்கு இச்சட்டத்தில் விலக்கு கொடுத்திருப்பதும் ஏற்கத்தக்கது அல்ல.

என்றாலும் முதன் முதலில் கணக்குத் திறந்தது போன்ற இச்சட்டம் வரவேற்கத்தக்கதே!

அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கடமைகள்!

இந்திய அரசியல் சட்டப்படி நடப்போம் என்றுதான் குடியரசுத் தலைவர் முதல், முதல்வர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பிரமாணம் (கியீயீவீக்ஷீனீ) உறுதி எடுத்துக் கொள்கிறார்கள்.

அந்த அரசியல் சட்டத்தில், 'அடிப்படைக் கடமைகள்' (Fundamental Duties) Part IV-A 51AH என்ற சட்டப் பிரிவில் உள்ள ஒரு துணைப் பிரிவு கூறுவதென்ன?

"நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகன் (குடிமகளும் அடக்கமே) அறிவியல் மனப்பாங்கு, ஏன்? எதற்கென்று ஆராய்ந்து கேள்வி கேட்கும் உணர்வு, சீர்திருத்தம், மனிதாபிமானம் ஆகியவற்றை பரப்புதல் அடிப்படையான கடமையாகும்" என்று தெளிவாகத் திட்டவட்டமாகக் கூறுகிறதே!

(1) Scientific Temper
(2) Spirit of  Inquiry
(3) Reform
(4) Humanism

இவைகளைப் பரப்புதல் அடிப்படைக் கடமை என்று கூறும் நிலையில், இத்தகைய சட்டங்கள் இன்றியமையாதவை அல்லவா?

அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட வேண்டும்

ஒவ்வொரு மாநிலத்திலும் மட்டுமல்ல, மத்தியிலும்  இது போன்ற சட்டம் கட்டாயம் இயற்றப்பட்டு செயல்படுத்தப்படவும் வேண்டுமல்லவா?

பா.ஜ.க. ஆளும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உ.பி., அரியானா போன்ற பல மாநிலங்கள் இதற்கு நேர் எதிராக, மருத்துவமனையில் சேர்க்கப்படும் முன்னர் ஜோதிடர் சொல்லி நோய் தீர்க்கும் ஆருடம் - மகா மகா வெட்கக் கேடான அறிவியலுக்கு எதிரான அபத்தம் அல்லவா?

சாமியார்கள் ஆட்சி செய்தால் இத்தகைய 'விசித்திர சிகிச்சைகள்' என்ற விந்தைகள் தானே நடைபெறும்?

கேரளா - கருநாடகாவில் சமூகப் புரட்சி

கேரளாவில் - தாழ்த்தப்பட்டோர் அர்ச்சகர் என்ற சமூகப் புரட்சி,

கருநாடகத்தில் - மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்ட நிறைவேற்றம்

இவற்றிற்கெல்லாம் முன்னோடியான தமிழ்நாடு அரசு, யாகங்களிலும், ஜோதிடங்களிலும், பூமி பூஜைகளிலும் ஈடுபடும் கேலிக் கூத்தில் உள்ளது!

ஊழலுக்கு பக்தித் திரைப் போட்டு மூடி மறைக்க முழு முஸ்தீபுகள் அல்லவா அவை!

எனவே பகுத்தறிவும், அறிவியல் மனப்பாங்கும் உள்ள ஆட்சி மாற்றம் விரைவில் தேவை. திமுகவினால் மட்டுமே தற்போதுள்ள அரசியல் சூழலில் அதைத் தர முடியும்.  அந்த நாளும் வந்திடாதோ!

 

கி. வீரமணி
தலைவர்,  திராவிடர் கழகம்


சென்னை     
18-11-2017

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner