எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து தமிழர் தலைவர் ஆறுதல்

மத்திய - மாநில அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லவே இந்தச் சுற்றுப்பயணம்

பொதுமக்கள் - விவசாயிகளிடையே தமிழர் தலைவர் ஆசிரியர்

திருவாரூர், நவ.21 மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், மத்திய - மாநில அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லவே இந்தச் சுற்றுப்பயணம் என்று கூறினார்.

திருவாரூர் மற்றும் நாகை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளைச் சந்தித்து ஆறுதல் கூற இன்று (21.11.2017) திருவாரூருக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பொதுமக்கள், விவசாயிகளிடையே உரையாற்றினார்.

அவரது உரை வருமாறு:

கழகத்தின் துணைத் தலைவர் மற்றும் மாநில திராவிட; விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் மோகன், மாவட்ட திராவிடர் கழகத் தலைவர்கள், மண்டல தலைவர், அனைத்துப் பொறுப்பாளர்கள்  மற்றும் திராவிட முன்னேற்றக் கழக மற்றும் அனைத்து இயக்கங்களைச் சார்ந்த, இயக்கங்களுக்கு அப்பாற்பட்ட பெருமக்களே, பவுத்திரமாணிக்கம், இலவங்காடுகுடியைச் சார்ந்த அருமை நண்பர்களே, தோழர் காமராஜ் அவர்களே மற்றும் பெரியோர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கன மழை என்றால் பாதிக்கப்படுவது

திருவாரூர், நாகை, கடலூர் பகுதிகள்தான்

வடகிழக்குப் பருவ மழையானாலும் அல்லது வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஏற்பட்டாலும், முதலில் பாதிக்கப்படுகின்ற பகுதி என்று சொன்னால், அது திருவாரூர், நாகை, கடலூர் போன்ற பகுதிகள்தான்.

ஒவ்வொரு முறையும் சுனாமி உள்பட இந்த சங்கடங்களை நாம் அனுபவித்து வருகிறோம். பெய்கின்ற மழையை, அரசினர் சரியாகப் பயன்படுத்தி, ஆங்காங்கே தடுப்பணைகளை முன்கூட்டியே கட்டி, மழை வருவதற்கு முன்பே தூர்வாருகின்ற முயற்சியை செய்து, ஆங்காங்கே இருக்கின்ற குப்பைகளை மழை பெய்யாத காலத்தில் முறைப்படி அப்புறப்படுத்துவதை செய்யாமல், பின்னாளில், குடி மராமத்து என்று அவர்கள் ஆரம்பித்ததினுடைய விளைவு - பணம் செலவே தவிர, எண்ணெய் செலவே தவிர பிள்ளை பிழைக்கவில்லை என்கிறதாகத்தான் அமைகிறது.

இந்தப் பகுதிக்கு வரும்பொழுதெல்லாம், பவுத்திரமாணிக்கம் அண்ணன் சிவசங்கரன் அவர்களுடைய நினைவும், இலவங்காடுகுடி குஞ்சு அவர்களுடைய நினைவும், இன்னும் நம்முடைய இயக்கத் தோழர்களின் நினைவும், அதேபோல, திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்களும், நம் இயக்கத் தோழர்களும் ஒரு குடும்பமாக இருக்கக்கூடிய அந்த உணர்வினையும் பார்த்து நான் பூரிப்படைகிறேன்.

அரசின் கவனத்தை ஈர்க்கவேண்டும்

என்பதற்காகத்தான் இந்த சுற்றுப்பயணம்

இங்கு கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, காங்கிரசு இயக்கமாக இருந்தாலும், அல்லது வெவ்வேறு இயக்கங்களைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், தோழர்கள் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து இந்தப் பகுதிகள் வளருவதற்குப் பாடுபடுபவர்கள்.

எனவே, இப்படிப்பட்ட பகுதிகளில் உள்ளவர்கள், பாதிக்கப்பட்ட இந்த நிலையில், அதனைத் தெரிந்து, ஆறுதல் கூறவும், அரசின் கவனத்தை ஈர்க்கவேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் பயணத்தை நாங்கள் மேற்கொண்டிருக்கிறோம்.

வரிசையாக இந்தப் பகுதியிலும், அடுத்து சோழங்கநல்லூர் போன்ற பகுதிக்கும் சென்று நம்முடைய இயக்கத் தோழர்களை மட்டுமல்ல, கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர்களையும் சந்தித்து, விவசாயிகள் பயனடையவேண்டும் என்பதற்குரிய வாய்ப்புகளை செய்யவேண்டும். அவர்களுக்கு உதவி தேவைப்படுகிறது. மத்திய அரசை வற்புறுத்தி உதவிகளைப் பெறக்கூடிய வாய்ப்பினை தமிழக அரசு சரியாக செய்யவில்லை என்பதை நினைத்தால் வருத்தமேற்படுகிறது.

வருமுன் காப்பது என்பதுதான்

மிகவும் முக்கியமானது

பாதித்த விவசாயிகளுக்கு பேரிடர் நிதியிலிருந்து வழங்கவேண்டும் என்று கேட்டுப் பெறவேண்டும். ஆனால், வருமுன் காப்பது என்பதுதான் மிகவும் முக்கியமானது. ஆனால், அதனை அவர்கள் சரியாக செய்யவில்லை என்கிற சூழல் இருக்கிறது.

எனவேதான், நேரிடையாக மக்களை சந்திக்கவும், விவசாயிகளுடைய குறைகளைத் தெரிந்துகொண்டு, அரசாங்கத்தினுடைய கவனத்திற்கு அதைக் கொண்டு சென்று பரிகாரம் தேடுவதற்கும் - மழை பெய்யும்பொழுதெல்லாம் அதைப்பற்றி பேசுகிறார்கள், பிறகு அதனை மறந்துவிடுகிறார்கள். அடுத்த மழை எப்பொழுது வருகிறதோ, அதனால் பாதிப்பு ஏற்படுகிறதோ அப்பொழுதுதான் கவலைப்படுகிறோம் என்கிற நிலை இல்லாமல், முன்பே அதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்யவேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காகத்தான் இங்கே வந்திருக்கிறோம்.

இங்கே கூட ஒரு நண்பர் சொன்னார், இவ்வளவு மழை பெய்தாலும், குளம் நிரம்பவில்லை என்று. பெய்கின்ற மழையை  நாம் சேமிக்கின்ற அளவிற்கு - மழை சேமிப்புத் திட்டங்களும் இல்லாமல் சென்னை போன்ற பகுதிகளில் பெய்த மழை நீர் வீணாகக் கடலில் கலந்துள்ளது. கடலூரிலும் அதேபோன்று நிலைதான்.

மக்கள் குறைகளைப்பற்றி

கவலைப்படாத தமிழக அரசு

தடுப்பணைகள் மற்றவற்றை உரிய நேரத்தில் அரசாங்கம் திட்டமிட்டு செய்யவேண்டும். அதற்காக அரசு செயல்படவேண்டும். ஆனால், இப்பொழுது இருக்கிற அரசு - எந்த அணி? யார் பக்கம்? என்பதிலேயே அவர்களுடைய கவனம் இருக்கிறதே தவிர, மக்களுடைய குறைபாடுகள் என்ன என்பதுபற்றி அதிகம் கவலைப்படாதவர்களாகவே இன்றைய அரசாங்கத்தினர் இருப்பதை நினைத்தால், வேதனைக்கும், வெட்கத்திற்கும் உரியது.

மத்திய - மாநில அரசின் கவனத்திற்கு அதைக் கொண்டு செலுத்துவதற்கு...

ஆகவே, அந்த நிலை மாறவேண்டும் என்பதை எங்களைப் போன்ற அரசியலுக்கு அப்பாற்பட்ட, வாக்கு வங்கியைப்பற்றி கவலைப்படாது இருக்கக் கூடியவர்கள், பொதுநல உணர்வோடு இருக்கக்கூடியவர்கள் இதனை செய்து கொண்டிருக்கின்றோம். ஆகவே, எங்களால் முடிந்த அளவிற்கு, மத்திய - மாநில அரசின் கவனத்திற்கு அதைக் கொண்டு செலுத்துவதற்கு, இந்த சுற்றுப்பயணத்தைப் பயன்படுத்துவோம் என்று கூறிக்கொண்டு, உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து முடிக்கிறேன்.

வாழ்க, பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner