எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மதம் மாறித் திருமணம் செய்துகொள்ள அகிலா - ஷபின்ஜகான் ஆகியோருக்கு சட்டப்படி உரிமையுண்டு - அதைத் தடுக்க யாருக்கும் உரிமையில்லை

அதிகாரம் கையில் இருக்கும் காரணத்தால் காவிகள் ஆட்டம் போடவேண்டாம் - உயிர்ப்பலிகளை அனுமதிக்க முடியாது!

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை

மதம் மாறித் திருமணம் செய்துகொள்வதற்குச் சட்டப்படி உரிமை உண்டு என்கிறபோது, அதற்கு முட்டுக் கட்டை போடுவதோ, தலையிட்டுப் பிரச்சினைகளை ஏற்படுத்தவோ யாருக்கும் உரிமை கிடையாது. ‘லவ் ஜிகாத்’ என்று கூறி, உயிர்ப்பலிகளை ஏற்படுத்தக் கூடாது. ‘காதல் ஒவ்வாமையிலிருந்து’ காவிகள் மாறட்டும் - என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:

கேரளத்தில் அகிலா என்ற 25 வயதுள்ள பெண், சில ஆண்டுகளுக்குமுன்பே (2013 இல் என்கிறார்கள்) மதம் மாறி அகிலா என்ற தன் பெயரை  ‘ஹாதியா’ என்று மாற்றிக்கொண்டு, பிறகு தான் காதலித்த ஒரு இஸ்லாமியரை (ஷபின் ஜகான்) திருமணம் செய்துகொண்டார்.

அவரது பெற்றோர்கள் தனது மகளை ‘மூளைச்சாயம்‘ ஏற்றி (‘மூளைச்சலவை’ என்பது சரியான சொல் அல்ல) மனம் மாற்றி, மதம் மாற்றி இப்படிச் செய்துவிட்டார்கள் என்று கூறினர் - கூவினர்.

கேரள உயர்நீதிமன்றத்தின்

விரும்பத்தகாத தீர்ப்பு

‘லவ் ஜிகாத்’ நாட்டில் நடைபெறுவதை அனுமதிக்கவே மாட்டோம் என்கிற இந்துக் காவிக் கட்சியினர் இதை  NIA என்ற National Investigation Agency  மூலம் விசாரணை நடத்தி, இப்படி பலருக்கும் மூளைச்சாயம் ஏற்றி, வெளி(முஸ்லிம்) நாடுகளுக்கு அனுப்பும் திட்டம் ஒன்று நடைபெறுகிறது என்ற புகாரை ஆய்வு செய்து வழக்கில் இதனையும் இணைத்தனர்!

கேரள உயர்நீதிமன்றம் இந்த ஹாதியா காதல் திருமணத்தை ஏற்காது, பெற்றோரின் இசைவு பெறுமாறு அறிவுறுத்தியது; ஆனால், அதில் பயன் ஏற்படவில்லை. ஆகவே, இப்பெண், பெற்றோர்களிடம்தான் சேர்ந்து வாழவேண்டும் என்று அவரது தனி மனித சுதந்திர உரிமைகளைப் பறித்து, இப்படி ஒரு விநோத, விசித்திர பிற்போக்குத் தீர்ப்பினை அளித்தது! இப்பெண் தனது படிப்பான ஹோமியோபதி படிப்பைத் தொடரவும், அவரின் பெற்றோர்கள் அனுமதிக்காத நிலை தொடர்ந்தது!

இந்நிலையில், அப்பெண்ணின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு வந்தது!

உச்சநீதிமன்றத்தின் சிறந்த தீர்ப்பு

அதை விசாரித்த தலைமை நீதிபதியும், மற்றொரு நீதிபதியும் தங்கள் நீதித்துறைப் பணிக்காலத்தில் இப்படி ஒரு விசித்திர வழக்கைச் சந்தித்ததே இல்லை என்று வியப்புத் தெரிவித்து, அப்பெண்ணின் விருப்பம் அறிய அவரிடமே பல வினாக்களைக் கேட்டு விடை - விளக்கம் பெற்றனர்.

அதற்கு அப்பெண் ஹாதியா, சேலத்தில் உள்ள கல்லூரியில் ஹோமியோபதி படிப்பை, தான் தொடரவிருப்பதாகவும், தனக்கு அரசு உதவி ஏதும் அளிக்கத் தேவையில்லை; அதை எனது கணவர் கவனித்துக் கொள்வார் என்றும் பதிலளித்தார். உச்சநீதிமன்றம் அவருக்குப் போதிய பாதுகாப்பினைச் செய்து தர சேலம் கல்லூரித் தலைவர், காவல்துறையினருக்குக் கட்டளை இட்டுள்ளது!

பிறகு அவர் சேலத்திற்குச் சென்று படிக்கத் தொடங்கியுள்ளார்!

ஏதோ ஒரு திரைக்கதை போல உள்ள இந்த நிகழ்வு ஏன் ஏற்படவேண்டும்?

ஆட்சி அதிகாரம் தங்கள் கைகளில் இருக்கும் காரணத்தால்....

இந்து மத வெறித்தனம், தங்கள் கையில் ஆட்சியிருக்கிறது என்ற ஒரு காரணத்திற்காக உ.பி. மற்றும் பா.ஜ.க. ஆளும் மாநிலங் களில் காதலர்கள் (வெளிநாட்டவர் உள்பட) பலரும் நடமாட முடியாத அளவுக்குத் தாக்குதல் தொடுப்பது, சட்டத்தைக் கையில் எடுத்துக்கொள்வது, காவல்துறையே இதற்குத் துணைபோவது, நீதிமன்றங்கள் ஏதோ கட்டப் பஞ்சாயத்து போன்று அதிரடி முடிவுகளைக் கூறுவதெல்லாம், எவ்வகையில் நியாயம்?

தந்தை பெரியார் மண்ணான தமிழ்நாட்டிலே, தருமபுரியில் சில ஆண்டுகளுக்குமுன்பு நடைபெற்ற திவ்யா - தமிழரசன் காதல் திருமணம் - இருவேறு ஜாதிகளிடையே என்பதால் ஏற்பட்ட கலவரம், மரணத்தில் முடிந்ததே! (நீதி விசாரணை இன்னமும் முடியவில்லை).

கவுசல்யாவின் கர்ச்சனை!

25.11.2017 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற ஜாதி - தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் பேசிய கவுசல்யாவின் உரை உணர்வுகளைக் கொப்பளிக்கச் செய்தது. உடுமலைப் பேட்டையில் அவரின் காதலனை தன் கண்ணெதிரேயே கொலை செய்து, தன்னைப் படுகாயப்படுத்திய நிலையில், எப்படியோ உயிர் பிழைத்தவர் அவர். சென்னை மாநாட்டில் வீரமுழக்கமிட்ட அவரது உரை நெஞ்சைப் பிழிந்து கண்களைக் குளமாக்குவதாக இருந்ததே! ஜாதி வெறியின் கோரத் தாண்ட வத்தின் முதுகெலும்பை முறியடிப்பதே தன் வாழ்வின் லட்சியம். தந்தை பெரியாரின் மகள் நான் என்று வீர முழக்கமிட்டாரே!

இவற்றையெல்லாம் எவராலும் நியாயப்படுத்தவே முடியாது! முடியவே முடியாது!!

சிறப்பு - தனித் திருமணச் சட்டம்!

மத மாற்றம் - அரசியல் சட்டப்படி உள்ள உரிமை - வயது வந்தவருக்குத் திருமண உரிமை சட்டப்படி உள்ள உரிமை!

வெவ்வேறு மதங்களிலிருப்பவர்கூட திருமணம் செய்து பதிவு செய்துகொள்ள தனித் திருமணச் சட்டம் (Special Marriage Act) என்று உள்ளதே!

இத்தனை உரிமைகளை மதவெறியும், ஜாதி வெறியும் தத்தம் காலில் போட்டு மிதிப்பதை அனுமதிக்கலாமா?

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளில் எத்தனையோ தீர்ப்புகளில் நமக்குப் பலவற்றில் மாறுபட்ட கருத்துண்டு - என்றாலும், இத்தீர்ப்பு மனித உரிமைகளுக்குப் பாதுகாப்பு அரண் அளித்த சிறந்த தீர்ப்பு என்பதால், அதற்கு வழிவகை செய்து இந்த வரலாற்றுத் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளைப் பாராட்டி வரவேற்கிறோம் - பெண்ணுரிமையைக் காத்த நல்ல தீர்ப்பு!

பினராய் விஜயன் அவர்கள் தலைமையில் மார்க்சிஸ்ட் அரசு கேரளத்தில் - இதில் எடுத்த நிலைப்பாடும் வரவேற்கத்தக்கது!

காதல் ஒவ்வாமையிலிருந்து

காவிகள் மாறட்டும்!

காவிகளின் ‘காதல் திருமண ஒவ்வாமை’ இதற்குப் பிறகாவது மாறாட்டும்! இன்றேல் நாடு இதற்காக எத்தனையோ உயிர்ப் பலிகளைக் கொடுக்கும் அவலம், பேரழிப்பு தவிர்க்க இயலாததாகி விடுமே!

 

கி.வீரமணி
தலைவர்,      திராவிடர் கழகம்.

சென்னை
29 .11.2017

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner